Saturday, April 2, 2011

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..! வரலாறு - 1

அறிமுகம்.
உலக அளவில் 200 கோடி மக்களால் - அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள படி இரச்சகராகவும், 170 கோடி முஸ்லிம்களால் அவர்களின் வேத அறிவிப்புப் படி இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சிறந்த மனிதர் இயேசு என்று அழைக்கப்படக் கூடிய ஈஸா(அலை) அவர்கள்.

இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சர்ச்சை இரு சமூக, சமூக தலைவர்களுக்கு மத குருக்களுக்கு மத்தியில் நீண்ட நெடுங்காலமாக நடந்து வந்துக்கொண்டிருக்கிறது. இதில் இயேசுவை இரச்சகர் - கடவுளின் மகன் என்று கூறி வழிப்படுவோர் வெறும் கற்பனையால் புனையப்பட்ட யூகத்தின் அடிப்படையில்தான் தம்முடைய நம்பிக்கையை வளர்த்து வைத்துள்ளார்கள் என்று அந்த சமூகம் சார்ந்த சில வரலாற்று ஆய்வாளர்கள் துணிந்து தெரிவித்து வருகிறார்கள்.

பரிசுத் வேதாகாமம் என்று கிறிஸ்துவர்களால் போற்றப்படும் பைபிளில் இயேசுவைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக வந்துள்ள கருத்துக்களையும் சம்பவங்களையும் அந்த வரலாற்றாளர்கள் தங்களுடைய கருத்துக்கு சாதகமாக ஆதாரமாக எடுத்து வைக்கிறார்கள். உரிய இடத்தில் இறை நாட்டப்படி அதை நாம் விளக்குவோம்.

இயேசுவை இறைத்தூதராக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களிடம் அவரை இறைத்தூதர் என்று அறிவிக்கும் குர்ஆன் உள்ளது. இதில் இயேசுவின் பிறப்பு அதிசயம், குழந்தை பருவம், மழலை பருவத்தில் அவர் தம் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திர வாதம், வாலிபம், பிரச்சாரம், அவரது சீடர்கள், எதிரிகளின் சூழ்ச்சி, இறுதி முடிவு என்று அவர் பற்றிய எல்லா விபரங்களும் கூறப்பட்டுள்ளன. அவரை கடவுளின் குமாரர் என்று - இரச்சகர் என்றோ குர்ஆன் ஏற்கவில்லை. அவ்வாறு கூறுவோரின் கூற்றை குர்ஆன் கடுமையாக மறுத்துள்ளது.

சமூகமும் - இயேசுவின் பிறப்பும்

இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுதாயத்திற்கு வந்து தம் பணியை சிறப்பாக செய்தாரோ அந்த சமுதாயம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும். இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள். இதில் ஆகார் என்ற இரண்டாவது மனைவியான ஹாஜராவிற்கு இஸ்மவேல் என்ற இஸ்மாயீல் முதல் மகனாக பிறக்கிறார்கள். இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) அவர் தாயார் ஆகார் (ஹாஜராவையும்) ரையும் இறைப்பணிக்காக அரபு தேசத்தில் (சவூதி அரோபியாவில்) இருக்கும் மக்கா என்ற ஊரில் ஆப்ரஹாம் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த விபரம் குர்ஆனிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை போதிக்கும் புகாரி என்ற பெரு நூலிலும், பைபிளின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகாமத்தின் அதிகாரங்கள் 12, 13. 14, 15, 16. 17 ஆகியவைகளிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது. (முக்கிய குறிப்பு) கிறிஸ்துவ மத குருமார்கள்; இயேசுவிற்குபிறகு எந்த நபியும் இல்லை என வாதிக்கிறார்கள். இதற்கு காரணம் ஆப்ரஹாமின் முதல் மகன் இஸ்மவேலின் வரலாற்றை அவர்கள் கண்டுக் கொள்ளாததேயாகும். இரண்டாவது மகனான ஈசாக்குவின் பக்கமே அவர்களின் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால் இஸ்மவேலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை உரிய இடத்தில் பார்ப்போம் (இன்ஷா அல்லாஹ்)

ஆப்ரஹாம் (இப்ராஹீம்) அவர்களின் முதல் மனைவியான சாராள் என்ற சபுராவிற்கு ஈசாக்கு என்ற இஸ்ஹாக் அவர்கள் இரண்டாவது குழந்தையாக பிறக்கிறார்கள். இவர்களின் சந்ததி பல கிளைகளாக பிரிந்து பெருகி பல இடங்களில் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒவ்வொரு சந்ததியினருக்கும் நேர்வழிக் காட்ட இறைவன் புறத்திலிருந்து தீர்கதரிசிகள் - இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள். ஈசாக்(இஸ்ஹாக்)குடைய மகனாக யாகோப்(யஃகூப்) என்ற தீர்கதரிசி பிறக்கிறார்கள். இவர்களே 'இஸ்ராயீல்' என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் சந்ததியில் வந்தவர்கள்கள் தான் யூதர்கள் என்று அழைக்கப்படக்கூடிய இஸ்ரவேலர்கள். அப்ரஹாம்(இப்ராஹீம்) அவர்கள் தம் மக்களுக்கு செய்த உபதேசத்தையே அவர்களின் மகன் ஈசாக்(இஸ்ஹாக்) அவர்களும், அவர்களுக்கு பின் மகன் வழி பேரன் யாகோப்(யஃகூப்) அவர்களும் செய்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் குர்ஆனில் வருகிறது.

'(ஆப்ரஹாம் ஆகிய) அவருக்கு அவருடைய இறைவன் ''எனக்கு நீர் கீழ்படியும்'' என்று கூறியதும் ''அகிலத்தாரின் இரச்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்'' என்று கூறினார் (அல் குர்ஆன் 2:131) இதையே தம் மக்களுக்கு அவர்கள் நல்லுரையாகவும் கூறினார்கள்.(இஸ்ரவேலாகிய) யஃகூபும் '' என் மக்களே! நிச்சயமாக இறைவன் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே உங்களுக்கு தேர்ந்தெடுத்துள்ளான். எனவே நீங்கள் (அந்த ஏக இறைவனுக்கு) முற்றிலும் கீழ் படிந்தவர்களாக அன்றி மரணித்து விட வேண்டாம்'' என்கிறார்கள். (அல் குர்ஆன் 2:132)

யாகோபிற்கு மரணம் நெருங்கியதும் அவர் தம் மக்களிடம் கேட்கிறார் ''எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?''மக்கள் பதில் சொல்கிறார்கள் ''நீங்கள் வணங்கிய அந்த வணக்கத்திற்குரியவனும் உங்கள் (குடும்ப) முன்னோர்களான அப்ரஹாம்(இப்ராஹீம்) இஸ்மவேல்(இஸ்மாயீல்) ஈசாக்(இஸ்ஹாக்) ஆகியோர் வணக்கத்திற்குரியவனாக ஏற்று வணங்கிய அந்த ஒரே அறைவனையே வணங்குவோம்'' (அல் குர்ஆன் 2:133)

இப்படி பல இறைத்தூதர்களிடமிருந்து அறிவுரைகளைப் பெற்ற யூதர்கள் பின்னாளில் கடின சித்தம் உள்ளவர்களாகவும் எத்தகைய கொடுமையை செய்வதற்கும் அஞ்சாதவர்களாகவும் மாறிப்போனர்கள். இத்தயை மக்களிடம் தான் இயேசு(ஈஸா) அவர்கள் பிரசாரம் செய்வதற்காக வருகிறார்கள் கடைசியாக. இயேசுவிற்கு முன்னால் மோஸே (மூஸா) அவர்கள் அதே மக்களை வந்து சந்திக்கிறார்கள். ''நாம் மூஸாவிற்கு திட்டமாக வேதத்தை கொடுத்தோம். அவருக்கு பின்னால் தொடர்ச்சியாக இறைத்தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். மரியாளின் (மர்யமின்) குமாரர் இயேசு(ஈஸா)விற்கு தெளிவான அத்தாட்சிகளை வழங்கியும் பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு அவரை பலப்படுத்தியும் வைத்தோம். (யூதர்களே) உங்கள் மனம் விரும்பாததை (நம்முடைய) எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும் நீங்கள் பெருமையடிக்கிறீர்கள். ஒரு சாராரை பொய்படுத்தினீர்கள் ஒரு சாராரை கொலையும் செய்தீர்கள்.'' (அல் குர்ஆன் 2:87)

மோஸே அவர்களுக்க பிறகு இறைவன் தொடர்சியாக யூதர்களுக்காக தீர்கதரிசிகளை அனுப்பிக் கொண்டிருந்தான். அப்படி அனுப்பப்பட்ட தீர்கதரிசிகள் யூதர்களால் ''பொய்பிக்கப்பட்டார்கள்'' அல்லது ''கொலை செய்யப்பட்டார்கள்'' என்ற விபரம் மேற்கண்ட வசனத்தில் கிடைக்கின்றன. பொய்பிப்பதற்கும் கொலை செய்யப்பட்டதற்கும் என்ன காரணம்? அதே வசனத்தில் விடையும் கிடைத்து விடுகிறது. 'உங்கள் மனம் விரும்பாததை எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும்..' என்ற இறைவனின் வார்த்தைகள், யூதர்கள் அவர்களின் மன விருப்பத்திற்கு மாற்றமாக - அவர்களை நல்வழிப்படுத்தக் கூடிய எந்த செய்தியையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். ஆனால் தாம் விரும்பாத ஒரு கொள்கையை - செய்தியை சொல்பவர்களை கொலை செய்யும் மனப்பக்குவம் பெற்றவர்களை கண்டிருக்கிறோமா... யூதர்கள் அந்த காரியத்தில் ஈடுபட்டார்கள். இதையும் அந்த வசனத்திலிருந்தே அறியலாம்.

இந்த சூழலில் தான் அந்த சமூகத்திற்கு வழிகாட்ட இயேசு(ஈஸா) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எவ்வளவுதான் கெட்ட சமுதாயமாக இருந்தாலும் அதிலும் அபூர்வமாக இறைவனுக்கு அஞ்சி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடிய சில நல்ல மனிதர்கள் இருந்து விடுவது இயல்புதான். அந்த நல்லவர்கள் மூலமாகவும், தாம் நல்லவர்களாக உருவாக்கும் தம்முடைய சந்ததிகள் மூலமாகவும் - வரும் தலைமுறைக்கு - நல்ல விஷயங்கள் போய் சேர இது வழிவகுக்கிறது இறைவன் தான் இந்த ஏற்பாட்டை செய்கிறான். இறைவனின் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில்தான் யூத வம்சத்தில் பிறந்த இயேசு(ஈஸா) அவர்களின் பாட்டி - அதாவது மரியாள்(மர்யம்) உடைய தாயார் - நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். இறைவனுக்கு அஞ்சி அவனுக்கு மட்டும் வழிபட்டு நடந்த அந்த அம்மையாரின் பிரார்த்தனைக்காகவும், 'இயல்பாக' சராசரியாக வந்த தூதர்கள் அனைவரும் பொய்பிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் 'பிறப்பிலேயே அற்புதம் மிக்க ஒரு இறைத்தூதரை யூதர்களுக்காக அனுப்புவோம்' என்ற இறைவனின் ஏற்பாட்டின் படியுமே இயேசு(ஈஸா) அவர்களின் பிறப்பு நிகழ்கிறது.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger