Tuesday, March 22, 2011

ஹதீஸ்கலை சுருக்கம்

இஸ்லாமியப் பிரச்சாரம் தீவிரமடையத் துவங்கிய காலத்திலிருந்து குர்ஆனும், ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்று மக்களிடம் வைக்கும் போது நபிமொழிகளில் பலவீனமும் உண்டா? இது என்ன கொள்கை என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர். பலர் நம்மை கேலியும் கிண்டலும் செய்தனர். எதை கண்டும் துவளாமல் ஏராளமான தூய இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உருவாகி களத்தில் நிற்கும் வேளையில் அவர்களுக்குப் பயன்படும் நோக்கில் சுருக்கமாக பலவீனமான ஹதீஸ்கள் உருவாவது எப்படி? என்று தெரிந்து கொள்ள இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

ஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த, அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய விஷயமல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படை விஷயம் இதுதான்.

1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.

2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.

3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.

4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.

5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.

6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.

7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.

8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.

9. மொழி, இனம், பாரம்பரியம,; மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.

10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.

11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.

12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.

13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம்,
தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.

இப்படி ஏராளமான மொழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. لاَ تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ
சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 17:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்

குறிப்பு 1: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸூன், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது.

குறிப்பு 2: குர்ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீஸ்கள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹதீஸ்கள் விஷயத்தில் மெளனம் காத்து விட வேண்டும்.  ஹதீஸ்கள் முக்கியம் என்று குர்ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger