Saturday, April 9, 2011

மனைவியிடம் பால் குடிப்பது ஹராமா..? பதில்கள் - 32

*இறைநம்பிக்கையை மறைக்கலாமா..
**மகளின் வாழ்வுக்காக கொள்கையை விட்டுக் கொடுக்கலாமா...
***பெண்கள் மெட்டி அணிதல்..
****விபச்சாரம் செய்யும் ஆணின் மனைவியும் அதே வழியிலா.. *****பிரசவத்தின் போது கணவன் பக்கத்தில் இருப்பது ஹராமா..
******அந்த 72 கூட்டம்..
*******சிவப்பு ஆடை,
********சலாம் சொல்லக் கூடாத நேரம்...
*********மனைவியிடம் பால் குடித்தால் மகனாகி விடுவார்களா..
**********அமுக்கு பிசாசின் அராஜகம்....
 
கேள்வி பதில் தொகுப்பு - 32

392) கேள்வி: நான் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸுலுஹூ என்று மனதலவில் ஏற்றுக் கொண்டேன். ஆனால் எனது பெற்றோர் உற்றார் உறவினர்கள் நான் இஸ்லாத்துக்கு மாறுவதை கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள். நான் என்னுடைய இஸ்லாமிய ஏற்பை பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் மிகுந்த மன வேதனையில் தவிக்கிறேன். என்னுடைய கேள்வி நான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவிக்காததற்காக மறுமையில் தண்டிக்கப்படுவேனா?

இறைவன் அவனை நம்பிய அடியார்களை கைவிடுவதில்லை. இறை நம்பிக்கைக் கொண்டுள்ள நமக்கு சில பொழுதுகளில் சில காரியங்கள் நெருக்கடியாக தெரிந்தாலும் அதற்காக நாம் மனம் சஞ்சலப்பட்டாலும் இறை நம்பிக்கையில் உறுதியுடன் நிலைப்பெற்றிருந்தால் அதற்கும் இறைவன் புறத்திலிருந்து கூலி கிடைத்து விடும் என்பதை இஸ்லாம் தெளிவாகவே சொல்லியுள்ளது.

இன்றைக்கு உங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள நிலையல்ல. இஸ்லாத்துடைய ஆரம்ப கால வரலாற்றை எடுத்து பார்த்தால் அன்றைய இறை நம்பிக்கையாளர்கள் கடின நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாத்தின் பகிரங்க எதிரியாக இருந்த உமர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை மக்காவில் மனம் மாறி இஸ்லாத்தை ஏற்றவர்களில் பெரும்பாலோர் உமர் போன்றவர்களுக்கு பயந்து தங்கள் இறை நம்பிக்கையை மறைத்தே வைத்திருந்தனர். இதற்கு இறைத்தூதர் அனுமதியும் அளித்தார்கள். உமர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு தான் அங்கு அனைவரின் இறை நம்பிக்கையும் பகிரங்க அறிவிப்பாகின.

சில நெருக்கடிகளை சமாளிப்பதற்காக இறை நம்பிக்கையில் - இஸ்லாத்தில் - அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள நிலையில் அதை வெளிக் காட்டாமல் மறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கவே செய்கிறது. கீழுள்ள இறை வசனம் அதை தெளிவாக அறிவிக்கிறது பாருங்கள்.

எவர் (ஈமான்) இஸ்லாமிய நம்பிக்கைக் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் இறை நிராகரிப்பைக் கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு (அல் குர்ஆன் 16:106)

'நான் இறை நம்பிக்கையாளன் தான்' என்று உள்ளத்தில் இஸ்லாம் இல்லாத நிலையில் யார் கிண்டலாக இறை நம்பிக்கையை எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை இந்த வசனம் முன் வைக்கும் அதே வேளைஇ இக்கட்டான சூழ்நிலைக்காக தனது இஸ்லாமிய நம்பிக்கையை தற்கலிகமாக மறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் பாவமான காரியமல்ல. என்பதையும் இறைவன் தெளிவுப்படுத்தியுள்ளான். இந்த வசனத்தில் இடம் பெறும் '.எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை)' என்ற வாசகம் உங்கள் மன அமைதிக்குரியது.

ஆனாலும் இஸ்லாம் ஒரு வாசனை மலருக்கு ஒப்பானது. அது உங்கள் வழியாக தனது வாசனையை வெளிப்படுத்தித் தான் தீரும். இறைவன் உங்களுக்கு அருள் புரிந்துள்ளான். உங்கள் வழியாக எத்துனைப் பேருக்கு இந்த பெரும்பாக்கியம் கிடைக்கப் போகிறது என்பதை அவன் தான் அறிவான்.

மிகவும் அமைதியாக சூழ்நிலையை அணுகுங்கள். எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற அவசர பேர்வழிகளிடம் முதலில் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாக சிந்திக்கக் கூடியவர்களிடம் வெளிபடுத்துங்கள். எந்த சந்தர்பத்திலும் நிதானம் இழந்து விடாதீர்கள்.

ஒருவேளை கடைசிவரை உங்கள் இஸ்லாமிய நம்பிக்கையை வெளிபடுத்த முடியாத நிலை ஏற்பட்டாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள் உங்கள் எண்ணத்திற்கும்இ முயற்சிக்கும் தகுந்த பலன் கிடைத்து விடும்.

இறைவனின் உவப்பிற்குரியவர்களே நேர்வழிப் பெறுவார்கள். அந்த வகையில் நீங்கள் பாக்கியம் பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள். உங்களுக்காக நாங்களும் இறைவனைப் புகழ்கிறோம். அவனுக்கு நன்றி செலுத்துகிறோம். எப்போதும் அவனுடன் தொடர்புடன் இருங்கள்.
----------------------------

393) கேள்வி - சிலபேர் எந்த முறையில் வேண்டுமாலும் தொழுது கொள்ளலாம் இறைவன் நமது உள்ளத்தைதான் பார்க்கிறான் நாம் நெஞ்ஞின் மீது கைகட்டி தொழுகிறோம என்று பார்ப்பதில்லை என கூறுகிறார்கள் . நாம் மாற்றி தொழுதால் நரகம் கிடைத்துவிடாது எனவும் கூறுகிறார்கள் இது சரியா?

தொழுகை என்பது இறைவன் விரும்பும் ஒரு அமலாகும். அதை இறைவன் விரும்பும் விதத்தில் தான் செய்ய வேண்டும். அவன் ஒரு தூதரை அனுப்பி அந்த தூதர் காலம் முழுவதும் தொழுது காட்டிஇ இப்படித்தான் தொழ வேண்டும் என்று கட்டளையும் இட்டு விட்டு போன பிறகு 'எப்படி வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் இறைவன் உள்ளத்தைத்தான் பார்க்கிறான்' என்றவாதம் எவ்வளவு அறியாமையானது என்பதை விளங்கலாம்.

'இறைவன் உள்ளத்தைத்தான் பார்க்கிறான்'  என்ற வாதத்தை முன்னிருத்தி பல முஸ்லிம்கள் தொழுவதே கிடையாது. காரணம் கூறும் போது நான் உள்ளத்தால் இறைவனோடு உறவாடுகிறேன் அது அவனுக்குத் தெரியும் என்றெல்லாம் உளறிக் கொட்டுகிறார்கள். இறைவன் உள்ளத்தைப் பார்க்கிறான் என்பது உண்மைதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கொள்ள முடியாது. கொள்ளக் கூடாது. உள்ளத்தை ஊடுறுவி அறியும் இறைவன் தான் இறைத்தூதர்களை அனுப்பி அவர்களை அவன் விரும்பும் விதத்தில் வாழவைத்து அவர்களை முஸ்லிம்களுக்கு மாடலாக்கி அவர்களைப் பின்பற்றுங்கள் என்று கட்டளையிட்டுள்ளான். 'அந்தத் தலைவரைப் பின்பற்ற வேண்டுமா..? என்ற குர்ஆன் விளக்கவுரைக் கட்டுரையில் இதை விரிவாக விளக்கியுள்ளோம் அவசியம் அதைப் படிக்கவும். (இங்கு கிளிக் செய்யுங்கள்)

'இறைவன் உள்ளத்தைப் பார்க்கிறான் அது போதும்' என்ற வாதம் இறைத்தூதர்களின் வாழ்க்கையைப் பொய்பிக்கும் வாதமாகும். இறைவன் உள்ளத்தைப் பார்க்கிறான். என்பதை உங்களையும் எங்களையும் விட மிகத் தெளிவாக விளங்கியவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்கள். இறைவனுடன் நேரடியாக உரையாடி வந்தவர்கள். அவர்கள் இரவு முழுதும் நின்று வணங்கி தன் நன்றியை வெளிப்படுத்தினார்கள். நெஞ்சில் கைக் கட்டித் தொழுதுள்ளார்கள். விரலசைத்துத் தொழுதுள்ளார்கள் என்றால் இதைவிட இன்றைக்கு சிலர் சொல்லும் 'இறைவன் உள்ளத்தைத்தான் பார்க்கிறான் எப்படி வேண்டுமானாலும் தொழுதுக் கொள்ளலாம்' என்ற வாதம் எந்த வகையில் சிறந்ததாகும் என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

-----------------------------

394) கேள்வி : எனக்கு 1998 ம் வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது அப்போது எனக்கு 'அகீகா' (பெண் குழந்தைக்கு 1ஆடும் ஆண் குழந்தைக்கு 2ஆடும்) கொடுக்கவேண்டும் என்ற சட்டம் தெரியாது தற்போது எனக்கு ஒரு சில ஹதீஸ்களை படிப்பதன் மூலம் தெரியவந்தது எனவே நான் தற்போது இதை கொடுக்கலாமா? எவ்வாறு எவ்வளவு கொடுக்கவேண்டும்? 

அகீகா என்பது குழந்தை பிறந்த சந்தோஷத்தை பிறருடன் பகிர்ந்துக்கொள்வதற்காக உள்ள ஏற்பாடாகும். வசதி படைத்தவர்கள் குழந்தை பிறந்த முதல் வாரத்திற்குள் அகீகா கொடுத்து விட வேண்டும். அதுதான் நபிவழி. அகீகா கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் வசதியும் இருந்தும் முதல் வாரத்தில் கொடுக்க முடியாதவர்கள் அடுத்து வரக் கூடிய நாட்களில் அந்த எண்ணத்தை நிறைவேற்றி விட நபிவழிகள் அனுமதியளிக்கின்றன. இந்த நாட்கள் கடந்து விட்ட பிறகு அகீகாவைப் பற்றி சிந்தித்து பலனில்லை. உங்களுக்கு குழந்தை பிறந்து 7 வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் இப்போது அகீகா கொடுக்க எண்ணுவது வேண்டாத ஒன்றாகும். நீங்கள் அகீகா கொடுக்க வேண்டும் என்ற அறிவை இப்போது பெற்றுள்ளீர்கள். இறைவன் நாடி அடுத்த குழந்தை உங்களுக்கு பிறந்தால் அந்த குழந்தைக்கு அகீகாவை நிறைவேற்றி சந்தோஷப்படுங்கள்.

-----------------------------

395) கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)எனது மகளை மணம் முடித்து 1 வருடம் ஆகிறதுஇ இப்போது அவள் ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறாள் (அல்ஹம்துலில்லாஹ்) பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்த வேண்டும் என என்மகளின் புகுந்த வீட்டார் நிர்ப்பந்தம் செய்கிறார்கள்இ எனக்கோ அதில் விருப்பமில்லைஇ இப்போது தாயாகியிருக்கும் என் மகள் பிறந்தபோதே இது போன்ற அனாச்சாரங்களை ஒதுக்கி வந்தவன் நான். இப்போது என் முன்னே நிற்பது கொள்கையா? மகளின் வாழ்வா?என்ற ஊசலாட்டம். நிர்பந்தத்துக்கு பனிந்து விழா நடத்தினால் அல்லாஹ்வின் (வீண் விரயம் செய்யாதீர்கள்) என்ற கட்டளைக்கு மாறு செய்தவனாகி விடுவேனோ என்று பயமாக உள்ளதுஇ இப்பிரச்சினையில் நான் என்ன செய்வது?

இது ஒரு இக்கட்டான நிலை என்று எண்ணாதீர்கள் அதுவே உங்களை மனத்தளர்ச்சி அடைய செய்து விடும். புகுந்த வீட்டுடன் எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று உங்கள் மகளுக்கு அறிவுரை சொல்லி விட்டு அவர்களுடன் நீங்கள் பேசுங்கள். உங்கள் சம்மந்திகளுடன் பேசுவதை விட உங்கள் மருமகனுடன் பேசுங்கள். அவர் உங்கள் உணர்வுகளை புரிந்துக் கொண்டால் பிரச்சனை எளிதாக முடிவுக்கு வந்து விடும். விழாவை விட மார்க்கத்திற்கும் எங்கள் உணர்விற்கும் மதிப்பளியுங்கள் என்று கூறுங்கள். எங்களுக்கும் விழா கொண்டாட ஆசைதான். மார்க்கம் அதை விரும்பாததால் ஒதுங்கி நிற்கிறோம் என்பதை புரிய வையுங்கள்.

நிர்பந்தப்படுத்துபவர்கள் எதற்கும் அதே பாணியை கடைபிடிக்கவே செய்வார்கள். இன்றைய நிர்பந்தத்திற்கு பணிந்தால் அதையே காரணம் காட்டி அடுத்தடுத்த பிள்ளைகளுக்கும் இதே போக்கை மேற்கொள்ள துணிவார்கள். எனவே முடிந்தவரை அவர்களுடன் பேசி இத்தகைய போக்கை தவிர்ப்பதே பிற்காலங்களுக்கும் சரியான தீர்வாக அமையும்.
எத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கும் அவர்கள் கட்டுப்படும் நிலையில் இல்லை என்றால் அவர்களின் போக்குக்கு விட்டு விடுங்கள். உங்கள் எண்ணங்களை அறிந்த இறைவன் உங்களை குற்றம் பிடிக்க மாட்டான். இதற்காக மகளின் வாழ்வுடன் விளையாடும் போக்கை அடியோடு தவிர்க்கவும்.

--------------------------------

396) கேள்வி: பெண்கள் காலில் தங்கத்தில் மெட்டி அணியலாமா? விளக்கம் தரவும்.

பொதுவாக அனுமதிக்கப்பட்ட எதுவொன்றின் மூலமாகவும் ஆண்களோ - பெண்களோ தங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம். தங்கம் ஆண்களுக்கு விலக்கப்பட்டு பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். எனவே தங்கத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் மாற்றி உடம்பில் எந்தப்பகுதியில் வேண்டுமானாலும் அணிந்துக் கொள்ளலாம். அந்த வகையில் பெண்கள் தங்க மெட்டி - தங்க கொலுசு உட்பட எதுவும் அணியலாம் தடையொன்றும் இல்லை.

அதே சமயம் மெட்டி அணிவதற்காக சொல்லப்படும் காரணங்களை நாம் அலட்சியப்படுத்த வேண்டும். இந்து மதப் பெண்களில் திருமணமான பெண்கள் மட்டும் தான் மெட்டி அணிவார்கள். திருமணமாகி விட்டது என்பதன் அடையாளங்களில் ஒன்றாக அதை கருதுகிறார்கள். அம்மி மிதித்து மெட்டி அணிய வேண்டும் என்ற சடங்கை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். ஒரு முஸ்லிம் பெண் இந்த சடங்குகளில் எதுவொன்றோடும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. மெட்டி என்பது விரல்களில் அணிந்து அழகு படுத்திக் கொள்ளும் ஒரு நகை என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் இருக்க வேண்டும். திருமணமாகாத கன்னிப் பெண்கள். திருமணமானவர்கள்இ விதவைப் பெண்கள்இ விவாகரத்துப் பெற்றவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இதை அணியலாம்.

மெட்டியை மாற்றுமதத்தவர்கள் முக்கியமாக கருதுவதால் அதை நாம் அணியக் கூடாது என்று சிலர் கூறுவது பொருந்தக் கூடிய வாதமல்ல. பிற மதத்தவர்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சடங்கையும் காரணத்தையும் வைத்துள்ளார்கள். பெண்கள் கைகளில் அணியும் வளையல்கள் கூட நிரந்தரமில்லாத போக்கே அங்கு நீடிக்கின்றது. கணவன் இறந்தவுடன் குங்குமத்தை மட்டும் அழிக்காமல் கையோடு கையை அடித்து வளையல்களை நொறுக்கும் காட்சியை நாம் அறிந்துள்ளோம். பெண்கள் தலையில் பூ வைப்பதற்கும் அங்கு காரணம் உண்டு.

அதையெல்லாம் நாம் கருத்தில் எடுத்துக் கொண்டால் சில உடைகள் உட்பட எதையும் நம்மால் அணிய முடியாமல் போய்விடும். எனவே மார்க்கம் அனுமதித்த பொருள் என்றால் அதை முஸ்லிம் பெண்கள் அணியலாம் பிரச்சயையொன்றும் இல்லை.

-----------------------------

397) 'விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணைவைப்பவளையோ தவிர (வேறு பத்தினிப்பெண்ணைத்) திருமணம் செய்யமாட்டான்இ (இவ்வாறே) விபச்சாரியை-  விபச்சாரம் செய்பவனையோ அல்லது இணைவைப்பவனோ தவிர (பரிசுத்தமானவேறு யாரும்) திருமணம் செய்ய மாட்டாள் இ(த்தகையோரைத் திருமணம் செய்வ)து இறை நம்பிக்கையாளர்களின் மீது தடுக்கப்பட்டுள்ளது' என்று குர்ஆன் கூறுகிறது. எத்தனையோ குடும்பங்களில் ஒழுக்கமான பெண்களுக்கு குடி விபச்சாரம் போன்ற கெட்ட பழக்கங்கள் உள்ள கணவர்கள்  அமைகின்றார்கள். அப்படி என்றால் இவர்களின் மனைவிமார்களும் இவர்களைப் போன்றவர்களா?

ஒழுக்கமான பெண்களுக்கு கெட்ட கணவர்கள் அமைய மாட்டார்கள் என்பதோ விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு விபச்சாரிகள் தான் மனைவியாக அமைவார்கள் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.

விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் மனைவியை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்பதோ அவள் கெட்டுப் போய் இருப்பாளோ என்று மன உளைச்சலுக்கு ஆளாகி அவள் வாழ்வை பாழ்படுத்த வேண்டும் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.

வேறு என்ன கூறுகிறது அந்த வசனம்!

ஒரு ஆண் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும் தனக்கு வரும் மனைவி நல்லவளாக - ஒழுக்கமுள்ளவளாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். விபச்சார தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் திருமண வாழ்க்கையில் இணைகிறாள் என்றால் அவளும் கூட தன் கணவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் பிற பெண்களை மனதால் கூட தீண்டாதவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.

அவர்கள் அவ்வாறு விரும்பினாலும் அப்படி விரும்புவதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை என்றே அந்த வசனம் கூறுகிறது. ஒருவன் விபச்சாரம் செய்பவனாகவோ கெட்டவனாகவோ இருக்கும் போது அவன் தன்னைப் போன்றுள்ள ஒரு விபச்சாரியையோ அல்லது கெட்டவளையோ தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் அது தான் சரியான அளவுகோல் மனைவி ஒழுக்கமானவளாக அமைய வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் முதலில் அவன் எல்லா ஒழுங்கீனங்களையும் விட்டு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளட்டும் என்பதே நீங்கள் எடுத்துக் காட்டிய வசனம் சொல்லும் அறிவுரையாகும்.

கணவனின்றி தவறான வழியில் வாழும் ஒரு பெண் திருமணத்தை நாடும் போது தனக்கு கணவனாக வருபவன் யோக்கியனாக இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. ஏனெனில் தவறான வழியில் உழலும் அவளுக்கு இப்படிப்பட்ட கணவன் தகுதியானவனல்ல. அதிகபட்சமாக அவளைப் போன்றே நாற்றமெடுத்த ஒருவனைத் தான் அவள் மணமுடிக்க வேண்டும் என்பதே அந்த வசனம் முன் வைக்கும் வாதமாகும்.

தவறான வழியில் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் எத்துனையோ ஆண்களுக்கு ஒழுக்கமும் - கண்ணியமும் மிக்க மனைவிகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தன் மனைவியின் ஒழுக்கத்தையும் நன்நடத்தையையும் பார்த்து அத்தகைய கணவர்கள் வெட்கி தலைகுனிந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

நல்ல கணவர்களுக்கு கெட்ட மனைவி அமைந்து விடுவதும் நடக்காமலில்லை. ஒரு ஆண் கறைப்பட்டால் அது அவனோடு போய்விடும். பெண் கறைப்பட்டால் அது அவளது குடும்பத்தையே பாதிக்கும் என்பதால் நல்ல கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட தீய நடத்தையுள்ள பெண்கள் சிந்தித்து தங்கள் தவறுகளிலிருந்து விடுபட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். நல்ல கணவர்கள் இத்தகைய மனைவிகள் விஷயத்தில் பொறுமையை மேற் கொள்ள வேண்டும் என்பதற்கு நபிமார்களான நூஹு மற்றும் லூத் (அலை) ஆகியோரிடம் பாடம் உள்ளது.  (மேலதிக விளக்கத்திற்கு 289வது கேள்விக்கான பதிலை பார்க்கவும்)

-------------------------------

398) கேள்வி: நகைக்கு ஒவ்வொரு வருடமும்; ஸகாத் கொடுக்க வேண்டுமா? நாண் சிலதை தான் பாவிக்கிறேன் . நான் 2 வரூடம் கொடுத்து வந்தேன். விளக்குங்கள் பாத்திமா லண்டன்.

நீங்கள் பாவிக்கக் கூடிய நகையாக இருந்தாலும் சரி, பீரோ, பேங்க் லாக்கர் போன்ற இடங்களில் வைத்து பாதுகாக்கும் நகையாக இருந்தாலும் சரி அவை உங்கள் சொத்தேயாகும். அத்தியாவசிய தேவைக்கு போக மீதமுள்ள மொத்த சொத்துக்கும் கணக்கிட்டு வருடந்தோரும் ஜகாத் கொடுக்கத் தான் வேண்டும். தங்க நகைகளைப் பொருத்தவரை அவை மேலதிக சொத்துக்களாகவே இஸ்லாம் கருதுகிறது. எனவே தங்க நகைகள் அனைத்திற்கும் ஜகாத் கொடுக்கத் தான் வேண்டும். கொடுக்காமல் விடுபட்டிருந்தால் அவைகளுக்கும் கணக்கிட்டு கொடுத்துவிடுங்கள். நீங்கள் வசிக்கும் லண்டனில் ஜகாத் பெற தகுதியுள்ளவர்களை தேட முடியாத நிலை இருந்தால் உங்கள் தாய் மண்ணான இலங்கையில் ஜகாத் தேவையுள்ளவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுப்புங்கள். ஒரு முறை கொடுத்து விட்டு நிறுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

ஆண்டுதோறும் கணக்கிட்டு கொடுக்கப்படத்தான் வேண்டும்.

---------------------------------

399) கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும்.. ஹலோ..நான் நஜ்மிலா இஸ்மின் நெதர்லாந்திலிருந்து..ஒரு விஷயம் பற்றி விளக்கம் பெற விரும்புகிறேன்.. நீங்கள் எனக்கு உதவ முடியும் என்று நம்புகிறேன்.. அதாவது நான் கற்பமாக இருந்தேன், பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் எனது கணவர் என்னருகில் இருந்தார். எங்களது குடும்ப நண்பர் ஒருவர் இது ஹராம்இ இவ்வாறு கணவர் பிரசவ நேரத்தில் உடனிருப்பது தவறு என்று சொன்னார். எனது கேள்வி.. ஒரு கணவர் தனது மனைவியின் அருகில் பிரசவ நேரத்தில் இருக்கலாமா? கூடாதா? விளக்கம் தரவும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். 

நல்லக் கேள்வி. கணவன் - மனைவிக்கு மத்தியிலுள்ள உறவு என்பது படுக்கையறை உறவு மட்டுமல்ல. கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அனைத்து வகையிலும் உதவ வேண்டிய உறவே கணவன் மனைவிக்கு மத்தியில் இருக்கும் சிறந்த உறவாகும்.

சமைப்பதற்கு பெண், சாப்பிடுவதற்கு ஆண். துவைப்பதற்கு பெண், உடுத்துவதற்கு ஆண் என்று குடும்பத்தில் பெண்ணை உழைப்பாளியாகவும் ஆணை முதலாளியாகவும் ஆக்கி வைத்துள்ள போக்கு ஆணாதிகத்தின் குறியீடாகும்.  இதனால் தான் மனைவியின் கஷ்டத்தை அனேக ஆண்களால் புரிந்துக் கொள்ள முடியாமலே போய் விடுகிறது.

நபி(ஸல்) வீட்டில் இருந்தால் எங்களோடு குடும்பப் பணிகளில் ஒத்தாசை செய்வார்கள். பாங்கு சொன்னவுடன் பள்ளிக்கு செல்வார்கள் என்று அன்னை ஆயிஷா(ரலி) சொல்கிறார்கள் (புகாரி)

இதுதான் சிறந்த குடும்பத்திற்கு அடையாளம்.

உடலோடு கலந்து விடுவதுதான் இல்லறம் என்று இல்லறத்திற்கு வெறும் பாலியல் சாயம் மட்டும் பூசாமல் அது உள்ளத்தோடும்இ உணர்வோடும் கலந்துப் போகக்கூடிய ஒரு வாழ்க்கை என்பதை ஆண் மகன்  உணர்ந்தால் அந்த கணவன் மனைவிக்கு மத்தியில் ஆயிரம் சந்தோஷங்கள் பூவாய் மலர்ந்துக் கொட்டும். இந்த சந்தோஷம் எப்போது சாத்தியம் என்றால் மனைவியை புரிந்துக் கொண்டு அவளுக்காக வாழ்வதில் தான்.

மாதவிடாய் சந்தர்பங்களில், குழந்தை பெற்றெடுக்கும் சந்தர்பங்களில் பெண் அனேக துன்பத்திற்கு ஆளாகிறாள். இந்த துன்பங்களை கணவன் கண்டு அறிய முடிவதில்லை.  மனைவி குழந்தை பெற்றெடுக்கும் போது கணவன் அருகில் நின்று பார்க்க வேண்டும். அப்படி நடந்தால் அந்த சந்தர்பத்தில் மனைவிக்கு அது ஒரு பெரும் ஆருதலாகவும்இ அவளை புரிந்துக் கொண்டு கூடுதலாக நேசிப்பதற்கு கணவனுக்கு ஒரு தூண்டுதலாகவும் அது இருக்கும் என்று உளவியல் துறை அறிஞர்களும், டாக்டர்களும் கருதுகிறார்கள். ஒரு குழந்தைக்கும் அடுத்து குழந்தைக்கும் போதிய இடைவெளி விட இது வழிவகுக்கும் என்பதும் அவர்களின் முடிவாகும்.

இல்லறத்தில் ஒருவருடன் ஒருவர் கலந்து இரண்டற ஆகிவிட்ட பிறகு 'பிரசவ நேரத்தில் கணவன் - மனைவியின் பக்கத்தில் இருப்பது ஹராம்' என்பதற்கு எதை ஆதாரமாக எடுத்துக் காட்டுவார்களோ தெரியவில்லை.

உங்கள் குடும்ப நண்பர் எங்கோ வெளியில் கேள்விப்பட்டதை உங்களிடம் கூறி இருக்கலாம். இஸ்லாமிய சட்டம் அதை ஹராமாக்கியுள்ளது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை.

----------------------------------

400) கேள்வி: நோன்பில் இறந்து போவோருக்கு சொர்க்கம் என்று சொல்கிறார்களே அது உண்மையா?

நோன்பில் இறந்துப் போவோருக்கு, ஹஜ்ஜில் இறந்துப் போவோருக்கு, மக்காவில் இறந்துப் போவோருக்கு, இன்னும் சில நாட்களைக் குறிப்பிட்டு இந்த நாட்களில் இறந்துப் போவோருக்கெல்லாம் சுவர்க்கம் என்ற நம்பிக்கை பரவலாக நம் மக்களிடம் இருப்பதைப் பார்க்கிறோம். அல்லாஹ்விற்காக போர்களம் சென்று தன்னுயிரை அற்பணிக்கும் உயிர் தியாகிகளைத் தவிர மற்ற நாட்களில் மரணிப்பவர்களுக்கு சுவர்க்கம் என்ற நம்பிக்கையெல்லாம் ஆதாரமற்ற வெறும் யூகமே - நம் மக்களின் கண்டுபிடிப்பேயாகும்.

நோன்பில் நோன்பே வைக்காதவர்கள் கூட இறந்துப் போவார்கள் என்பதையெல்லாம் இந்த மக்கள் சிந்தித்தால் இந்த நம்பிக்கைகளைத் தூக்கி எறிந்து விடுவார்கள்.

-----------------------------------

401) கேள்வி: சலாம் சொல்லக் கூடாத சமயம் எது? சாப்பிடும் போது சலாம் சொல்லலாமா..? 

மலம் சிறுநீர் கழிக்கும் சந்தர்பங்களைத் தவிர சலாம் சொல்லக் கூடாத நேரம் என்றெல்லாம் எதுவுமில்லை.

மல ஜலம் கழிக்கும் போது பேசிக் கொள்ளும் மனிதர்களை அல்லாஹ் வெறுக்கிறான் என்று ஒரு செய்தியுள்ளது. (நஸயி) பேசிக் கொள்ளக் கூடாது என்பதிலிருந்தே அந்த சந்தர்பங்களில் சலாம் சொல்லக் கூடாது என்பதை விளங்கலாம்.

நபி(ஸல்) சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் சலாம் சொன்னார். நபி(ஸல்) சிறுநீர் கழித்து முடியும் வரை பதில் சொல்லாமல் தன் தேவை முடிந்ததும் என்னை இந்த நிலையில் பார்த்தால் சலாம் சொல்லாதே.. என்று சொன்ன செய்தி முஸ்லிமில் வருகிறது.

இது தவிர மற்ற எந்த சந்தர்பங்களிலும் சலாம் சொல்லிக்கொள்ளலாம். சாப்பிடும் போது சலாம் சொல்ல தடையில்லை.

-----------------------------------

402) கேள்வி: அந்த 72 கூட்டதினர் என்றால் என்ன? யார் அவர்கள்?

மார்க்க அறிவற்ற நிலை, பிரித்தாளும் சூழ்ச்சி, பதவிமோகம் போன்ற அனேக காரணங்களுக்காக சிலரால் சமுதாயம் கூறுபோடப்படுகிறது. அதை சுட்டிக் காட்டி எச்சரித்து முறைப்படுத்தும் செய்தியே நபி(ஸல்) அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட அந்த செய்தியாகும்.

பனு இஸ்ரவேலர்கள் (மூஸாவின் சமுதாயம்) 71 பிரிவானார்கள். நஸாராக்கள் (ஈஸாவின் சமுதாயம்) 72 பிரிவானார்கள். எனது சமுதாயம் 73 பிரிவாக பிரியும். நானும் என் தோழர்களும் இன்றைக்கு எப்படி இருக்கின்றோமோ அப்படி இருப்பவர்களைத் தவிர பிற 72 கூட்டம் நரகம் செல்லும் என்ற முன்னறிவிப்பு அந்த செய்தியில் உள்ளது. முஸ்லிம் உம்மத்துக்கு உள்ளேயே தம்மை தனிமைப்படுத்தி, தனிக் கூட்டம் கூட்டி, அரசியல் காரணங்கள் உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக மக்களை பிரித்து வைத்திருக்கும் ஒவ்வொருவரும் 73வது கூட்டம் நாம் தான் என்று தமக்கு தாமே முத்திரைக் குத்திக் கொள்கிறார்கள்.

நபி(ஸல்) வாழ்ந்துக் காட்டியப்படி ஒருவரோ ஒரு குழுவோ இங்கு வாழ்ந்தாலும் கூட அவர்கள் தங்களை அந்த 73வது கூட்டமாக அடையாளம் காட்ட அனுமதியில்லை. அந்த அறிவிப்பு சுவர்க்கம் செல்ல தகுதியான ஒரு குழுவை மறுமையில் இறைவன் பிரித்தெடுப்பதைத் தான் கூறுகிறதே தவிர இந்த உலகில் குரூப்பிஸம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பதை அனுமதித்து வந்த அறிவிப்பல்ல.   இந்த செய்தி தவறாக விளங்கப்பட்டதால் தான் அனைத்து பிரிவினருமே தங்களை 73வது கூட்டம் என்று கூறிக் கொள்கிறார்கள்.

உண்மையில் சமுதாயப் பிரிவினை என்பது ஒரு பிரிவினர் மற்றவர் மீது ஏதோ ஒரு விதத்தில் துன்பம் விளைவிக்கும் போக்கையே ஏற்படுத்தும். அதனால் 73வது கூட்டம் நாம் தான் என்று கூறிக்கொள்பவர்கள் பிறர் மீது ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்கிறார்கள்.

உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் அளிக்கும் துன்பத்தை வேறு சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்'' எனும் (திருக்குர்ஆன் 6:65)

இந்த வசனத்தை நாம் ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். உம்மத் பல குழுக்களாக பிரியும் போது சிலர் மற்ற சிலரால் துன்பத்துக்குள்ளாகுள்ளாவார்கள் என்ற எச்சரிக்கையை இறைவன் இந்த வசனத்தில் முன் வைக்கிறான்.

இந்த வசனத்தின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி பிரிவினையை சரிகாண்பவர்கள் பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவதையோ - துன்பம் விளைவிப்பதையோ தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்பதை நாம் கண்டு வருகிறோம்.

எனவே எந்த ஒரு ஆதாரமும் சமுதாய பிரிவினையை - கொள்கை ரீதியாகவோ இன்ன பிற காரணங்களுக்காகவோ பிரிவதை அனுமதிக்கவேயில்லை.

மேலும் நேர்வழிக்காக தொடர்ந்து பிரார்த்திக்க கற்றுக் கொடுக்கிறான் இறைவன். நேர்வழிக்காக தொடர்ந்து பிரார்த்திக்க கடமைப்பட்ட முஸ்லிம் நான் நேர்வழிப் பெற்றுவிட்டேன். 73வது கூட்டத்தில் ஐக்கியமாகி விட்டேன் என்று எப்படிக் கூற முடியும்?

'இறைவா.. உன் கோபத்திற்குள்ளானவர்கள், வழிதவறியவர்கள் சென்ற வழியல்லாத நீ அருள் புரிந்தவர்களின் வழியில் என்னை நடாத்து' என்ற பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்யும் காலமெல்லாம் நான் நேர்வழியைப் பெற்று விட்டேன் என்று இருமாப்புக் கொள்ளும் தகுதியை இழக்கிறான்.

மறுமையேஇ யார் நேர்வழிப் பெற்றவர்கள், யார் வழித்தவறி சென்று பாழ்பட்டுப் போனவர்கள் என்பதை துள்ளியமாக தீர்மானிக்கும் இடமாகும். அந்த 73வது கூட்டம் அங்கு பிரித்துக் காட்டப்படும். அதுவரை அந்தக் கூட்டத்தாருடன் மறுமையில் இணைவதற்காக இறைவன் கற்றுக் கொடுத்துள்ள பிரார்த்தனையை செய்துக் கொண்டு குர்ஆன் சுன்னா அடிப்படையில் நடந்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் நமது கடமை.
அந்த 72 பிரிவினர் யார் என்றெல்லாம் நம்மால் தீர்க்கமாக சொல்ல முடியவில்லை. நபி(ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு ஏராளமான பிரிவுகளை இந்த முஸ்லிம் உம்மத் கண்டுள்ளது. அவற்றில் தோன்றி உடன் மறைந்தவையும்இ சில - பல காலம் நீடித்து மறைந்தவையும், இன்று வரை நீடிப்பவையும் உண்டு. பிரிவென்று நாம் கருதுபற்றை கணக்கிட்டால் அவை 72யும் கடந்து செல்லும். நபி(ஸல்) எந்த நோக்கத்தில் 73 என்ற எண்ணிக்கையை குறிப்பிட்டார்கள் என்பது ஆய்வுக்குரியதாகும்.

முஸ்லிம் சமுதாயத்திலிருந்து தம்மை பிரித்துக் காட்டிக்கொள்வதை விடுத்து உம்மத்தின் அங்கமாக இருப்பதே நமது கடமையாகும். எந்தக் கூட்டம் என்றும் முத்திரைக் குத்திக் கொள்ள வேண்டாம்.

---------------------------

403) கேள்வி: சிவப்பு நிறத்தில் ஆடை அணியலாமா?

'உஸ்புர்' என்ற ஒருவித பழுப்பு நிற (காவி) உடை உடுத்துவதைத்தான் நபி(ஸல்) தடுத்துள்ளார்கள். ஆண்களுக்கு பட்டு தடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வேறந்த நிரமும் தடுக்கப்படவில்லை.

நபி(ஸல்) சிவப்பு நிற உடை உடுத்தியிருந்தார்கள். அது அவர்களுக்கு மிகவும் அழகாக இருந்தது என்று அன்னை ஆய்ஷா(ரலி) அறிவிக்கும் செய்தி திர்மிதியில் வருகிறது. எனவே தாராளமாக சிவப்பு வண்ணத்தில் உடை உடுத்தலாம்.

--------------------------

404) கேள்வி: தங்களின் கேள்வி பதில் பகுதியில் ஒரு நண்பர் மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? என்று கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் இதற்கான பதிலை முன்னரே கேள்வி பதில் பகுதியில் வெளியிட்டுள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும் என பதிலளித்துள்ளீர்கள், நான் தேடிப்பார்த்த வரையில் அது சம்பந்தமாக தங்கள் தொகுப்பில் எதுவும் கிடைக்க வில்லை. 'தேடுக' பகுதி மூலமும் முயற்சி செய்துவிட்டேன் பலனில்லைஇ எனவே இதற்கான பதிலை அடுத்த தொகுப்பில் இடம் பெறச் செய்யவும்.

மனைவியின் மார்பில் வாய் வைத்து பால் குடித்தால் மனைவியின் பால் கணவனின் வயிற்றுக்குள் சென்று விடுவதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடுமோ என்பது பெருவாரியான முஸ்லிம்களுக்கு உள்ள சந்தேகம். உணர்ச்சி மேலீட்டால் அந்த காரியத்தை செய்து விட்டு பிறகு என்ன செய்வதென்று வழி தெரியாமல் தவிக்கும் முஸ்லிம்கள் அனேகம் பேர். சிலர் இது பற்றி மார்க்க தீர்ப்பு பெறுவதற்காக அரபு மதரஸாக்களை நாடுகிறார்கள். மதரஸாக்கள் பெரும்பாலும் மத்ஹபை சரிகண்டுக் கொண்டு இருப்பதால் நேரடியாக குர்ஆன் சுன்னாவைப் பார்த்து பதிலளிக்காமல் எடுத்தவுடன் 'ஆம் கணவன் மனைவி என்ற உறவு விலகி தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும்' என்று ஃபத்வா கொடுத்து விடுகிறார்கள். இத்தகைய ஃபத்வாக்களால் மார்க்க தீர்ப்பு கேட்ட சிலரது வாழ்க்கை பாழ்பட்டு போய் விட்டதை யாரும் மறுக்க முடியாது.

இத்தகைய ஃபத்வாக்கள் வருவதால் 'மார்க்க தீர்ப்பாவது மண்ணாங்கட்டியாவது' என்று மார்க்கத்தை அலட்சியப்படுத்தி விட்டு சந்தேகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் காரியத்தை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லறத்தில் சேரும் அந்த பொழுதுகள் எத்துனை உணர்ச்சிப் பூர்வமானவை என்பதை விளங்காதவர்கள் தான் இத்தகைய முடிவுகளுக்கு வருவார்கள்.

தனக்கென்று ஒரு பெண்ணை மனைவியாக சொந்தப்படுத்திக் கொண்ட ஒரு ஆணுக்கு 'அந்த பொழுதில்' 'அந்தக் காரியத்தை செய்யாதே' என்று தடை விதிக்கப்பட்டிருந்தால் இதில் நூறு சதவிகிதமான ஆண்கள் வரம்பு மீறிவிடவே செய்வார்கள்.

மனைவி உங்களின் ஆருதலுக்குரியவள் என்று சொல்லியுள்ள இறைவன் இதற்கு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் வழியாகவும் தடையொன்றும் வரவில்லை.

ஆரம்ப காலங்களில் குழந்தைகளை செவிலித் தாய் (மாற்றுத் தாய்) இடம் கொடுத்து பால் கொடுத்து வளர்க்கும் முறை இருந்தது. (இன்றைக்கும் இங்கொண்றும் அங்கொண்றுமாக இது நடக்கின்றது) இப்படி பிற பெண்ணிடம் ஒரு குழந்தை பால் குடிப்பதால் பால் கொடுத்த அந்த பெண்ணிற்கும் பால் குடித்த இந்தக் குழந்தைக்கும் உள்ள உறவை இஸ்லாம் தாய் - மகன் என்ற உறவாக்கியது. பால் குடித்த அந்த குழந்தை வளர்ந்தால் தனக்கு பாலூட்டிய அந்த பெண்ணையோ அல்லது அந்த பெண்ணிடம் பாலருந்திய பிற பெண்ணையோ இந்த ஆண் திருமணம் செய்ய முடியாது.

இதற்கெல்லாம் காலவரையறை என்ன? எப்போது பால் குடித்தாலும் தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடுமா..? என்பதெற்கெல்லாம் இஸ்லாம் பதில் சொல்லி விட்டது. தாய் மகன் என்ற உறவு ஏற்பட வேண்டுமென்றால் ஒரு குழந்தை இரண்டு வயதுக்குட்பட்ட காலங்களில் எத்துனை பெண்களிடம் பாலருந்தி இருந்தாலும் அத்துனைப் பெண்களும் அந்த குழந்தைக்கு தாய் என்ற அந்தஸ்த்தில் வந்து விடுவார்கள். இரண்டு வயதை கடந்த பிறகு எந்த பெண்ணிடம் அந்த குழந்தை பால் குடித்தாலும் அவர்களுக்கு மத்தியில் தாய் - மகன் என்ற உறவு ஏற்படாது என்பதுதான் இஸ்லாம் விளக்கியுள்ள பதிலாகும்.

குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் பூரணமாக பெற்றத் தாய் பாலூட்ட வேண்டும் (அல் குர்ஆன் 2:233)

பால்குடி உறவு ஏற்படுவதற்கான காலகட்டம் இந்த இரண்டு ஆண்டுகள் தான். இதை கீழ் வரும் நபிமொழி அறிவிக்கின்றது.

நபி(ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், 'இவர் என் (பால்குடி) சகோதரர்'' என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (குழந்தைப் பருவத்தில் அருந்தியிருந்தால்) தான்'' என்று கூறினார்கள். (ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த செய்தி புகாரியில் 5102.ல் இடம் பெறுகிறது)

குழந்தை பாலருந்தும் பருவத்தில் பசியின் காரணத்தால் வயிற்றை சென்றடையும் போதுதான் தாய் மகன் என்ற உறவு ஏற்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (உம்மு ஸலமா(ரலி) திர்மிதி)

இதே கருத்து இன்னும் சில ஹதீஸ்களிலும் வருகின்றது.

எனவே பால்குடி மறக்கடிக்கப்படும் இரண்டாண்டுகளுக்குள் ஏற்படும் இந்த உறவை கணவன் மனைவிக்கு பொருத்திக் காட்டுவது பெரும் அறியாமையாகும். மனைவியிடம் பால் குடித்தால் அவள் மனைவி என்ற அந்தஸ்த்தில் தான் இருப்பாள். இது இல்லறத்திற்கு உட்பட்ட காரியம் என்றே கருதப்படும்.

ஒரு விஷயத்தில் மட்டும் நாம் எச்சரிக்கையாக இருந்துக் கொள்ள வேண்டும். குழந்தையை பட்டினிப் போட்டுவிடக் கூடாது.

-------------------------------------

405) கேள்வி:  ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நான் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாக உணர்கிறேன். அதாவது யாரோ எனது முழு உடலையும் இறுக்கி அழுத்தி பிடித்துக் கொள்வதாக சில நிமிடங்கள் அவதிப்படுகிறேன். இந்த நேரத்தில் எனது வாய்இ கைகள் மற்றும் கால்கள் முற்றிலும் செயலிழந்து விட்டது போல் உணர்கிறேன். இது ஜின் அல்லது சைத்தானின் சேட்டையா? விளக்கவும். 

இந்த நிலைக்கு ஆட்படும் பலர் உடனடியாக இந்த முடிவுக்கே வந்து விடுகிறார்கள். அதாவது இது ஜின்கள் - ஷைத்தான்களின் காரியம் தான் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அதனால் அவர்களின் உள்ளத்தை ஒரு வித பயம் கவ்விக் கொள்கிறது. 'தன் மீது ஊமை பிசாசு ஏறி உட்கார்ந்துக் கொண்டது' என்று கூறுபவர்களும் உண்டு.

கை கால்களை அசைக்கமுடியாமல், பக்கத்தில் யாராவது இருந்தால் அவர்களைக் கூட அழைக்க முடியாமல், ஒரு இக்கட்டான அழுத்தம் சில நிமிடங்கள் நீடிக்கும்.

தூங்கும் போது தன்னையும் அறியாமல் இப்படியும் அப்படியுமாக புரண்டு படுத்து உறங்குபவர்கள் தான் உடல் கோளாறுகள் எதுவுமில்லாமல் உறங்குவார்கள். ஒரே பக்கமாக படுத்து உறங்குபவர்கள் உடம்பில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள். ஒரே பக்கமாக படுத்து உறங்குவதால் இரத்த ஓட்டங்களில் தடைப்பாடு - மாறுபாடு ஏற்படும் போதுதான் எழுந்ததும் உடல் வலி போன்றவற்றை உணர்வார்கள்.

உறக்கத்தில் ஏற்படும் கெட்டக் கனவு, அல்லது பயந்த உணர்வு, உங்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை, எத்துனை மணி நேரம் தூங்கினாலும் எழுந்தவுடன் தூக்கமே சரியில்லை என்ற உணர்வு, கண்கள் சிவந்து போதல் போன்ற அனேக மாறுபாடுகளுக்கு நமது உடல் கோளாறுகளே காரணமாகும். சில பொழுது மட்டும் இத்தகைய நிலையை உணர்ந்தால் அதற்கு முந்தைய பொழுது அவர்கள் சாப்பிட்ட உணவு காரணமாக இருக்கலாம்.

எனவே இது போன்ற நிலை தொடர்ந்தால் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். பிற பேய் - பிசாசு என்ற பயமெல்லாம் வெறும் வெத்துப் பேச்சாகும்.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger