Thursday, April 7, 2011

பெண்கள் வேலைக்கு செல்லலாமா! பதில்கள் 31

*பெண்கள் வேலைக்கு செல்லலாமா
**கணவரை பெயர் சொல்லி அழைக்கலாமா
***ஓவியம் புகைப்படம் எடுக்கலாமா
****ஹிந்துவாகிய நான் காதலிக்கிறேன்
*****சுயஇன்பம் செய்வது தவறா
******திருவள்ளுவர் நபியா.

கேள்விகளுக்கு பதில் தொகுப்பு

359)கேள்வி- பெண்கள் வேலைக்குச் செல்வதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? yusuff_deen@

இதுபற்றி நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். இந்த நூற்றாண்டு பொருளாதார நூற்றாண்டாகவே கழியும். பொருளாதாரம் பற்றிய சிந்தனை அது பற்றிய பயம் மிகைத்து காணப்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பெண்கள் வீட்டோடு இருந்தால் போதும் என்று கடந்தக் காலத்தில் நினைத்தவர்கள் பேசியவர்கள் எல்லாம் இன்று தனது நிலையை மாற்றிக் கொண்டு குடும்பத்திற்கு உழைக்க எனது இரண்டு கைகள் மட்டும் போதாது குறைந்த பட்சம் மனைவியின் ஒரு கையாவது வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.

உழைப்பதற்கு ஆண்களும் செலவு செய்வதற்கு பெண்களும் என்பது கடந்த காலங்களில், விஞ்ஞான, கல்வி, பொருளாதார வளர்ச்சிப் பெறாத காலகட்டங்களில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இன்றைய நிலையில் அது சாத்தியமில்லை என்பதை பெண்கள் வேலைக்கு செல்லலாமா..? போன்ற விவாதங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
வரவு எட்டணா, செலவு பத்தணா போன்ற கிண்டலான குத்தல் மொழிகள் ஒருகாலத்தில் வரவுக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கையை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அதே வார்த்தை யதார்த்தத்தைச் சொல்கிறது.

என்னதான் பட்ஜட் போட்டு குடும்பத்தை நகர்த்த வேண்டும் என்று நினைத்தாலும் 'துண்டு' விழும் நிலை தவிர்க்க முடியாமலே போய்விடுகிறது. (நாம் இந்தியர்கள்!)

இந்நிலையில் கணவன் மட்டுமே உழைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அந்த சுமையை எல்லா ஆண்களாலும் சுமக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.. எனவே பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனைவிகள் (தாங்களாக விரும்பி) உழைக்க முன் வந்தால் அதைத் தடுக்கும் உரிமையை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை.

மனைவியை இறைவன் விளைநிலத்திற்கு ஒப்பாக்கியுள்ளான். (பார்க்க அல் குர்ஆன் 2:222) விளை நிலம் என்பதே ஒரு பொருளாதார குறியீடாகும். 'உங்கள் விளை நிலம்' என்று கணவர்களை நோக்கி சொல்லப்பட்டுள்ளதால் மனைவிகள் முறையான வழியில் உழைக்க விரும்பினால் கணவர்கள்் அனுமதிக்கலாம் என்பதை விளங்கலாம்.

பெண்கள் உழைக்க - வேலை செய்யத் தடையில்லை என்றாலும் வேலை, அது செய்யப்படும் இடம் இவற்றைப் பொருத்து இஸ்லாம் சில விதிகளை முன்வைக்கிறது.

எந்த ஆணுடனும் தனித்திருந்து வேலை செய்யக் கூடாது. உதாரணமாக 'செகரட்டரி' போன்ற பணிகள். இது போன்ற வேலைகள் அந்நிய ஆணுடன் (இது முதலாளியாகவோ அல்லது மேனேஜராகவோ அல்லது உயர் அதிகாரிகளாகவோ இருக்கலாம்) தனித்திருக்கும் பொழுதுகளை உருவாக்கி கொடுக்கும். ஆண் என்றைக்கும் ஆணாகத்தான் இருப்பான். சில்மிஷ பேச்சுகள், ஏடாகூடமான பார்வைகள் என்பதிலிருந்து எந்த ஆண்களையும் விதிவிலக்காக காட்ட முடியாது. பார்வை - பேச்சு என்று துவங்கி பெண்மையை கறைப்படுத்தும் சந்தர்பத்தை அவசியம் உருவாக்கி விடும். (இது போன்ற வேலைகளுக்கு பெண்களை நாடும் எவரும் தங்கள் மனைவிகளையோ தங்கள் சகோதரிகளையோ தேர்ந்தெடுப்பதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்)

ஆணுடன் தனிமையில் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கும் எந்த வேலையையும் (அது என்னதான் பொருளாதாரத்தை கொட்டிக் கொடுக்கக் கூடிய வேலையாக இருந்தாலும் சரி) அந்த வேலையை எந்த பெண்ணும் ஒப்புக் கொள்ளவேக் கூடாது. இதை இஸ்லாம் இப்படி எச்சரிக்கிறது:

"அந்நிய ஆணும் - பெண்ணும் தனித்திருக்கும் போது (அவ்விருவருக்கும் பொது எதிரியான) ஷைத்தான் மூன்றாவதாக இருக்கிறான் என்பது நபிமொழி. (திர்மிதி)

ஆணுடன் தனிமையில் இருப்பதை தவிர்த்து பொதுவான வேலைகளை பெண்கள் தேர்ந்தெடுக்கலாம். மருத்துவப் பணி, ஆசிரியைப் பணி, ஓவியப்பணி, விவசாயம், தையற்கலை, விமானப் பணிப்பெண்கள், விற்பனையாளர்கள் போன்ற வேலைகளில் தங்களுக்குத் தகுதியானவற்றை பெண்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பொதுவான எந்த வேலையைத் தேர்ந்தெடுத்தாலும் அந்த வேலையில் பிற ஆண்களை சந்திக்கும் சூழ்நிலை இருந்தால் தாங்கள் அணியும் உடைகளில் பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சேலையும் அது சார்ந்தவையும் கவர்ச்சிகரமான உடை என்பதால் அவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். சுடிதார் - கமீஸ் போன்ற உடலை முழுவதும் மறைக்கும் உடையணிந்து தலைமுந்தானையுடன் வேலை செய்யலாம். சேலை உடுத்த வேண்டி வந்தால் மேலதிகமாக புர்கா அவசியமாகி விடும்.

பெண்கள் வெளியில் சென்று பொருளாதாரத்தைத் திரட்டுவதை இஸ்லாம் அவர்கள் மீது கடமையாக்கவில்லை. இதற்கு காரணம் 'பெண் அதற்கு தகுதியானவளல்ல என்று இஸ்லாம் நினைப்பதாக சிலர் விளங்கிக் கொண்டு இஸ்லாத்தின் பெண்ணுரிமையை விமர்சிகக்கத் துவங்கி விடுகிறார்கள்.' இது மனித இயல்பை உணராத அவசரக்காரர்களின் முடிவாகும்.

பெண் இயல்பிலேயே குடும்பப் பணிகளை செய்ய வேண்டிய பொறுப்பைப் பெற்றுள்ளாள். பலர் பணியாற்றும் ஒரு ஆபிஸுக்கு நிகரானப் பணிகள் ஒவ்வொரு நாளும் குடும்பத்தில் நடக்கின்றன. இதில் பெரும் பங்காற்றுவது அந்த குடும்பப் பெண்கள் தான். காலையில் எழுந்து அடுப்பங்கரையில் துவங்கும் வேலை கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து இரவு பத்து மணிவரை நீடிக்கின்றன. குழந்தைகள் சிறப்பாக உருவாகும் இடம் இதுதான். சுகாதாரமான உணவு, தூய்மையான உடை என்று ஆரோக்யமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவது குடும்பம் தான். இவற்றை செய்து முடிக்க தகுதியுள்ளவர்கள் குடும்பப் பெண்கள் தான். இதற்காக அவர்கள் தினமும் ஒதுக்க வேண்டிய நேரம் அதிகமானதாகும். இத்துனைப் பொறுப்புணர்வுகளும் தட்டிக் கழிக்க முடியாத பணிகளும் நிறைந்த பெண்களை வேலைக்கு அனுப்புவதென்பது அவர்கள் தலையில் கூடுதல் சுமையை ஏற்றி வைக்கும் முயற்சியாகும்.

ஆபிஸில் அல்லது மற்ற வேலைகளை செய்யும் எந்த ஆணும் குடும்பத்திற்கென்று எந்த வேலையும் செய்வதில்லை. (சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) வேலை முடித்து வீடு திரும்பும் ஆணுக்கு அவன் எதிர்பார்ப்பவை (உடனடியாக சிலருக்கு டீ தேவைப்படும், சிலர் உடனடியாக சாப்பிடும் எண்ணத்தில் வருவார்கள், சிலர் வெண்ணீரில் குளிக்க வேண்டும் என்று வருவார்கள்.இப்படி பல அவசரங்களில் வீடு நுழையும் ஆண்களே அதிகம்) கிடைக்கவில்லை என்றால் எரிச்சலடையக் கூடிய, கோபப்படக் கூடிய மனநிலையைப் பெறுவார்கள். அதே நேரம் வெளியில் வேலை செய்து விட்டு வீடு திரும்பும் பெண்களின் நிலை என்ன? அவர்களால் யார் மீதும் கோபப்பட முடியாது. அவசர, அவசரமாக குடும்ப வேலையில் இறங்க வேண்டும்.

ஆணோடு ஒப்பிடும் போது பெண் உடல் ரீதியாக பலவீனமானவள். குடும்பத்தை பராமரிக்கும் அளவிற்கே உடல் பலத்தையும் மனநிலையையும் பெற்றிருக்கும் பெண்களை "வேலைக்குப் போ"  என்று வற்புறுத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். இத்தகைய நிலைக்கு தள்ளப்படும் பெண்கள் வெகு விரைவில் மன அழுத்தத்தையும் உடல் பலவீனத்தையும் பெற்று விடுகிறார்கள்.

மட்டுமின்றி இதையும் கடந்து வக்கிரபுத்தியுள்ள ஆண்களால் அவர்கள் அவதிப்படுவதாகும். பாலியல் பார்வை - பேச்சு - சீண்டல் என்று மன நோயாளிகளிடம் அவர்கள் தினம் தினம் படும் அவஸ்த்தைகள் சொல்லி மாளாது. இத்துனையும் சகித்துக் கொண்டே அவள் வருமானத்தை பெறமுடியும். அதுவும் ஆண் பெறும் வருமானத்தை விட வெகு குறைவாக.
பெண்களில் உடல் மற்றும் மனநிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 'அவர்களால் சுயமாக எந்த வருமானத்தையும் ஈட்டவே முடியாதா..? என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.

நிச்சயமாக ஈட்ட முடியும்.

பிறரிடம் சம்பளத்திற்கு வேலை செய்வதை விட தாமே சுய தொழில் தொடங்குவதுதான் பெண்களைப் பொருத்தவரை சரியாகும்.

வீடுகளில் துவங்கப்படும் சிறு தொழில்கள், பெண்களாக ஒன்று கூடி செய்யக் கூடிய பல்வேறு தொழில்கள் என்று சுய தொழில்களில் பெண்கள் ஆர்வம் காட்டும் போது பல சிக்கல்களை அவர்களால் தவிர்த்து விட முடியும். சுய தொழிலால் முன்னுக்கு வந்த, வந்துக் கொண்டிருக்கின்ற சாதனைப் பெண்கள் தமிழக்கத்தில் மட்டும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அதே வழியில் பெண்கள் சம்பாதிக்க முயலலாம்.

சம்பாதிப்பதற்காக எந்த வழியை ஒரு முஸ்லிம் பெண் தேர்ந்தெடுத்தாலும் அது அவளது குடும்ப பொறுப்பை தட்டிக் கழிப்பதாக மட்டும் அமைந்து விடக் கூடாது. குழந்தையை சீரிய முறையில் உருவாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து விடுபட எந்த முஸ்லிம் பெண்ணுக்கும் அனுமதியில்லை என்பதை மட்டும் எந்த ஆணும் மறந்து விடக் கூடாது.
-------------------------
360) கேள்வி - மனைவி கணவரை பெயர் கூறி அழைக்கலாமா? இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள், கணவன்மார்களை மரியாதை நிமித்தம் நேரடியாக பெயர் சொல்லாமல் வேறு வகைகளில் அழைக்கின்றனர். அரபு பெண்கள் பெயர் சொல்லி அழைக்கின்றனர். நமது மார்க்கப்படி விளக்கவும். fatha@

கணவன் மனைவி இருவருக்கு மத்தியில் உள்ள தொடர்பு வெறும் உடல் ரீதியானது மட்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. அதற்கு மேலாக உள்ளத்தோடு தொடர்பு கொண்டவையாகும்.

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்காக உங்கள் மனைவியை உங்களிலிருந்தே படைத்தான்... (அல்-குர்ஆன். : 30 : 21)

கணவன் மனைவிக்குள் ஆறுதல் கிடைக்கும் எல்லா விஷயங்களையும் இந்த வசனம் அனுமதிக்கிறது. சொற்கள், செயல்கள், விளையாட்டு இவை கணவன் மனைவிக்குள் ஆறுதலையும் நெருக்கத்தையும் கொடுக்கும். மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ஒரு மனைவி தன் கணவனை பெயர் சொல்லியும் அழைக்கலாம். இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கருதினால் இரண்டு நண்பர்கள் தங்களுக்குள் எப்படி அழைத்துக் கொள்வார்களோ அது போன்று கூட அழைத்துக் கொள்ளலாம். செல்லமாகவும் கூறலாம். இஸ்லாம் இதையும் தடுக்கவில்லை.

மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமைப்போன்று மனைவிக்கும் உரிமை இருக்கிறது என்று கூறுகிறது இஸ்லாம். (பார்க்க, அல் குர்ஆன்: 2 : 228)

பெயர் சொல்லி அழைக்கும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் இதில் அடங்கும்.

ஆயிஷாவே! நீ என்மீது சந்தோஷமாக இருக்கிறாயா..? அல்லது கோபமாக இருக்கிறாயா..? என்பதை நான் சாதாரணமாக அறிந்துக் கொள்வேன் என நபி(ஸல்) கூறினார்கள். எப்படி? என்று ஆயிஷா(ரலி) கேட்க, 'முஹம்மத் உடைய இறைவன்மீது சத்தியமாக' என்று நீ கூறினால், சந்தோஷமான இதயத்துடன் நீ இருக்கிறாய் என்பதை உணர்வேன். 'இப்ராஹீம் உடைய இறைவன் மீது சத்தியமாக' என்று நீ கூறினால் உன் உள்ளம் கோபத்தில் இருக்கிறது என்பதையும் நான் அறிவேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆய்ஷா(ரலி), புகாரி, முஸ்லிம்)

தம் கணவரை 'முஹம்மத்' என்ற பெயரால் அழைப்பதை நபி(ஸல்) சந்தோஷத்தோடு அனுமதிக்கிறார்கள். எனவே கணவனின் பெயரை மனைவி தாராளமாகச் சொல்லலாம். இன்று கூட அரபு நாடு செல்பவர்கள் சாதாரணமாக இந்நிலையை காண்பார்கள்.

பெயர் சொல்லக்கூடாது என்ற மரபு அந்நிய சமயத்தின் காப்பியடிப்பாகும்.
'இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்' என்பது நபிமொழி(புகாரி)

இந்த நபிமொழியையும் கருத்தில் கொண்டால் மனைவி தம் கணவனின் பெயர் சொல்லி அழைப்பது மிகவும் நியாயமானதே என்பதை விளங்கலாம்.
----------------------
361) கேள்வி - அல்லாஹ் உங்களது இந்த அரும்பணிக்கு அருளட்டும். நானும் எனது கணவரும் இந்த இணையதளத்தை ரொம்பவும் விரும்பி பார்க்கிறோம். மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தரட்டும்.

இஸ்லாத்தில் உருவ படங்களை வரைவது தடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். ஆனால் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு இதை ஒரு பாடமாக வைத்து அவர்களை வரையும் கலையில் ஊக்குவிக்கின்றனர். இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?qren@

பொதுவாக எல்லா உருவங்களும் தடுக்கப்பட்டவையல்ல. இது பற்றி தனிக் கட்டுரை 'சட்டங்கள்' பகுதியில் இடம் பெற்றுள்ளது. பார்க்கவும்.
'ஓவியங்கள் - புகைப்படங்கள் கூடுமா?'  இதே வலைப்பதிவில் விளக்கம் கிடைக்கும்
--------------------
362) கேள்வி -நான் இந்து மதத்தை சேர்ந்தவன் 5 வருடங்களாக ஓர் இஸ்லாமியப் பெண்ணை உயிருக்குயிராக காதலித்து வருகின்றேன். அதன் பின் இஸ்லாம் மதத்தை பற்றி நன்றாக அறிந்து கொண்டேன். கடந்த ஒரு வருடத்துக்கு முன் நான் முஸ்லிம் டொக்டர் ஒருவரிடம் சென்று கத்னா எனப்படும் சுன்னத் செய்து கொண்டேன். சுன்னத் செய்த பின்பு கடந்த ஒரு மாதத்துக்கு முன் நான் காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்டேன். உணர்ச்சி வசப்பட்டே இதில் இணைந்தேன். இது மனித இயல்பே இது தவறா? தற்போது நான் புனித இஸ்லாத்தை ஏற்று எல்லோர் சம்மதத்துடனும் மணமுடிக்க உள்ளேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? பெண் வீட்டில் இஸ்லாத்தில் இணைந்தால் என்னை ஏற்றுக் கொள்வதாக சொல்கிறார்கள். எனக்கும் இஸ்லாத்தை தழுவ ஆசை. நான் இனி எப்படி பள்ளி செல்லவேண்டும்? பள்ளியில் எப்படி தொழவேண்டும்? தொழுவதற்குரிய துஆ எது? எப்படி மனனம் செய்ய வேண்டும்? இனி பின்பற்ற வேண்டிய முறை என்ன? இந்த எல்லா கேள்விக்குமான பதிலை உடன் தரவும். lanko@

மனித உள்ளங்களையும் அதில் உலவும் எண்ணங்களையும் அறிந்தவனாக இறைவன் இருக்கிறான். இஸ்லாத்தை தழுவுவதற்கென்று எந்த சடங்கும் இல்லை. 'வணக்கத்திற்குரியவன் ஏக இறைவனான ஒருவனைத் தவிர வேறெதுவும் இல்லை' என்ற நம்பிக்கையும் 'முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருக்கிறார்கள்' என்ற நம்பிக்கையும் எவரது உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டதோ அவர் இஸ்லாமிய வட்டத்திற்குள் வந்து விடுவார். இதை யார் முன்னிலையிலாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால் குளித்து விட்டு ஊர் ஜமாஅத் முன்னிலையில் கூறலாம். வேறு எந்த சடங்கும் இதற்கென்று இல்லை. மதகுருக்கள் (ஹஜ்ரத்துகள்) முன்னிலையில் தான் இதை சொல்ல வேண்டும் அல்லது அவர்கள் தான் மேற்கண்ட இஸ்லாத்தை ஏற்பதற்கான உறுதி மொழியை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. இன்றைய சூழ்நிலையில் இஸ்லாத்தை ஏற்றால் அதை அவசியம் அரசு ஆவனங்களில் பதிந்து விடுவது நல்லது. இஸ்லாத்தை தழுவும் ஒருவர் தனக்கு விருப்பமான பெயரை தேர்ந்தெடுத்து அதை பதிவு செய்துக் கொள்ளலாம்.

பள்ளிக்கு செல்வதென்பது ஒரு சாதாரண காரியம். இஸ்லாத்தை தழுவாதோரும் கூட பள்ளிவாசலுக்கு சென்று வரலாம். உங்களை சுற்றியுள்ள முஸ்லிம்களிடம் எப்படி தொழ வேண்டும் என்பது பற்றியும் இதர உங்கள் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு உங்கள் காதல் தான் காரணம் என்றால் அது உண்மையான இஸ்லாமிய பற்றாக இருக்க முடியாது. இஸ்லாத்தை ஏற்பதற்கான சரியான காரணம் எதுவாக இருக்க வேண்டும் என்றால் 'இதர எல்லா கொள்கை கோட்பாடுகளையும் விட இஸ்லாத்தின் கொள்கையும் கோட்பாடுகளும் சட்டங்களுமே சிறந்தது என்பதை அறிவுப்பூர்வமாக விளங்கி இணைவதுதான் உண்மையான மனமாற்றமாக இருக்க முடியும். ஒரு பெண்ணுக்காகக் கொள்கையை மாற்றிக் கொள்வது என்பது வெறும் காதல் மயக்கமாகத்தான் இருக்க முடியும். இது எந்த அளவிற்கு நிலைப் பெறும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.

திருமணத்திற்கு முன் உறவுக் கொண்டு விட்டு 'இது மனித இயல்புதானே' என்று நியாயப்படுத்தியுள்ளீர்கள். கேட்கிறோம் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் "ஒரு காமுகன் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் தனது பாலியல் பசியை தீர்த்துக் கொண்டு 'இது மனித இயல்புதானே!" என்று வாதிட்டால் அதை உங்களால் சரிகாண முடியுமா..? காமஇச்சைக் கோட்பாட்டிற்கு காதல் என்ற பெயர் கொடுத்து நிறைய இளைஞர்கள் தங்கள் காரியங்களை முடித்துக் கொள்கிறார்கள். பாவப்பட்ட பெண்ணிணத்திற்கு என்ன பட்டாலும் புத்தி வருவதில்லை.

காதல் என்ற பெயரில் திருமணத்திற்கு முன் விபச்சார கூத்தடிக்க நினைக்கும் முஸ்லிம் பெண்களை எச்சரிக்கிறோம். மரணித்துப் போனவர் எப்படி மீண்டு வரமுடியாது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மையோ அதே அளவு உண்மை பெண் தவறான வழியில் தன்னை இழப்பதுமாகும். என்னதான் அழுது புரண்டாலும் அந்நிய ஆண் தொட்ட உடலும், அதனால் ஏற்பட்ட உளரீதியான காயங்களும் மறைந்து விடாது. இழந்தது திரும்பி வராது. எச்சரிக்கை! எச்சரிக்கை!!
----------------------
363) கேள்வி - சுயஇன்பம் இஸ்லாத்தில் தடைச்செய்யப்பட்டுள்ளதா? ஆம் எனில், 20 வருடங்களாக இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்ட ஒருவருக்கு இதில் இருந்து விடுபட சிறந்த வழி என்ன? மார்க்க ஆதாரங்களுடன் பதிலளிக்கவும் zliabd@

364) கேள்வி - நான் 24 வயது இளைஞன். மார்க்கத்தை முழுமையாக பின்பற்ற விரும்புகிறேன். ஆனால் என்னுடைய வயதின் காரணமாக இது முடியவில்லை. அடிக்கடி செக்ஸ் சிந்தனைகள் என்னை அலைக்கழிக்கின்றன. சில நேரங்களில் சுயஇன்பத்திலும் ஈடுபடுகிறேன். நான் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன். சுயஇன்பம் மிகவும் பாவமானச் செயலா? எனக்கு தயவுசெய்து விளக்கவும். இது பாரதூரமான தவறென்றால் நான் உடனே நிறுத்த வேண்டுமல்லவா? ad_rafi@

இக்கட்டான சில நேரங்களில் சுயஇன்பம் கூடும் என்றும், அது அறவே கூடாது என்றும் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் இரு கருத்தோட்டங்கள் நிலவுகின்றன. எது எப்படி இருந்தாலும் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதே நல்லதாகும்.

இது பற்றி ஒரு மருத்துவரிடம் கலந்ததில் அவர் கொடுத்த தகவல்கள்:

1) அந்த பழக்கத்திற்கு ஆளானவர்கள் தொடர்ச்சியாக அதில் ஈடுபடும் மனநிலையைப் பெறுவார்கள். நாளடைவில் மனம் அதை விரும்பினாலும் உடல் விரும்பாத நிலை உருவாகும். அத்தகைய சந்தர்ப்பங்களில் மனதிற்கு கட்டுப்பட்டு அந்த காரியத்தில் ஈடுபடும் நிலைத் தொடரும். உடலின் உள் உறுப்புகள் இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் தன் சக்தியை அதிகரிக்க துவங்கி பின்னர் உடலின் இதர பாகங்களிலிருந்து சக்தியை உறிஞ்சி எடுக்கத் துவங்கும். இதனால் உற்பத்தி நாளங்களில் கோளாறு தலைக்காட்டத் துவங்கும்.

2)இடுப்புப்பகுதியில் பலவீனம் தெரியும். பாத எரிச்சல், ஆண்குறியில் எரிச்சல் என்று அந்த அறிகுறிகள் வெளிப்படும். உடல் பலவீனத்தை விட பிறகு மனநோய் தாக்கும். எதிலும் நாட்டமில்லாத நிலை உருவாகும்

3)தொடர்ச்சியாக சுய இன்பத்தில் ஈடபடுபவர்களுக்கு மனைவியுடன் கூடும் இல்லறத்தில் நாட்டம் குறைந்து விடும் என்றெல்லாம் அந்த மருத்துவர் அடுக்கிக் கொண்டேச் சென்றார்.

விடுபடும் வழி என்ன?

தனிமை அவசியம் தவிர்க்கப்பட வேண்டும். பாலியலைத் தூண்டக் கூடிய எதுவொன்றிலும் கவனம் செலுத்தக்கூடாது. பெண்களை மோசமாக சித்தரித்து கமெண்ட்ஸ் அடிக்கும் நண்பர்கள் வட்டம் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். தான் ஓர் உறுதியும், ஆரோக்யமும் உள்ள ஆண் மகனாக சமூகத்திலும் மனைவியிடமும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக பதித்துக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனுடன் அதிக தொடர்பையும் - மார்க்க சமூக அக்கறையுள்ள அவைப் பற்றி பேசி விவாதிக்கக் கூடிய நண்பர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் இருக்கக் கூடிய நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

'இறைவனை நினைவுக் கூறும் உள்ளங்கள் அமைதிப் பெறுகின்றன' என்று குர்ஆன் கூறுகிறது. அவனிடம் சரணடைந்தால் அனைத்துத் தொல்லைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
--------------------------
365) கேள்வி - திருவள்ளுவர் பற்றி உங்கள் கருத்தென்ன? நம் தமிழ் மக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் திருவள்ளுவர் நிறைய நல்ல கருத்துக்களை சொல்லி சென்றுள்ளார் என்று பெருமையாக பேசுகிறார்கள். அவரைப் பற்றி எனக்கு எந்த விபரமும் தெரியவில்லை. உங்கள் கருத்தை சொல்லுங்களேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களின் உயர்வை எப்படிச் சொல்லி புரிய வைக்க வேண்டும்? naayub@

'சொல்லுதல் யாருக்கும் எளியவாம் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்கிறார் திருவள்ளுவர். ஒருவரை முன்னுதாரணமாகக் கொள்வதற்குரிய மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான அளவுகோல் இதுவாகும்.

ஒன்றை சுவைப்பட சொல்வது, தத்துவார்த்த முறையில் சொல்வது, மயக்கும் விதத்தில் சொல்வது, பெரிய காரியமல்ல. இன்றைய உலக அரசியல்வாதிகள், போலி ஆன்மிகவாதிகள் சொல்லி.. சொல்லி.. சொல்லி...சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சொன்னபடி வாழ்கிறார்களா..? இல்லை.

எழுத்தாளர்கள் - பத்திரிக்கையாளர்கள் - பேச்சாளர்கள் உட்பட வெளியுலகில் பரிச்சயமானவர்கள் அனைவருமே 'என்னைப் பார்க்காதே என் கருத்தைப் பார்" என்ற வெட்கங்கெட்ட வார்த்தையையே தாரக மந்திரமாக மொழிந்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில் நிவர்த்தி செய்ய முடியாத மிக நீண்ட இடைவெளி மனிதர்களிடம் மண்டி கிடைப்பதை பார்க்கிறோம். 'சொல்லுதல் எளிதுதான் சொல்லியவண்ணம் வாழ்வதுதான் கடினம்'.

உபதேசம் செய்பவரைப் பற்றிக் கவலையில்லை. உபதேசங்களே வாழ்க்கைக்கு முக்கியம் என்று நினைத்தால் கோடான கோடி உபதேசிகள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக அல்லது அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராகத்தான் திருவள்ளுவர் இருப்பார்.

அவர் வாழ்ந்த காலகட்டத்தை கருத்தில் எடுத்துக் கொண்டால் திருவள்ளுவர் ஒரு மிக சிறந்த அறிவாளி என்பதில் மாற்றுக் கருத்துக் கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. ஆனால் ஒருவருடைய அறிவு மட்டுமே அவர் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு சான்றல்ல. எனவே திருவள்ளுவரிடமிருந்து நல்ல உபதேசங்களை எடுத்துக் கொள்ளலாமே தவிர அவரை வாழ்க்கைக்கு முன்னுதாரனமாக்கிக் கொள்ள முடியாது. காரணம் அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பது யாருக்குமே தெரியாது.

சொன்னது எதுவோ அதுவே எனது வாழ்க்கை என்று சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில் கடுகளவும் வித்தியாசமில்லாமல் வாழ்ந்துக் காட்டிய ஒரே மாமனிதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தான்.

அதனால் தான் அவர்களால் 'என் வார்த்தைகளை பின்பற்றுங்கள் என்று உபதேசிக்காமல் என்னை முழுவதுமாக பின்பற்றுங்கள்" என்று துணிச்சலாக சொல்ல முடிந்தது.  வார்த்தையும் - வாழ்க்கையும் ஒன்றாகி போனவர்களால் மட்டுமே மனித குலத்தை கொடுமையிலிருந்து மீட்டெடுக்க முடியும். அதில் என்றென்றைக்கும் முதலிடம் வகிப்பவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டும் தான்.

அவர்களின் வாழ்க்கையை விளக்கி ஏராளமான வரலாற்று நூல்கள் தமிழில் வந்துள்ளன. அவற்றில் மிகச் சிறந்த வரலாற்று ஆவணத் தொகுப்பு சகோதரர் பீ.ஜே அவர்கள் 'அல்-ஜன்னத்' மாத இதழிலும் பின்னர் 'ஒற்றுமை' இதழிலும் தொகுத்து எழுதிய 'மாமனிதர்' என்ற தொகுப்பாகும். புகாரி - முஸ்லிம் போன்ற வரலாற்று நூல்களிலிருந்து வாழ்க்கை சம்பவங்களை எடுத்து அவற்றை தற்கால உலக சூழலுடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளார். அந்த மாமனிதர் (ஸல்) அவர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் சிறந்த தொகுப்பாகும் இது.

அதேப் போன்று IFT நிறுவனம் மொழிப்பெயர்த்து வெளியிட்டுள்ள 'அண்ணல் நபியின் அழகிய வரலாறு' என்ற நூலைக் குறிப்பிடலாம். மிக எளிய நடையில் அவர்களின் வரலாறு எவ்வித குறைவும் இன்றி தொகுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நூல்களை எங்களால் பரிந்துரைக்க முடியும். இவைகளை வாங்கி பிறருக்கு கொடுத்து படிக்க வைத்தால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களைப் பற்றிய நல்ல அறிமுகம் கிடைக்கும்.
--------------------------
366) கேள்வி -  ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரம் பற்றி விளக்கும் நூல்கள் தமிழில் உள்ளனவா? heart092@

ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரத்தை அலசும் நூல்கள் அரபியில் ஏராளமாக இருக்கின்றன. ஒரு குழுத் தொடர்ச்சியாக மொழிப்பெயர்த்தாலும் அந்த பணி முடிய குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும். அது ஒரு விரிவான வசீகரத் தன்மையை உள்ளடக்கிய கலையாகும்.

தமிழில் அத்தகைய நூல்கள் எதுவும் இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. இப்படியும் அப்படியுமாக எதிர்காலத்தில் சில நூல்கள் வெளிவந்தாலும் அதனால் எந்த பிரயோஜனமும் ஏற்படாது என்பதே உண்மையாகும். ஹதீஸ் அறிவிப்பாளர்களை அலச வேண்டுமானால் குறைந்த  பட்சம் 'தஹ்தீபுத் தஹ்தீபு் 'தஹ்தீபுத் தர்கீப்' 'மீஸான்' போன்ற நூட்களாவது முழுமையாக வெளிவர வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger