Wednesday, April 6, 2011

காலம் எதிரியா? ஹதீஸ் விளக்கம்

ரசூல்(ஸல்), அல்லாஹ் கூறியதாக அறிவிக்கிறார்கள்:-

'ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுகிறான். நானே காலமாக இருக்கிறேன். என்னுடைய கைகளில் இரவும் பகலும் உள்ளது'.  அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி

முஸ்லிம்கள் மிக அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இந்த ஹதீஸில் அடங்கியுள்ளது. முஸ்லிம்களின் வாழ்க்கைத் தனித்தன்மை மிக்கதாக இவ்வுலகில் திகழ வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. அதற்கான அடையாளங்களை எல்லாம் குர்ஆன் - சுன்னாவில் விரிவாக வகுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையின் மதிப்பீடு என்பது மகிழ்ச்சி, இன்பங்களைக் கொண்டு மட்டும் தீர்மானிக்கப்படுவது முறையல்ல. அந்த மதிப்பீட்டில் துன்பங்களும், துயரங்களும், இழப்புக்களும், இயலாமைகளும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். அதுதான் சரியான மதிப்பீடாகும்.

தம் வாழ்வில், தாம் சந்திக்கும் இன்பக்களுக்கெல்லாம் தன்னைத்தானே பொறுப்புதாரியாக ஆக்கிக் கொண்டு சிரித்து, பெருமையடித்து, புகழ்ந்துகொள்ளும் மனிதன், தான் எதிர்பாராத ஒன்று வாழ்வில் நடக்கும்போது அது எவ்வளவு சிறிய நிகழ்;ச்சியாக இருந்தாலும், அதற்கு, தான் பொறுப்பு ஏற்காமல் பிறர்மீதும், உயிர்சாரா பொருட்கள் மீதும் திணிக்கவே விரும்புகிறான். இந்தத் திணிப்பு தூற்றலாகவும், கோபமாகவும்கூட வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம். ஒரு தொழில் துவங்கும்போது, ஒரு வீடு கட்டும்போது அல்லது நல்லதாகக் கருதப்படும் ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடும்போது நாம் செயல்படத் துவங்கும் இந்நேரம் நல்ல நேரம்தானா? என்று பெரும்பாலோர் மத புரோகிதர்களை அணுகிக் கேட்கிறார்கள். சுப நேரம் குறிக்கப்பட்டு துவங்கும் எவ்வளவோ செயல்கள் படுத்துக்கொள்கின்றன. இந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் நேரம் குறித்து கொடுத்த புரோகிதரர்கள் தூற்றப்படாமல் நேரமே கெட்ட நேரம் என்று தூற்றப்படுகின்றது. முஸ்லிம்களும் இதில் விதி விலக்கல்ல. ஹிந்துக்களுக்குக் கடகம், சிம்மம், கன்னி, ரிஷிபம்;, மிதுனம், தனுசு, கும்பம், மீனம் என்று ஜோதிட சித்தாந்தம் இருப்பது போன்று முஸ்லிம்களுக்கு மத்தியிலும் !பால்கிதாபு! என்ற ஜோதிட புத்தகம் உண்டு.

இறைவன் மீது உள்ள நம்பி;க்கையைவிட இந்த பால் ஜோதிடத்தின்மீது நம்பிக்கை வைத்து முஸ்லிம்கள் தம் காரியத்தைத் துவங்குகிறார்கள். இப்படி துவங்கப்பட்ட எத்தனையோ காரியங்கள் தலைகீழாக மாறி விடுகின்றன. இந்த சந்தர்ப்பங்களில் கூட இறைவனின் வல்லமையைச் சிந்திக்காமல், அவன் கெட்ட நேரம், அல்லது உன் கெட்ட நேரம்தான் இப்படி ஆகிவிட்டது என்று நாகூசாமல் பேசுவதைப் பார்க்கிறோம்.

மாவு விற்கப் போகும்போது காற்றடிப்பதும், உப்பு விற்கப் போகும்போது மழை பெய்வதும், அந்தக் காற்று, மழையின் சுய அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல. ஏனெனில், இதே மழை வயல்களிலெல்லாம் பொழிந்து பசுமைப் புரட்சியையும், செழிப்பான விளைச்சலையும் ஏற்படுத்துகிறது. காற்றின் தேவையும், சேவையும் அதைவிட அவசியமாக இருக்கிறது.

மாறி, மாறி வரும் இந்த பருவ நிகழ்வுகள் வல்லமை மிக்க ஒருவனின் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது என்பதை உணராமல், அல்லது உணர்ந்தும் அலட்சியப்படுத்திவிட்டு நேரத்தையும், காலத்தையும் திட்டுவது, தன்னைத் திட்டுவதுதான் என்று இந்த ஹதீஸில் இறைவன் விளக்குகிறான்.

நல்ல நேரம், நல்ல காலம் என்று குறிப்பிட்ட ஏதாவது நேரங்காலம் உலகத்தில் உள்ளதா என்பதை அறிவு ரீதியாக சிந்தித்துப் பார்க்கும்போதும், இது வெறும் ஏமாற்று வேலையே என்பதை அறிய முடிகிறது.

ஒரு ஊரில், ஒரு தெருவில் உள்ளவர்களையே எடுத்துக் கொள்வோம். நல்ல நேரம் என்று கணிக்கப்பட்ட அந்த நேரத்தில் அவர்கள் அனைவருமே சந்தோஷமாக இருக்கிறார்களா? சோகம், துக்கம் அவர்களிடமிருந்து விடுபட்டு விடுகிறதா?

நல்லதையும், தீயதையும் ஒரே நேரத்தில் தீர்மானிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் உலகத்தில் நடக்கத்தானே செய்கிறது.

பரிட்சை எழுதிவிட்டு ரிசல்ட்டை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கும், பல இலட்சங்கள் செலவு செய்து இரவு பகல் பார்க்காமல் அலைந்து திரிந்த அரசியல்வாதிகளுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் இரு அணி வீரர்களுக்கும் ஒரே நேரத்தில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. அதாவது, நல்ல நேரமும் கெட்ட நேரமும் ஒரு வினாடியில் கலந்து நிற்கிறது.

நல்ல நேரம் குறித்து திருமண நிகழ்ச்சி நடக்கும் அதே தினத்தில், அதே வீட்டில் மரணம் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் உலகில் எத்துனையோ..

நல்ல நேரம் என்றோ, கெட்ட நேரம் என்றோ, பிரித்தரியப்பட்ட நேரம் எதுவும் உலகில் இல்லை என்பதற்கு இப்படி ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் கூறலாம்.

இஸ்லாமிய வரலாற்றில் நேர் எதிரான இரு சம்பவங்கள் ஒரே நாளில் நடந்துள்ளது நமது கவனத்திற்குரியது.

முஸ்லிம்களில் உள்ள ஷியா பிரிவினர் முஹர்ரம் மாதம் 10ம் நாள் மிகத் துக்ககரமான நாளாக ஆக்கிக்கொண்டு, அன்றைய தினம் தம்மைத்தாமே வருந்திக்கொள்ளக்கூடிய மிக மோசமான செயலில் இறங்குவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம், இதே நாளில்தான் நபி(ஸல்) அவர்களின் பேரரான ஹுசைன்(ரலி) அவர்கள் கர்பலாவில் நடந்த போரில் ஷஹீதாக்கப்படுகிறார்கள். அது மிக சோகமான ஒரு சம்பவம்தான். இந்நிகழ்ச்சி நடந்த இதே நாளில்தான் இதைவிட முக்கியமான ஒரு சம்பவம் நடக்கிறது. ஃபிர்அவ்ன் என்ற கொடியவனுக்கு எதிராக நபி மூஸா(அலை) அவர்கள் செய்த பிரச்சாரம் ஒரு முடிவுக்கு வந்து அவனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பனு இஸ்ரவேலர்களைக் கூட்டிக் கொண்டு எகிப்தை விட்டு வெளியேறுகிறார்கள். விபரம் அறிந்த ஃபிர்அவ்ன் தம் படையுடன் பின்தொடர்ந்து மூஸா(அலை) அவர்களை முற்றுகையிடுகிறான். அந்தச் சந்தர்ப்த்தில் உலகிலேயே மிகப் பெரிய அற்புதம் ஒன்று நிகழ்கிறது. கடல் இரண்டாகப் பிளந்து இரண்டு மலைகள் போல் எழுந்து நின்று விடுகின்றது. அந்த வழியே மூஸா(அலை) அவர்களுக்கு வழிவிட்ட அந்தக் கடல், ஃபிர்அவ்னும் அவனுடைய சேனைகளும் உள்ளே இறங்கியதும் அவர்களைச் சுருட்டி விழுங்கி விடுகிறது. இவை அனைத்தும் இறைவனின் ஏற்பாட்டின்படி நடக்கின்றன.

இந்த நாளைப் புகழந்து நன்றி செலுத்தும்விதமாக நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்து பிறரையும் நோன்பு நோற்கச் சொன்ன விவரம் புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஒரே நாளில் இந்த இரு நிகழ்ச்சிகளை எந்த அடிப்படையில் தீர்மானிப்பது?

நாளுக்குச் சக்தி இருந்து அன்றைய தினம் நல்ல நாளாக இருந்தால் ஹுசைன்(ரலி) அவர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த நாள் கெட்ட நாளாக இருந்தால் மூஸா(அலை) அவர்கள் தோழ்வி அடைந்திருக்க வேண்டும். இது ஒன்றும் நடக்கவில்லை.

இறைவன் காலச்சக்கரத்தை தன் கையில் வைத்துக்கொண்டு, தான் நாடியவாறு சுழற்றுகிறான்;.

(இன்பம், துன்பம், சோதனை போன்ற) இத்தகைய காலங்களை மனிதர்களுக்கு மத்தியில் நாமே மாறி மாறி வரச் செய்கிறோம் அல்குர்ஆன்: (3:140)

யாரை உயர்த்துவது, யாரைத் தாழ்த்துவது, யாருக்குக் கொடுப்பது, யாரை எடுப்பது என்று எல்லா விஷயங்களையும் தீர்மானிக்க,

!! ஒவ்வொரு நாளும் அவன் காரியத்திலே இருக்கிறான் !!  - அல்குர்ஆன்: (55:29)

இத்தகைய கருத்தை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இதையெல்லாம் நாம் உணர்ந்தால் காலத்தையோ, நேரத்தையோ குறைகூறி இறைவனின் கோபத்திற்குள்ளாக மாட்டோம்.

நாம் விரும்பாத, நமக்கு துன்பம் தரக்கூடிய செயல்கள் வாழ்க்கையில் ஏற்படத்தான் செய்யும். அப்போது அதற்கான காரணங்களை அலச வேண்டும். காரணம் நம் கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தால்,

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், விளைச்சல்கள், உயிர்கள் ஆகியவற்றின் இழப்புகளால் சோதிப்போம். (காலத்தை சபிக்காமல்) பொறுமையை கைக்கொள்ளுவோருக்கு நன்மாராயம் உண்டு, (பொறுமையுடைய) வர்களுக்கு எந்த துன்பம் ஏற்பட்டாலும், நாங்கள் அல்லாஹ்விற்குரியவர்கள், நிச்சயமாக அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள்!!. !! நேர்வழி பெற்ற இவர்களுக்குத்தான் இறைவனின் நல்லாசியுண்டு !! - அல்குர்ஆன்: (2:155,156)

காலத்தைக் குறைகூறி, ஷைத்தானுக்கு துணைபோய், தனக்குத் தானே இழிவை ஏற்படுத்திக் கொள்ளாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger