Sunday, March 20, 2011

இஸ்லாமிய திருமணம்

உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்குதிருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)

இந்த வசனத்தில் இறைவன் 'திருமணம் செய்து வையுங்கள்' என்ற ஏவலை பயன்படுத்தியுள்ளதிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு பெற்றோர்களை சார்ந்தது என்பது விளங்குகிறது. குழந்தைகளை நல்லவிதமாக வளர்ப்பதும் அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் துணைகளை அமைத்துக் கொடுப்பதும் நல்லப் பெற்றோர்களின் அடையாளமாகும். திருமண வயதை அடைந்து விட்டப் பிறகும் ஏழ்மையைக் காரணம் காட்டி திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாம் எனற வழிகாட்டலும் இங்கு கிடைத்துள்ளது.

திருமணம் எனது வழிமுறை ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி)

பெற்றோர்களுக்கு,

மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.அபூஹூரைரா (ரலி), திர்மிதி.

இந்த ஹதீஸை பெற்றோர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான திருமணங்களில் மணமகனின் ஒருக்கத்தைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் குடும்ப உறவு - குடும்ப பாரம்பரியம் - சொத்து போன்ற இரண்டாம்பட்ச தகுதிகள் முன்னிலைப்படுத்தப்பட்டு திருமணம் முடிக்கப்படுகிறது. ஒழுக்கமற்ற பையனால் பெண்ணின் வாழ்க்ககை சீரழிந்து விட்டால் என்ன செய்வது என்றக் கவலையெல்லாம் ஏற்படுவதேயில்லை. பையனின் ஒழுங்கீனங்களைப் பற்றி யாராவது சுட்டிக் காட்டினால் கூட 'எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு சரியாகிவிடும்' என்ற பதிலே பெண்ணைப் பெற்றோர்களால் (குறிப்பாக பெண்களால்) முன்வைக்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு அவன் திருந்தா விட்டால் பெண்ணின் நிலை என்னாவது? என்ற கேள்வியெல்லாம் இங்கு எழுவதேயில்லை.

அதே சமயம், மார்க்க அறிவும், சிறந்த குணமும் கொண்ட ஒருவன் அவனாக முன் வந்து உங்கள் பெண்ணைக் கட்டிக் கொள்கிறேன் என்று கேட்டால் ஏதோ தவறு நடந்து விட்டது போன்று அங்கு பிரச்சனைகள் வெடிக்கும். இதை இன்றைய நடைமுறையில் கண்டு வருகிறோம். ஆனால் மேற்கண்ட நபிமொழி 'நல்லொழுக்கம் உள்ளவர் பெண் கேட்டால் கொடுங்கள்' என்ற அறிவுரையை முன் மொழிகிறது.

மணமகனுக்கு,

எந்தப் பெண் கிடைத்தாலும் கட்டிக் கொள்ளலாம் என்ற இலக்கற்ற நிலையில் திருமணத்திற்கு தயாராகி விடாதீர்கள். உங்களுக்கு வாழ்க்த்துணையாக வருபவள் உங்களில் பாதியாக வாழப்போகிறவள் என்பதை கவனத்தில் வையுங்கள். திருமணத்திற்கு முன் மனைவியாக வருபவள் யார்? என்பதை கவனியுங்கள்.

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)

கணவன் - மனைவியின் உறவை இதைவிட ரத்தினசுருக்கமாகவும், அழகாகவும், அழுத்தமாகவும் வேறு யாரும் சொல்லவே முடியாது என்ற அளவிற்கு இறைவன் 'நீங்கள் அவர்களுக்கும் அவர்கள் உங்களுக்குமாக நீங்கள் ஒருவருக்கொருவர் ஆடையாவீர்கள்' என்று விளக்குகிறான். நம் உடம்புடன் ஒட்டி உறவாடும் உடையை தேர்ந்தெடுப்பதற்கு நாம் எவ்வளவு கவனம் செலுத்துகின்றோமோ அதை விட கூடுதல் கவனம், வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது இருக்க வேண்டும்.

அந்த வகையில் வாழ்க்கைத் துணையாக வருபவள் யாராக இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் விளக்குகிறது.

ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் போன்ற நபித்தோழர்கள், புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா

மனதிற்கு பிடித்த உடை உடலுக்கு சுகமளிப்பது போன்று மார்க்கப் பற்றுள்ளப் பெண் வாழ்க்கைக்கு சுமகளிப்பாள்.மார்க்கப் பற்று என்றவுடன் எல்லா வகையிலும் நூறு சதவிகிதம் மார்க்கப்பற்று உள்ளவளாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிடக் கூடாது. முதலாவதாக ஷிர்க் எனும் கொடிய இணைவைத்தல் என்ற மாபாவத்திலிருந்து அவள் விடுபட்டிருக்க வேண்டும்.

இணை வைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுடைய ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். (அல் குர்ஆன் 2:221)

அழகு - அந்தஸ்து என்று அனைத்தும் இருந்தும் ஓரிறைக் கொள்கையே வாழ்க்கை என்ற உறுதிப்பாடு மட்டும் இல்லாமல் போய் விட்டால் முஸ்லிமான ஒரு ஆண்மகனுக்கு துணையாக வர அவள் தகுதியற்றவள் என்று இறைவன் பகிரங்கமாகவே கூறியுள்ளதால் முஸ்லிமல்லாத பெண்களிலிருந்து முஸ்லிம் என்ற பெயர் வைத்துக் கொண்டு இறை நம்பிக்கையில் கலப்படம் செய்து தர்கா போன்ற வழிபாடுகளை நடத்தும் பெண்கள் உட்பட இந்த வகையில் அடங்கி விடுவார்கள். அத்தகையப் பெண்களை புறந்தள்ளி வைக்கத்தான் வேண்டும்.

அன்பு செலுத்தும்; அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களை மணம் முடித்துக் கொள்ளுங்கள். உலக மக்களுக்கு மத்தியில் (நீங்கள் அதிகமாக இருப்பது கண்டு) நான் மகிழ்வேன் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மஃகலு பின் யஸார் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி), அபூதாவூத், நஸயீ, முஸ்னத் அஹ்மத்.

இவ்வுலகம் இன்பகரமானது, உலக இன்பங்களில் மிகவும் சிறப்பானது நல்ல மனைவியை அடைவதாகும் என்பது நபிமொழி. முஸ்லிம்.

மணமக்கள் திருமணத்திற்கு முன் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த இறைத்தூதர் (ஸல்), நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரைப்பகன்றார்கள். நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.

இந்த சமுதாயத்தில் மூடத்தனமாக நீடித்து வரும் ஒரு கேவலத்தை இந்த ஹதீஸ் மறுக்கிறது. திருமண பேச்சு ஒரு குடும்பத்தில் துவங்கி தன் மகனுக்கு பெண் பார்க்க பெற்றோர்கள் துவங்கி விட்டால் பெற்றோர்கள் - குடும்பத்தார் உடன் பிறந்தவர்கள் (சில இடங்களில் மாமன் - மச்சான்கள் உட்பட) அந்தப் பெண்ணைப் பார்த்து விடுவார்கள். மாப்பிள்ளை மட்டும் திருமணம் முடிந்தப் பிறகே அந்தப் பெண்ணைப் பார்ப்பான். அவளும் கூட அப்படித்தான். இந்த எதிர்மறையான கலாச்சாரம் எங்கிருந்துதான் இந்த சமுதாயத்தில் புகுந்தது என்றுத் தெரியவில்லை. பிற அனைத்து சமூகங்களிலும் திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். பிடித்திருக்கா இல்லையா என்பதை முடிவு செய்கிறார்கள். ஆனால் இங்கு நேர்மாற்றமாக நடக்கிறது. இதற்கு இஸ்லாமிய முத்திரை வேறு குத்தப்படுகிறது. தனக்கு வரப்போகும் துணைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அதை நேரில் பார்ப்பதன் மூலமே உறுதிப்படுத்த முடியும். இதற்கு தடைப்போடுவது எந்த வகையிலும் நியாயமில்லை.

நபி(ஸல்) அவர்களின் செய்தியில் நபி(ஸல்) அவர்களாகவே முந்திக் 'பெண்ணைப் பார்த்துக் கொள்ளும்' என்கிறார்கள். பிரிதொரு நபித்தோழர் விஷயத்திலும் இதையே வலியுறுத்தியுள்ளார்கள்.ஒரு நபித்தோழர் நபி; (ஸல்) அவர்களிடம் வந்து, ஒரு மதீனத்து பெண்ணை மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் நீர் அப்பெண்ணை நேரில் கண்டீரா? எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் சென்று பார்த்துக் கொள்வீராக! எனக் கூறினார்கள். அபூஹூரைரா (ரலி) முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.

திருமண வாழ்க்கை என்பது சந்தை வாழ்க்கையல்ல கூடி களைவதற்கு. அது தலைமுறைகளை உருவாக்கக் கூடிய ஒரு ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தத்தில் மனதிற்கு பிடிக்காத பெண்ணோ - ஆணோ கையொப்பமிட்டு இணையும் போது வாழ்க்கை கசந்துப் போகும். சந்தோஷமாக இருப்பதற்காகத்தான் திருமண வாழ்க்கை. அங்கு மனம் பொருந்தியவர்கள் இணைவதுதான் முறை. அதற்கு வழி வகுக்கத்தான் 'பெண்ணைப் பார்த்துக் கொள்' என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். எனவே திருமணத்திற்கு முன் மணமுடிக்கப போகிறவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்ணின் சம்மதம்.

இறை நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்குக் கூடாது.(அல்குர்ஆன் 4:19)

விதவை, விவாக முறிவுப் பெற்ற பெண்களை அவர்களது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள்,ரூ கன்னிப் பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணத்தால் தன் எண்ணத்தைக்) தெளிவாகக் கூற வெட்கப்படுவாளே! என கேட்கப்பட்டது அதற்கு நபி 'அவளது மௌனமே சம்மதமாகும்' என்றார்கள்.(ஆயிஷா, இப்னு அப்பாஸ், அபூஹூரைரா (ரலி அன்ஹூம்), புகாரி, முஸ்லிம்திருமணத்திற்கு பெண்களின் முழு மன சம்மதம் பெறுவது அவசியமாகும்.

மஹர் (அன்பளிப்பான மணக்கொடை)

நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4)

மணம் முடிக்கும் மணப்பெண்ணுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படி கொடுத்து விடுங்கள்(அல்குர்ஆன் 4:24,25)

மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள்.(அல்குர்ஆன் 4:20)

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழர் பேரித்தம் பழமளவு தங்கத்தை மஹராகக் கொடுத்து ஒரு மதீனத்து பெண்ணை மண முடித்தார்கள்.; பின் மாலிக் (ரலி). புகாரி, முஸ்லிம்,

ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின் சுருக்கம்)ஹல் பின் ஸஅத் (ரலி) புகாரி, முஸ்லிம்.

ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த நபி (ஸல்) அவர்கள்'உனக்கு எதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னின்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும் என்றார்கள்.ஸஹல் பின் ஸஅத் (ரலி) புகாரி, முஸ்லிம்.

நிக்காஹ் - குத்பா

இன்னல் ஹம்த லில்லாஹி நஸ்தயீனுஹூ வநஸ்தஃ பிருஹூ வனவூது பில்லாஹி மின்ஷூருரி, அன்புஸினா, வமின் மன்யஹ்தில்லாஹூ ஃபலாயுழ்லில் ஃபலா ஹாதியலஹ வ அஷ்ஹது அ;லாயிலாஹ இல்லல்;;லாஹூ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹ யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்தகுல்லாஹ் ஹக்க துகாதிஹி வலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன், யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்தகுல்லாஹ் ஹல்லதீ தஸா அலூன பிஹி வர்அர்ஹாம் இன்னல்லாஹ கான அலைக்கும் ரகீபா: யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் வகூலூ கவ்லன், ஸதீதா யுஸ்ஸிஹ் லகும் அஃமாலகும் வயஃபிர் லகும் துனூபக்கும் வமன்யுதியில்லாஹ வரசூலஹூ ஃபகத் ஃபான் அளீமா என்று
நபி (ஸல்) கற்றுத் தந்ததாக இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதி, அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

குத்பாவின் பொருள் :

நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!

அவனிடமே உதவி தேடுகிறோம். அவனிடமே பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை
வழிகெடுப்போன் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்து விட்டானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் யாரும் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை
என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
நம்பிக்கையாளர்களே! இறைவனை முழுமையாக அஞ்சுங்கள். நீங்கள் முஸ்லிம்களாகவன்றி மரணிக்க வேண்டாம். (அல்குர்ஆன் 3:102)

விசுவாசிகளே!நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்: அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறீர்கள் மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும்
(ஆதரியுங்கள்) - நிச்சயமாக் அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

நம்பிக்கையாளர்களே!சொல்வதை தெளிவாகவும் தீர்கமாகவும் சொல்லுங்கள். அல்லாஹ் உங்கள் வணக்கங்களை சீர்செய்வான், உங்களது பாவங்களை மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுபட்டு நடக்கிறார்களோ நிச்சயமாக அவர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டார்கள். (அல்குர்ஆன் 33: 70,71)
பெண்ணுக்கு பாதுகாவலர் - உரிமையுடையவர்.வலியின்றி (எந்தப் பெண்ணுக்கும்) திருமணமில்லை - என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி அபூ மூஸா, அபூ ஹூரைரா, இப்னுஅப்பாஸ், அனஸ், ஆய்ஷா போன்ற நபித்தோழர்கள் மூலம்அறிவிக்கப்பட்டுள்ளது. (திர்மிதி)

பெண்ணைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் அந்தப் பெண்ணிற்கு வலியாவார்கள். அவர்களின்றி ஒரு பெண் திருமணம் செய்ய முடியாது.

திருமண சாட்சிகள்.

சாட்சிகளின்றி தானாக திருமணம் செய்யும் பெண்கள் விபச்சாரிகளாவர் - என்று இறைத் தூதர் எச்சரித்துள்ளார்கள். அபூ ஹூரைரா, இப்னு அப்பாஸ், இம்ரான் இப்னு ஹூஸைன், இப்னு அப்பாஸ் போன்ற நபித்தோழர்கள் இதை அறிவிக்கிறார்கள்.(திர்மிதி)

சாட்சியம் என்பது பின்னர் ஏற்படும் பிரச்சனைகளை எதிர் கொண்டு அதற்கு தீர்வு சொல்லும் முக்கியத்துவம் வாய்ந்தது.

திருமண விருந்து.

திருமணத்தின் போது பெண் வீட்டாருக்கென்று தனிப்பட்ட முறையில் எத்தகைய செலவும் இல்லை. செலவென்று வரும் அனைத்தும் மணமகனையே சாரும். அந்த வகையில் மணமகன் திருமண விருந்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்த பின் கொடுத்தது போன்ற சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென நபி(ஸல்) அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள். அந்த விருந்தில் ரொட்டியும், இறைச்சியும் வழங்கப்பட்டது. அனஸ்பின் மாலிக் (ரலி) புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) தாம் செய்த அனைத்து திருமணத்திற்கும் விருந்தளித்துள்ளார்கள். அவற்றில் பெரிய விருந்து ஜைனப்(ரலி)யை திருமணம் செய்யும் போது கொடுத்ததுதான். வேறெந்த திருமணத்திற்கும் ஆடு அறுத்து விருந்து வைக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒரு சிலவற்றிக்கு இரு முத்துக்கள் அளவுள்ள பார்லியில் தயாரிக்கப்பட்டதை வலீமா விருந்தாக கொடுத்தார்கள். (1 முத்து 750 கிராம் ஆகும்)ஃபிய்யா பின்து ஷைபா (ரலி) புகாரி, முஸ்லிம்)

விருந்து வழங்கும் போது கவனிக்க வேண்டியவை.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:நீங்கள் வலீமா விருந்துக்கு அழைக்கப்பட்டால், அவ்வழைப்பை ஏற்றுச் சிறப்பளியுங்கள். இப்னு உமர்(ரலி)ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

எந்த விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் மறுக்கப்படுகிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தவராவர்.அபூஹூரைரா, இப்னு அப்பாஸ் (ரலி-அன்ஹூம்) புகாரி, முஸ்லிம்(இன்றைய திருமணங்களில் இந்த ஹதீஸில் வரும் எச்சரிக்கையை யாரும் கண்டுக் கொள்வதேயில்லை என்ற மோசமான நிலையே நீடிக்கிறது)

திருமண வாழ்த்து.

'பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்' அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக... (என்பது நபிவழி துஆ) அபூஹூரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இது தவிர இன்றைக்கு முஸ்லிம்கள் திருமணத்தின் போது செய்யும் சடங்குகள் - ஓதப்படும் பிற துஆக்கள் எதுவொன்றும் இஸ்லாத்திற்குட்பட்டது அல்ல என்பதால் அவற்றை இரு வீட்டாரும் கட்டாயம் புறக்கணிக்க வேண்டும்.பிற விட்டொழிக்க வேண்டிய சடங்குகள்.

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும்.

திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் ‘நபிமார்களைப்போல் வாழ்க’ என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன் கூறிவருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையை மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர்.

ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வஃபாரிஸா வஇப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வ ஸுலைஹா … இவர்களைப்போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள்.

1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க !
1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக்கனியை உண்டதற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
3. அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப்பட்டார்கள்.
4. பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.
இந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக்கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழவேண்டுமா ?
2. நபி நூஹும் ஃபாரிஸாவும் போல் வாழ்க !
( நூஹு(அலை) , லூத் (அலை) ஆகிய )இருவருடைய மனைவியரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களிருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே (அந்த இறைதூதர்களால்)அவ்வருவரையும் இறைவனி(ன் தண்டனையி)லிருந்து காப்பாற்ற முடியவில்லை.

இருவரும் நரகிற் செல்வோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன்: 66: 10)

இவ்வசனத்தின் மூலம் நூஹ் நபி, லூத் நபி இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது.

இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரகவாசி யாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப் பிறகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரக வாசியைப் போன்று வாழ்க என வாழ்த்தலாமா ?

3. நபி இப்றாஹீம், ஸாரா போல் வாழ்க !

இப்றாஹீம் நபி - ஸாரா தம்பதியருக்கு நீண்ட நெடுங்காலமாகவே (முதுமை வரை)குழந்தைப் பேறே இல்லாதிருந்தது.

எனது கேடே! மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும் எனது கணவர்
வயோதிகராகவும் இருக்க நான் (கர்ப்பமாகி ) பிள்ளை பெறுவேனா ?
நிச்சயமாக இது ஆச்சரியமான விசயம் என்று அவரது மனைவி கூறினார்.
என அல்- குர்ஆன் : 11: 71, 72. கூறுகிறது .

வயது முதிர்ந்து கிழப்பருவம் வரும் வரை குழந்தைப்பேறே இல்லாதிருந்ததைத் தெரிந்தும் இவ்வாறு வாழ்த்தலாமா? எந்த தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தப் பேறில்லாதிருப்பதை விரும்புவர்? ஆசையோடு எதிர்பர்க்கும் புதுமணத் தம்பதியரை இப்படி வாழ்த்தலாமா ?

5. நபி யூஸுஃப் - ஸுலைஹா போல் வாழ்க !

1. குர்ஆனிலோ ஹதீஸிலோ ஸுலைஹாவைப்பற்றி எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை.இந்த ஸுலைஹா யார் ?

2. அறிமுகமே இல்லாதவரை மனைவியாக்க முன்வந்தது எப்படி?
3. குர்ஆனில் யூஸுஃப் நபியை அடிமையாக வளர்த்தவர் தான் பிற்காலத்தில் நபியின் மனைவியாக சித்தரிக்கப்படுகிறார். அது எப்படி?

4. திருமறையே இவளை நடத்தை கெட்டவள் என வர்ணிக்கிறது. நடத்தை கெட்டவள் நபியின் மனைவியாக முடியுமா?

5. இவளை நபியுடன் இணைத்து ஓர் காதற் காவியம் இயற்றியது அபாண்டமான பழியல்லவா ?

6. திருமணம் நடந்ததாக ஆதாரரமே இல்லாத ஒருவளை - ஒரு தம்பதியை - குறிப்பிட்டு வாழ்த்தலாமா ? இது முறையா ?

7. பல தீமைகளை தொடர்ந்து செய்த ஒரு பெண்ணை ஒரு நல்லடியாருக்கு அதுவும் ஒரு நபிக்கு மனைவிக்கவேண்டுமென்ற நிர்பந்தம் என்ன?

8. இன்னொருவரின் மனைவியை அதுவும் வயது முதிர்ந்த கிழவியை கன்னிப்பெண்ணாக உருமாற்றி திருமணம் செய்து வைக்கவேண்டுமென்ற அவசியம் என்ன?

9. அப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனிலேயே அறிவித்திருப்பானே?

10. அஹ்ஸனுல் கஸஸ் அழகிய வரலாறு என்று கூறி ஒரு அத்தியாயம் முழுவதிலும் யூசுப் நபியின் அற்புத வரலாற்றை சுவைபட பிறப்பு முதல் இறுதி வரை கூறிய இறைவன் இதை எவ்வாறு கூறாது விட்டிருப்பான்?

இவ்வளவு பிரச்சனைக்குரிய விசயத்தை கட்டாயமாக அதுவும் மகிழ்சிகரமான மணவிழாவில் புதுத்தம்பதியரை வாழ்த்துவதற்காகக் கூறித்தான் ஆக வேண்டுமா? மார்க்க ஞானமுள்ளவரும், மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவரும் சிந்தித்துப்பார்க்கவேண்டும் ?

தவிர்க்கப்பட வேண்டிய இஸ்லாத்திற்கு புறம்பானவை

மணமக்களை பூமாலை மலர்களால் அலங்கரித்து அழைத்து வரல்.

திருமணத்திற்கு முந்திய நாளிரவு மணமக்களுக்கு நலங்கிடல்என்ற பெயரில் எண்ணெய் சடங்கு செய்தல்.

கைக்கூலி எனும் வரதட்சணை வாங்குதல்.

மாலை மாற்றுதல், வெற்றிலை மாற்றுதல், அரிசி அளத்தல், பல்லாங்குழி விளையாடல் போன்றவை.

மணமேடைக்கு மணமகன் வருகையில் ஆரத்தி எடுத்தல்,

ஆட்டுத்தலை, கோழி போன்றவற்றை தலை சுற்றி எறிதல்.

மணமகனுக்கு பெண் வீட்டார் நிறைகுட தண்ணீர்வைத்து
அதில் அவரின் காலை கழுவி விடல்.

மணமகனுக்கு தங்க மோதிரம், மைனர் செயின் அணிவித்தல்.

மணமகளுக்கு தாலி மற்றும் கருகமணி கட்டுதல்.

மணமக்களை வைத்து மஞ்சள் பூசி நலங்கு பாடுதல்.

நல்லநேரம், சகுணம் பார்ப்பது, சடங்குகளின் பெயர்களால் வரம்புமீறி, ஆண், பெண் (திரை) ஹிஜாபின்றி இஸ்லாம் அனுமதிக்காத விதத்தில் விளையாடி மகிழ்வது.

மேடை அலங்காரம், வீடியோ, மேளவாத்தியம் என்று அனாச்சாரமாக பணத்தை செலவழிப்பது

.பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்பல சந்தர்ப்பங்களில்
சீர்வரிசை என்ற பெயரில் பொருட்களை கேட்டு வாங்குவது.

சுன்னத்தான தாடியை முகச்சவரம் என்ற பெயரில் வழித்தல்.

திருமணதன்று பெண் வீட்டாரிடம் விருந்து கொடுக்க நிர்பந்திப்பது.
மணமக்களை தர்ஹாகளுக்கு அழைத்து செல்வது.

இந்த சடங்குகள் அனைத்தையும் விட்டு விடுபட்டு செய்யப்படும் திருமணங்களே இஸ்லாமிய திருமணம் என்ற அந்தஸ்தைப் பெரும்.
 

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger