Tuesday, March 22, 2011

அரஃபா - ஏன் முரண்பாடு

ஊருக்கொரு அரஃபாதினமா..? ஆதாரங்கள் என்ன சொல்கின்றது?

ஹஜ் நெருங்கி விட்டதைத் தொடர்ந்து அரஃபா நோன்புப பற்றிய சிந்தனையும் அதைத் தொடர்ந்து எந்த நாளில் நோன்பு நோற்பது என்ற சலசலப்பும் நம்மிடையே தோன்றும்.

அவரவருக்கு துல்ஹஜ் பிறை 9 எதுவோ அன்றைக்கு நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று ஒரு சாராரும், ஹாஜிகள் அரபாவில் இருக்கும் அன்றைக்கு தான் நோன்பிருக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் தங்கள் கருத்தை முன் வைக்கின்றார்கள்.

இரண்டு சாராரின் கருத்துக்களில் முதல் சாரார் எடுத்து வைக்கும் அந்தந்தப் பகுதியின் பிறை அடிப்படையில் 9 அன்றைக்கு நோன்பு வைப்பதே அரபாவாகும் என்ற வாதம் ஆதாரங்களுக்கு முரணாகவே தென்படுகின்றது.

இந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம் நபி(ஸல்) துல் ஹஜ் பிறை 9 அன்று நோன்பு வைப்பார்கள் என்பதேயாகும்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என நபி(ஸல்) அவர்களின் மனைவிகளில் சிலரிடமிருந்து ஹுனைதாபின் காலித்(ரலி), அறிவிக்கிறார்கள். நஸயி, அஹ்மத்.

துல்ஹஜ் 9 என்று குறிப்பிடுவதால் அவரவரும் துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று இவர்கள் முடிவு செய்கிறார்கள்.

இது பிறையை தேர்ந்தெடுப்பதில் - பிறையை அடிப்படையாகக் கொண்டதில் உள்ள பிரச்சனையாக அவர்கள் பார்க்கிறார்கள்.

மற்ற அறிவிப்புகள் ஏதும் இன்றி பிறையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்த நோன்பு சுன்னத்தாக்கப்பட்டிருந்தால் இவர்களின் வாதம் அவர்கள் தரப்பில் ஓரளவு நியாயமாக இருக்கலாம். ஆனால் இது பிறையோடு சேர்த்து மற்ற ஒரு நிகழ்வையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

அரஃபா நோன்பு என்பது அரஃபா தினத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அரஃபா என்பது ஹஜ் செய்ய செல்லும் ஹாஜிகள் அரஃபா எனும் பெருவெளியில் தங்கும் நாளைக் குறிக்கும்.

இந்த நாளின் நோன்பைப் பற்றி நபி(ஸல்) குறிப்பிடும் 'அரஃபா தின நோன்பு' என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

அரஃபா தினத்தில் நோன்பு வைப்பது அதற்கு முந்தைய ஒரு வருட, பிந்தி வரும் ஒரு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கைக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா(ரலி) திர்மிதி) இதே செய்தி இப்னுமாஜாவிலும் இடம் பெறுகின்றது.

அரஃபா தினத்தின் நோன்பு முந்தைய - பிந்தைய ஆகிய இரண்டு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாகவும் ஆஷுரா தின நோன்பு ஒரு வருட பாவத்திற்கு பரிகாரமாகவும் அமையும் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா (ரலி) அஹ்மத்)  இந்த செய்தி முஸ்லிமிலும் இடம் பெறுகின்றது.

صيام يوم ‏ ‏عرفة ‏ ‏أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده

அரஃபாதின நோன்பு என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதால் அரஃபா தினம் எதுவென்று அறிந்து நோன்பு வைப்பதே சுன்னத்தாகும்.

அரஃபா இடமும் - தினமும்.

நாங்கள் அஃபாவில் மிக தொலைவான இடத்தில் தங்கி இருந்தோம். அப்போது இப்னு மிர்பஃ(ரலி) எங்களிடம் வந்தார்கள். 'நான் நபியவர்களின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். இதை நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிலிருந்து வழிவழியாக அடைந்திருக்கிறீர்கள்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (பல நபித்தோழர்கள் அறிவிக்கும் இச்செய்தி திர்மிதி, நஸயி, இப்னுமாஜா போன்ற நூல்களில் வருகின்றது.

நபி(ஸல்) அரஃபாவில் தங்கினார்கள். இதுதான் அரஃபா, அரஃபா முழுவதும் தங்குவதற்கான இடமாகும் என்று குறிப்பிட்டார்கள்.

அரஃபாவில் என்றைக்கு மக்கள் கூடுகிறார்களோ அதுவே அரஃபாதினமாகும். இது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நிகழும் நிகழ்வாகும். அந்த ஒரு நாளைக்கு பிறகு அந்த வருடத்தில் அரஃபாதினம் என்று எதுவும் கிடையாது. அரஃபா தின நோன்பு என்று தெளிவாக இறைத்தூதர் குறிப்பிட்டுள்ளதால் அன்றைய தினம் (அரஃபாவில் மக்கள் கூடும் அந்த நாளில்) நோன்பு நோற்பதுதான் சுன்னத்தாகும்.

அந்த நாளில் அரஃபா பெருவெளியில் இருப்பவர்கள் நோன்பிருக்கக் கூடாது. நபி(ஸல்) அரஃபாவில் இருக்கும் போது நோன்பை விட்டு விட்டார்கள் என்று பல நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர்.

என்றைக்கு அரஃபாவில் இருப்பவர்கள் நோன்பு நோற்கவில்லையோ அன்றைக்கு அரஃபாவிற்கு வெளியில் இருப்பவர்கள் நோன்பிருப்பது சுன்னத்தாகும். இது துல்ஹஜ் பிறை 9 அன்று நிகழ்வதாகும். இதையே நபி(ஸல்) துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பு வைப்பார்கள் என்று அவர்களின் துணைவியர் அறிவிக்கிறார்கள். இதுவே முரண்பாடற்ற முடிவாகும்.

அரஃபா மைதானத்தில் மக்கள் கூடுவதையும், அவர்கள் நோன்பில்லாமல் இருப்பதையும் உலக மக்கள் அறியும் நிலையில் இன்றைக்கு எங்கள் பகுதிக்கு அரஃபா இல்லை என்று ஒரு சாரார் கூறுவதும், இன்றைக்கு நோன்பு வைப்பது சுன்னத்தல்ல என்று அறிவிப்பதும் பொருத்தமானதுதானா... என்பதை மக்கள் சிந்திக்கட்டும்.

அரஃபா மைதானத்திலிருந்து மக்களெல்லாம் புறப்பட்டு முஸ்தலிபா சென்றபிறகு இதுதான் அரஃபா நாள் (சில பகுதிகளில் இரண்டு நாட்கள் கழித்து இதுதான் அரஃபாநாள் என்று அறிவிப்பு) என்று சொல்லுவது எந்த அளவு நியாயமான வாதம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹஜ் பயணமும், பிறையும்.

இஸ்லாத்தில் பல வணக்கங்களுக்கு பிறை முக்கிய அடையாளமாக இருக்கின்றது. அவற்றில் ஒன்று ஹஜ்ஜாகும்.

ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பதில் முக்கிய முதலிடத்தில இருப்பது பிறையாகும்.

(நபியே) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். அது மக்களுக்கு நாட்களையும், நேரத்தையும் காட்டி, ஹஜ்ஜையும் அறிவிக்கின்றது என்று கூறும். (அல்குர்ஆன் 2:189)

பிறை பிறந்து ஹஜ்ஜு அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தனது பகுதிப் பிறையை ஒருவர் ஹஜ்ஜுப் பிறையாக கணக்கெடுத்தால் அவரால் ஹஜ் செய்ய முடியுமா...?

ஹஜ் என்பதே அரபா தான். யாரேனும் முஸ்தலிபாவில் தங்கும் (பத்தாம் - பெருநாள்) இரவின் பஜ்ருக்கு முன்பாக அரபாவை அடைந்து விட்டால் அவர் ஹஜ்ஜைப் பெற்றுக் கொள்கிறார் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (உர்வாபின் முளர்ரிஸ் (ரலி) திர்மிதி அபூதாவூத், நஸயி, இப்னுமாஜா)

ஹஜ் என்பது முழுக்க முழுக்க அரபாவை (அரஃபா இடத்தை அடைவதை) சார்ந்தது என்று இந்த செய்தி மீண்டும் அறிவிக்கின்றது.

அந்தந்தப் பகுதி பிறை அடிப்படையில் அரஃபாவை தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்பவர்களில் ஒருவர் அரஃபா தினத்தில் ஹஜ்ஜுக்கு சென்றால் ஹஜ் கூடிவிடும் என்ற அடிப்படையில் அவருடைய அரஃபா நாளில் அரஃபா செல்கிறார் (உதாரணமாக ஒருநாளோ, இரு நாளோ கழித்து பிறையைப் பார்த்து ஹஜ்ஜை தீர்மானிக்கும் ஒரு இந்தியர்) என்றால் அவரால் அரஃபாவை அடைய முடியுமா...? அவர் செல்லும் நாளில் அரஃபா வெறிச்சோடி கிடக்கும். அவரது ஹஜ் கனவும் வீணாகி போகும்.

மக்கள் ஒன்று திரண்டு நிற்கும் அரஃபா நாளில் அங்கு அவர்களுடன் சேர்ந்துக் கொள்ளாத எவருக்கும் ஹஜ் கிடைக்க வாய்ப்பில்லை என்ற தெளிவான நிலையில், ஹஜ் கிடைக்க வேண்டும் என்றால் தங்கள் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்ற முரணான போக்கை விட்டொழித்து குர்ஆனின் கட்டளைப்படி பிறை ஹஜ்ஜை அறிவித்து விட்டவுடன் அதைப் பின்பற்றியாக வேண்டும். பிறை பிறந்து ஹஜ்ஜை அறிவித்து அதே பிறை அரஃபாத்தையும் அறிவித்து அரஃபாவில் மக்கள் கூடி அவர்கள் நோன்பில்லாத நிலையில் அதே நாளில் பிறர் நோன்பு வைப்பதே அரஃபா நோன்பாகும். அதுவே சுன்னதாகும்.

அவர்கள் அரஃபாவை கடந்து, பெருநாள் தினத்தில் நுழைந்து பெரும் பகுதியினர் பெருநாள் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இதுதான் எனக்கு அரஃபா தினம் என்று கூறுபவர்கள் அந்த முடிவை குர்ஆன் சுன்னாவிலிருந்து விளங்கி பெறவில்லை என்பது தெளிவாகின்றது.

மக்கள் அரஃபா தினத்தில் குழுமி இருக்கும் அதே நாளில் நோன்பிருப்போம். சுன்னாவை சுன்னாவாக பின்பற்றுவோம். இறைவன் அருள் புரியட்டும்

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger