Sunday, April 3, 2011

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..! வரலாறு - 6

இயேசு அற்புதமான முறையில் பிறந்து பிறந்தவுடன் தன் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திரவாதம், இயேசுவின் அற்புத பிறப்பில் பொதிந்துள்ள விஞ்ஞான உண்மை – அத்தாட்சிப் போன்றவற்றை கடந்த தொடர்களில் கண்டோம். (குறிப்பாக தொடர் – 4) இத்தொடரில் இயேசுவின் முதல் பேச்சில் பொதிந்துள்ள ஆழத்தையும், கிறிஸ்த்தவர்கள் பெற வேண்டிய பாடத்தையும், முஸ்லிம்களிடம் இருக்கக் கூடிய சந்தேகங்கள் அதற்கான பதில்கள் இவைகளைப் பார்ப்போம்.

ஈஸா – இயேசு முதல் முதலில் வாய்திறந்தவுடன் சொன்ன வார்த்தை அவரது அடிமைத்தனத்தை வெளிபடுத்துகின்றது.

‘இன்னி அப்தல்லாஹ்’ நிச்சயமாக நான் கர்த்தரின் அடிமையாவேன். இறைவனுக்கு முன், அவனது பணியில் தனது அடிமைத்தனத்தை வெளிபடுத்துவதற்கு எந்தத் தீர்க்கதரிசியும் தயங்கியதே இல்லை.

மஸீஹ் (என்ற ஈஸாவும்) இறைவனுக்கு நெருக்கமான வானவர்களும் அவனுக்கு அடிமையாக இருப்பதில் ஒரு போதும் இருமாப்புக் கொள்ள மாட்டார்கள் என்று இறைவன் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். (அல் குர்ஆன் 4:172)

அடியாராகப் பிறந்து அடியாராகவே இறைப் பணி செய்து, அடியாராகவே இன்றுவரை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஈஸா பிற்காலத்தில் ஞானமில்லாத சிலரால் தேவக்குமாரனாக்கப்படுவார் என்பதையும் அது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்த்தும் விதமாகவே அவர் முதன் முதலில் பேசிய பேச்சிலேயே ‘நான் இறைவனின் அடிமைத்தான்’ என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றார்.

நான் இறைவனின் அடிமைத்தான். ஆனால் இறைவன் என்னை அழைப்புப் பணிக்காக நியமித்துள்ளான். எனக்கு வேதத்தையும் வழங்கியுள்ளான் என்பதை அடுத்துக் கூறுகிறார்.

 ஆதானியல் கிதாப வஜஅலனி நபிய்யா.


ஈஸாவிற்கு வேதம் கொடுக்கப்பட்டது. அந்த வேதத்தின் பெயர் இன்ஜில் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. இறைத்தூதர்களுக்கு வேதங்கள் வழங்கப்பட்டன. வேதமில்லாமல் யாரும் இறைத்தூதராக வரவில்லை.

அப்படியே வந்தாலும் கடைசியாகவும், அவர்களுக்கு முந்தியதாகவும் வந்த வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பிலேயே அவர்கள் வந்துள்ளார்கள்.

ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டது. இன்றைக்கு அரபு மொழி பேசும் கிறிஸ்த்தவர்கள் தங்களிடம் உள்ள பைபிளை ‘இன்ஜில்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அதை இன்ஜில் என்று குறிப்பிட்டாலும் இறைவன் ஈஸாவிற்கு வழங்கிய இன்ஜிலுக்கும் இன்றைக்கு இவர்களிடம் இருக்கும் பைபிளுக்கும் சம்மந்தம் எதவுமில்லை. கேள்விப்பட்டதையும் – மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இஸ்ராயீலின் சந்ததியிடம் கர்த்தர் செய்துக் கொண்ட உடன்படிக்கையை அவர்கள் மாற்றிக் கொண்ட விபரங்கள், வேதவசனங்களில் பலவற்றை மறந்து மறைத்து விட்ட விபரங்கள் பற்றிய அறிவிப்பு அல்குர்ஆன் 5:12,13,14 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. (இதபற்றி நமக்கும் கிறிஸ்த்தவர்களுக்கும் மத்தியில் நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் நாம் விரிவாக பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்)

ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டு அதை வைத்து அந்த மாபெரும் இறைத்தூதர் இஸ்ரவேலர்களை இறைவனின் பக்கம் அழைத்துள்ளார். யுதர்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஆனால் இறைவன் அவரைக் கைப்பற்றிய பிறகு அனேகக் காரணங்களால் அந்த வேதம் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்டது. (இயேசுவையே ஒழித்து விட வேண்டும் என்று கொலை வெறிப்பிடித்தலைந்தவர்கள் அவரது போதனைகளை விட்டு வைப்பார்களா.. வேதமாற்றங்களுக்கு இதுவும் காரணமாக அமைந்திருக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளார்கள்).

முஸ்லிம்களைப் பொருத்தவரை முந்தைய இறைத்தூதர்களுக்கு வேதம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நம்புவார்கள். ஆனால் இன்றைக்குள்ள வேதங்கள் தான் அவை என்று கூறினால் அந்தப் பொய்யை நம்ப மாட்டார்கள்.

இறைவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கியுள்ளான் என்ற ஈஸாவின் அடுத்த பேச்சு அவர் கொண்டு வந்த தூதுத்தவத்தின் ஆழத்தை உணர்த்துகின்றது.

வஜஅலனி முஃபாரகன் ஐனமாகுன்து.

நான் எங்கிருந்தாலும் அவன் என்னை பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான்.

இந்த வார்த்தைகளும் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். கிறிஸ்த்தவத்தின் அநேக நம்பிக்கைகளுக்கு பதில் சொல்லும் வசனம் இது.

பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான் என்ற வார்த்தை சிலுவை சம்பவத்திற்கு எதிரானதாகும். தலையில் முள் கிரிடம் சூட்டி, சுமக்க முடியாத பெரும் துன்பத்துடன் சிலுவையை சுமந்து, சாட்டையால் அடிக்கப்பட்டு தெரு முழுதும் இழுத்துச் செல்லப்பட்டு அனேக இழிநிலைக்கு இயேசு ஆளானார் என்ற மொத்த நம்பிக்கைக்கும் மறுப்பு இந்த வார்த்தையில் உள்ளது.

மனிதர்களின் பார்வையில் இத்தகைய இழிநிலைக்கு ஆளானவர்களை பாக்கியம் பொருந்தியவன் என்று யாரும் கூறமாட்டார்கள். கர்த்தரின் பாதையில் உழைக்கும் பொது ஏற்படும் இழப்புக்கு கர்த்தர் சிறந்த கூலி கொடுப்பார். என்பது வேறு விஷயம். துன்பத்திற்கு ஆளாகாமல் சுவர்க்கம் என்ற பெரு வாழ்வு கிடைக்காது என்பதால் இறை நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை துன்பங்களும் பாக்கியம் தான்.

ஆனால் இயேசு விஷயத்தில் (குறிப்பாக இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைக்கு) அந்தப் பொருள் கொடுக்க முடியாது.

ஏனெனில் அந்த வசனத்தில் ‘நான் எங்கிருந்தாலும்’ என்ற சொல்லை அவர் பயன்படுத்துகின்றார். இயேசுவை முடிந்த அளவு இழிவுபடுத்திக் கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் (ஆட்சியாளர்களின்) திட்டம் மொத்தமாக பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. இயேசுவின் கண்ணியம் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் கர்த்தர் இயேசுவை பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.

‘நான் எங்கிருந்தாலும்’ என்ற அந்த வார்த்தையை ஈஸா அவர்கள் பயன்படுத்தியதின் மூலம் சிலுவை சம்பவம் கேள்விக்குறியாக்கப்பட்டு விடுகின்றது.

இயேசு தன் தாய் வயிற்றில் உருவாகும் போது எப்படி பாக்கியம் பொருந்தியவராக .இருந்தாரோ, பிறந்தவுடன் எப்படி பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, தனது உலக வாழ்வில் பிரச்சாரத்தில் எப்படிப் பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, இன்றைக்கும் அதே நிலையில் பாக்கியம் பொருந்தியவராக இருக்கிறார். இனி வரக் கூடிய இறுதிக் காலத்திலும் அவர் பாக்கியம் பொருந்தியவராக இருப்பார். ‘நான் எங்கிருந்தாலும்’ என்ற வார்த்தை அவர் விஷயத்தில் எத்துனை தெளிவாக இருக்கின்றது. என்பதை எண்ணிப் பார்க்கும் போது சிலிர்ப்பு ஏற்படவே செய்யும்.

அடுத்து,

வ அவ்ஸானி பிஸ்ஸலாத்தி, வஸ்ஸகாத்தி மாதும்து ஹைய்ய(ன்)வ் வ பர்ரம் பி வாலிததி.

நான் உயிரோடு இருக்கும் காலம் மேலும் தாயராருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் தொழுது வருமாறும் ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்.

அழைப்புப்பணிக்கல்லாமல் அவரது சொந்த வணக்கங்கள் பற்றியும் அவர் தனது ஆரம்ப பேச்சில் தெளிவு படுத்தியுள்ளார்.

இந்த இடம் சற்று ஆழமாக அணுக வேண்டிய இடமாகும். காரணம் இந்த இடத்தைப் புரிந்துக் கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் ஒரு குழப்பமான நிலைக்கு ஒரு சாரார் தள்ளப்பட்டு விட்டனர். புதிய நபிக் கொள்கை உருவாக்கப்பட்டு ஒரு சாரார் அதை நம்பும் நிலைக்கு ஆளாகினர்.

முதலில் இங்கு இவர்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம் என்னவென்பதைப் புரிந்துக் கொண்டு தொடர்வோம்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார். (இது பற்றி நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை). அவர் தன்னை ஈஸாவின் இடத்தில் வைத்து பார்ப்பதற்கு ஆதாரமாக்கியவற்றில் இந்த வசனமும் ஒன்று.

இந்த வசனத்திற்கு அவர் – பிற அனேக மொழிப்பெயர்ப்பாளர்கள் – கொண்ட பொருள்.

‘நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்’ என்பதாகும். இவ்வாறு பொருள் கொண்ட அவர் ‘ஈஸா இப்போது உயிரோடு இருந்தால் அவர் எப்படித் தொழுவார்? எப்படி ஸக்காத் கொடுப்பார்? என்ற கேள்வியை வைத்து அவர் இப்போது உயிரோடு இருந்தால் கட்டாயம் தொழ வேண்டும் ஸக்காத் கொடுத்தாக வேண்டும் ஆனால் இப்போது அவரால் தொழவோ ஸக்காத் கொடுக்கவோ முடியாது என்பதால் அவர் உயிரோடு இல்லை என்பது அவரது வாதம்.

மொழி ரீதியாக இப்படிப் பொருள் கொள்ள இடமிருந்தாலும் இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள அந்த வசனம் இடங்கொடுக்கின்றது. ஈஸா அவர்களின் முழு வாழ்க்கையையும் நாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது இன்னொரு பொருளே அங்கு பொருத்தமாக உள்ளது. எவ்வித குழப்பத்திற்கும் இடங்கொடுக்காமல் அந்த பொருள் பொருந்திப் போகின்றது.

அந்தப் பொருள் என்ன?’நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும்…. என்பதில் உயிரோடு இருக்கும் காலத்திற்கு பக்கத்தில் தாயாருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் என்பதையும் சேர்த்து பொருள் கொள்வது.

நான் உயிரோடு இருந்து தாயாருக்கு பணிவிடை செய்யும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் (பொருளாதாரப் பங்கீடல்) கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன் என்பது அந்த வசனத்தில் பொருள்.

குர்ஆன் வசனத்தின் அரபு வார்த்தை இப்படிப் பொருள் கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. இப்படிப் பொருள் கொள்ளும் போது ஈஸாவின் மீது தொழுகை மற்றும் ஸக்காத் கடமையாவதற்கு இரண்டு நிபந்தனைகள் – சூழ்நிலைகள் அமைந்திருக்க வேண்டும்.

1) அவர் உயிரோடு இருக்க வேண்டும். 2) தாயாருக்கு பணிவிடை செய்யும் நிலையில் இருக்க வேண்டும். இந்த இரு நிபந்தனைகள் இருக்கும் போது மட்டுமே ஈஸாவின் மீது தொழுகை ஸக்காத் ஆகியவை கடமையாகும். இன்றைக்கு ஈஸா அவர்கள் உயிரோடு இருந்தாலும் தாயாருக்கு பணிவிடை செய்யும் சூழல் அவருக்கு இல்லை என்பதால் இன்றைக்கு அவர் மீது எந்தக் கடமையும் இல்லை.

ஈஸாவின் வாழ்க்கை அனேக அற்புதங்களைக் கொண்டதாகும். தனித்துவம் வாய்ந்த அந்த அற்புதங்களோடு இந்த விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதுவே சரியான விளக்கமாகப் படுகின்றது.

இப்படிப் பொருள் கொள்ளும் போது புதிய நபித்துவக் கொள்கையில் தடுமாற்றம் ஏற்பட்டு விடும்.

அடுத்த சந்தேகத்திலிருந்தும் தெளிவாகுவோம்.

இப்படிப் பொருள் எடுத்தால் இனி ஈஸா அவர்கள் அடுத்த முறை வரும் போது அவர்கள் உயிரோடு இருப்பார்கள் ஆனால் அப்போதும் தாயாருக்கு பணிவிடை செய்ய முடியாது அப்படியானால் அப்போதும் அவர்கள் மீது தொழுகை – ஸக்காத் கடமையில்லையா என்ற கேள்வி எழுந்தால், இனி வரும் போது அவர்கள் இறைத்தூதராக வரமாட்டார்கள். மாறாக குர்ஆனை விசுவாசித்து இறைப் பணி செய்யும் ஒரு நம்பிக்கையாளராகவே வருவார்கள் என்பதே பதிலாகும். அவர்களின் இரண்டாவது வருகை இறைத்தூதர் அந்தஸ்த்தில் இருக்காது என்பதால் (இரண்டாவது வருகை குறித்து பிறகு வரும் இன்ஷா அல்லாஹ்) இறைத்தூதராக இருந்த போது அவர்களுக்கு இருந்த சட்டம் இப்போது பொருந்தாது என்பதை கவனத்தில் கொண்டால் சந்தேகம் தீர்ந்து விடும்.

மேற்கண்ட வசனத்திற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம்.
‘நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்’ என்று ஈஸா அவர்கள் சொல்லும் போது உயிரோடு பச்சிலங்குழந்தையாக இருக்கிறார்கள். அதாவது தன் மீது தொழுகைக் கடமை என்று அவர்கள் சொல்லும் போது உயிரோடு இருக்கிறார். ஆனாலும் குழந்தை. குனிந்து நிமிர்ந்து வணங்கும் நிலையில் அவர் அன்றைக்கு இல்லை என்றாலும் அந்தக் குழந்தையின் வார்த்தைகள் அனைத்தும் வணக்கமாகவே இருந்தது. அதுபோன்ற ஒரு நிலையைக் கூட உயர்த்தப்பட்டப் பிறகு இறைவன் அவருக்கு ஏற்படுத்தி இருக்கலாம்.

இந்த இரண்டு வித்தில் எப்படிப் பொருள் கொண்டாலும் அங்கே புதிய நபிக் கொள்கைக்கு இடமில்லாமல் போய்விடுகின்றது.

என்னைத் துர்பாக்கியசாலியாகவோ, பெருமைக்காரனாவோ அவன் ஆக்கவில்லை.

இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், மீண்டும் நான் எழுப்பப்படும் (தீர்ப்பு) நாளிலும் என்மீது சாந்தி நிலவும் (என்று ஈஸாவாகிய அந்தக் குழந்தைக்) கூறிற்று.

நான் மரணிக்கும் நாளில் என் மீது சாந்தி நிலவும் என்ற இயேசுவின் கூற்று மீண்டும் ஒரு முறை சிலுவை சம்பவத்தைப் பொய் படுத்துகின்றது இந்த இடத்தில்.

ஏனெனில் சிலுவையில் அறையப்பட்டதாக நம்பப்படும் அந்த நபர் ‘ஏலி ஏலி லாமா சபக்தனி’ என்று கூக்குரலிடுகிறார் இதற்கு ‘என் என் தேவனே ! என்னை ஏன் கை விட்டீர்’ என்று அர்த்தமாம் என பைபிள் கூறுகின்றது. இந்த அவலக்குரல் சாந்தியான மரணத்தின் அடையாளமல்ல. ஆனால் ஈஸாவின் மரணம் நிச்சயம் சாந்தியோடு நிகழும் என்பதில் ஐயமில்லை. அவரது இரண்டாவது வருகைக்கு பின் நிகழப்போகும் இறைப் பணிகளுக்குப் பிறகு அவர் மரணிப்பார். அப்போது அவர் மீது சாந்தி நிலவும் அந்த சாந்தி, அவர் மீது சுமத்தப்பட்ட இறைமகன் என்ற அவதூறு – சிலுவை அவதூறு போன்றவை துடைக்கப்பட்டு விட்டதாக இருப்பதால் உலகறியும் சாந்தியாக இருக்கும்.

இயேசுவைப் பற்றி நாம் அறியும் இந்த விபரங்கள் அனைத்தும் இயேசுவின் தாயார் மரியாள் (மரியம்) என்ற பெயரில் இடம்பெறும் குர்ஆனின் 19 வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்,

இதுவே அவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்த மரியமின் புதல்வர் ஈஸா பற்றிய உண்மைச் செய்தியாகும். எந்த ஒரு பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது கர்த்தருக்கு தகுமானதல்ல. கர்த்தர் தூயவர். (அல்குர்ஆன் 19:29-35)

இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.
தீர்க்க தரிசனம் உரைப்பவராக இறைவனின் தூதராகத்தான் அவர் வந்துள்ளாரேத் தவிர இறைமகனாக அவர் வரவில்லை.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger