Monday, March 14, 2011

கேள்வி பதில் தொகுப்பு - 36

அன்புச் சகோதரருக்கு, எனக்குள்ள சந்தேகம், இறைவன் குர்ஆனில்'சூரியன் உதயமானதிலிருந்து இரவு வரும் வரை தொழுகையை நிலைநிறுத்துங்கள். இன்னும் பஜ்ர் தொழுகையையும். பஜ்ர் தொழுகை சான்றுள்ளதாக உள்ளது.  (அல்குர்ஆன் 17:78).

மேலும் குர்ஆனில் ஏதாவது ஆயத்தில் மூன்று வேளை தொழுகையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதா..? ஆம் என்றால் நபி(ஸல்) ஏன் ஐந்து வேளை தொழுது காண்பித்தார்கள்? மூன்று வேளைத் தொழுகைப் பற்றி ஏதாவது ஹதீஸ்கள் இருக்கின்றனவா? அல்லாஹ் எதை செய்ய சொன்னானோ அதை நபி(ஸல்) செய்திருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
Name: ansar
email: hssnansar@...
Location: sri lanka
Subject: Question

அல்லாஹ் உங்கள் ஆர்வத்தை அதிகப்படுத்தட்டும். குர்ஆனில் மூன்று வேளைத் தொழுகைப் பற்றி எங்கும் கூறப்படவில்லை. ஒரு வசனத்தை தவறாக புரிந்துக் கொள்பவர்கள் 'மூன்று வேளைத் தொழுகைத்தான் குர்ஆனில் உள்ளது என்று கூறி வருகிறார்கள். குர்ஆன் வசனங்களை ஆழமாக சிந்தித்தால் - அதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களை பார்த்தால் தொழுகை ஐந்து வேளைத் தான் என்பது தெளிவாகி விடும். எனவே விரிவாக அறிந்துக கொள்வோம்.

முதலில் மூன்று வேளைத் தொழுகை என்பதற்கு ஆதாரமாக எடுத்துவைக்கப்படும் வசனத்தைப் பார்ப்போம்.

وَأَقِمِ الصَّلاَةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّـيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ

பகலின் இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும். (அல்குர்ஆன் 11:114)

இந்த வசனத்தில் பகலின் இரு முனைகள் என்பதை இரண்டுத் தொழுகை என்றும் இரவின் பகுதி என்பது ஒருத் தொழுகை என்றும் கூறுகிறார்கள்.
முற்காலத்து அறிஞர்களும் இந்த வசனத்திற்கு சில விளக்கங்களை முன் வைத்துள்ளனர். முஜாஹித் இந்த வசனத்தின் பகலின் முனைகள் என்பது லுஹர் - அஸர் என்கிறார்.

பகலின் தொழுகை என்பதை ளுஹர் - அஸர் என்று முடிவெடுத்தால் மற்ற மூன்றுத் தொழுகைகளும் இரவில் தொழப்படும் பர்ளுவாகின்றது. பர்ளுத் தொழுகையில் மூன்று இரவில் அடங்குமா... என்றக் கேள்வி எழுகின்றது.

நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள 11:114 வது வசனத்தில் பகலின் இரு முனைகள் என்பதைத் தொடர்ந்து 'இரவின் பகுதிகள்' என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபு மொழியில் ஒருமை, இருமை, பன்மை என்ற மூன்றுத் தன்மைகள் உண்டு. இரவில் தொழப்படும் தொழுகை இரண்டாக
இருந்தால் 'இரவின் பகுதிகள்' என்ற பன்மையான வார்த்தைப் பயன்படுத்தப்படாது. இரண்டுக்கு மேற்பட்ட தொழுகைகளை குறிப்பதாக  இருந்தால் தான் அந்த வார்த்தைப் பயன்படுத்தப்படும்.

எனவே பகலின் இரு ஓரங்கள் என்பது இரண்டுத் தொழுகைகளையும் இரவின் பகுதிகள் என்பது மூன்று தொழுகைகளையும் குறிப்பதால் நபி(ஸல்) தொழுதுக் காட்டிய ஐந்து வேளைத் தொழுகை என்பது குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்தத் தொழுகைத்தான்.

பொதுவாகவே இஷா தொழுகையை மட்டுமே நாம் இரவுத் தொழுகை என்று கருதுகிறோம். மஃரிபு தொழுகையையோ சுப்ஹ் தொழுகையையோ நாம் இரவுத் தொழுகை என்று கருதுவதில்லை என்பதால் இது போன்ற ஐயங்கள் தோன்றுகின்றன.

குர்ஆனுக்கு குர்ஆனே விளக்கமாக பாடம் நடத்தும் என்ற அடிப்படையில் இரவு எது என்பதை கவனித்தால்,

حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّواْ الصِّيَامَ إِلَى الَّليْلِ

இது நோன்பைப் பற்றி விளக்கும் வசனம்.

ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். (அல்குர்ஆன் 2:187)

இதில் சுப்ஹு நேரத்தை இரவின் கடைசிப் பகுதியாக இறைவன் காட்டுகிறான். அதேப் போன்று இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் என்ற  கட்டளையும் வந்துள்ளது.

மஃரிபுக்கு நோன்பு முடிகின்றது என்பதிலிருந்து மஃரிபு இரவின் பகுதியாகி விடுகின்றது. அதேப் போன்று சுப்ஹும் இரவின் இறுதிப் பகுதியாகி விடுகின்றது. சூரியன் உதிப்பதற்கு முன் - அதற்கான அறிகுறிக்கு முன்பே சுப்ஹுத் தொழுகையின் நேரம் வந்து விடுகின்றது.

இரவின் துவக்கத்தில் மஃரிபுத் தொழுகை, பிறகு இஷாத் தொழுகை, பிறகு சுப்ஹ்த் தொழுகை என்று மூன்றுத் தொழுகைகள் இரவில் இருப்பதால் 'இரவின் பகுதிகள்' என்று பன்மையில் 11:114 வசனம் கூறுகின்றது. பகலின் ஓரங்கள் என்பது ளுஹர் மற்றும் அஸர் தொழுகைகளைக் குறிக்கின்றது. எனவே எல்லா ஹதீஸ்களையும் புறக்கணிக்க முற்படுவோர் குர்ஆன் பற்றிய ஆழ்ந்த பார்வை இல்லாமலேயே தங்கள் கொள்கையில் நிற்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

**************************

கேள்வி: நாம் (ஜம்மு) தொழுகையை நம் வசதிக்கேற்ப எளிதாக்கிக்கொள்ள சேர்த்து தொழலாமா? ஸஹிஹ் ஹதீஸ் தங்கள் பார்வைக்கு...

நூல் மாலிக்... முவத்தா வால்யும் vol 1, பக்கம் 161, இப்னு அப்பாஸ் கூறியதாவது... நபி (ஸல்) அவர்கள் லுஹர், அஸர் சேர்த்து தொழுதுள்ளார்கள். மற்றும் மக்ரிப், இஷா சேர்த்து தொழுதுள்ளார்கள் எந்த காரணமும் இல்லாமல்.

ஸஹிஹ் முஸ்லிமில் கூட்டுத்தொழுகை என்ற தலைப்பின்கீழ்...இப்னு அப்பாஸ் அறிவிப்பதாவது... எந்த கூட்டதாருடைய (எதிரி) பயமும் இல்லாத நேரத்திலும், பிரயாணம் இல்லாத நேரத்திலும் லுஹர், அஸர் சேர்த்து தொழுதுள்ளார்கள். மற்றும் மக்ரிப், இஷா சேர்த்து தொழுதுள்ளார்கள். (சஹிஹ் முஸ்லிமில் (ஆங்கில மொழியாக்கம்) பாகம் CCL, Tradition #1515.
இதைப்பற்றி தங்களுடைய விளக்கம் தேவை.

hssnansar@...

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுப் போன்று ஆதாரப்பூர்வமான செய்திகள் பல நூல்களில் அறிவிக்கப்பட்டுள்ளது உண்மைதான். மேலும் நூல்கள் அஹ்மத் 3152 திர்மிதி 172 அபுதாவூத் 1025.

جمع رسول الله ‏ ‏ صلى الله عليه وسلم ‏ ‏ بين الظهر والعصر والمغرب والعشاء في ‏ ‏ المدينة ‏ ‏ من غير خوف ولا مطر

நம்முடைய அனைத்துத் தொழுகைகளையும் தீர்மானிப்பதற்கு இந்த ஒரு கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நபி(ஸல்) காலாகாலத்துக்கும் இப்படி சேர்த்து (ஜம்வு) தொழுதுக் கொண்டிருக்கவில்லை. 'பயமோ மழையோ இல்லாத நேரத்தில் நபி(ஸல்) அவ்வாறு செய்துக் காட்டியுள்ளார்கள் என்பதிலிருந்து சில அவசரங்களுக்கு அவ்வாறு செய்துக்கொள்ளலாம் என்றுதான் விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக இந்த ஒரு செய்தியை மட்டும் ஆதாரமாகக் கொண்டு எப்போதும் அவ்வாறு செய்துக் கொள்ளலாம் எனறு முடிவெடுத்தால்,

إنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

இந்த வசனத்துக்கு விளக்கமாக இநைத்தூதவர்கள் தம்முடைய வாழ்நாள் முழுவதும் தொழுகையின் நேரங்களை விளக்கி அதற்குரிய நேரங்களில் தொழுதுக் காட்டியுள்ளார்கள்.

எனவே உள்ளுரில் இருக்கக் கூடியவர்கள் தொழுகையை அதற்குரிய நேரங்களில் தான் தொழ வேண்டும். தவிர்க்க முடியாத சில நேரங்களில் சேர்த்து தொழுதால் அதை கூடாதென்று சொல்ல முடியாது. ஏனெனில் அதற்கும் நபியிடம் வழிகாட்டல் இருக்கின்றது.

பிரயாணிகளாக இருந்தால் அவர்கள் எப்பொழுதும் சேர்த்து குறைத்துத் தொழுதுக் கொள்ளலாம்.

 

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger