Sunday, April 3, 2011

வண்ண வண்ணக் கனவுகள் (சட்டவிளக்கம்)

கனவுகளைப் பொருத்தவரை இஸ்லாம் தெளிவாக வழிக் காட்டியுள்ளது. கனவுகளுக்கு விளக்கம் சொல்கிறேன் என்றப் பெயரில் சிலர் மக்களிடம் தேவையில்லாத குழப்பதை ஏற்படுத்தி சுரண்டுவதால் இது குறித்து நாம் விரிவாக அறிந்துக் கொள்ள வேண்டும்.

கனவுகள் மூன்று வகைப்படும்.

1) இறைவன் புறத்திலிருந்து வரும் நல்லக் கனவுகள்.
2) ஷைத்தான் புறத்திலிருந்து வரும் தீய கனவுகள்
3) மனதில் பதிந்திருக்கும் எண்ணங்கள் - பாதிப்புகளின் வெளிப்பாடு.

கனவுகள் மூன்று வகைகளாகும் ஒன்று இறைவன் புறத்திலிருந்து வரும் உண்மையான கனவாகும் அடுத்தது ஷெய்தானின் புறத்திலிருந்து வந்து கவலையை ஏற்படுத்தும் கனவாகும். மற்றொன்று மனிதர்களின் நினைவிற்கேற்ப ஏற்படுவதாகும் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா - ஆய்ஷா - அபூ ஸயீத் - இப்னு உமர் போன்ற பல நபித் தோழர்கள் இந்த செய்தியை அறிவிக்கிறார்கள். (புகாரி - முஸ்லிம் - திர்மிதி)

தூதுத்துவமும் - நபித்துவமும் முடிந்துவிட்டன எனக்குப் பின் எந்த நபியும் - எந்த ரஸூலும் இல்லை என்று நபி(ஸல்) அறிவித்தது மக்களுக்குக் கவலையை அளித்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'எனினும் நற்செய்திக் கூறக்கூடியவைகள் மட்டும் உள்ளன அவை முஸ்லிம்களுடைய கனவு. நற்கனவு நபித்துவத்தின் ஒரு பகுதியாகும் என்றார்கள். (அபூஹூரைரா - இப்னு அப்பாஸ் - ஹூதைபா போன்ற நபித்தோழர்கள் இதை அறிவிக்கிறார்கள். (அஹ்மத் - திர்மிதி - ஹாக்கிம்)

உங்களில் எவரேனும் விரும்பத் தகாத கனவைக் கண்டால் அவர் எழுந்துத் தொழட்டும் (சில அறிவிப்புகளில் துப்பட்டும் என்று வந்துள்ளது) அதை மக்களிடம் கூற வேண்டாம் என்பதும் நபிமொழி (அபூஹூரைரா(ரலி) புகாரி - முஸ்லிம் - திர்மிதி)

இந்த ஹதீஸ்களை கவனமாக சிந்தித்தால் கனவுகள் பற்றிய விபரங்கள் அனைத்தும் நமக்கு கிடைத்து விடும்.

நல்ல கனவுகளும், நல்ல கனவுகளில் கெட்டக் கனவுகளும்!

நல்லக் கனவுகள் என்று நபி(ஸல்) எதை குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்வது நல்லக் கனவாக தெரியும் பல தீய கனவுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும். அது அவசியமுமாகும்.

நன்மையை ஏற்படுத்தாத நல்ல?க் கனவுகள்.

கனவுகளை நம்பி வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அனேகம் பேர் - முஸ்லிம்கள் - கனவுகளால் தங்கள் இஸ்லாத்தையே இழந்து நிற்பதை சர்வ சாதாரணமாக பவரலாகக் காண முடிகிறது.

'நான் ஒரு கனவு கண்டேன்... ஒரு மகான் (சில கனவுகள் பச்சைத் தலைப்பாகையுடன்) வந்து என்னை என் நோயிலிருந்து விடுபடுவதற்காக 11 நாளைக்கு நாகூர் தர்காவில் (சில இடங்களில் லோக்கல் தர்காவிற்கு சிபாரிசு) போய் தங்க சொன்னார்கள். என்மீது பிரியம் வைத்துள்ள ஷாகுல் ஹமீது பாதுஷாவாகத்தான் அது இருக்கும் ஏனெனில் முகம் பால் போன்ற வெண்மையாக இருந்தது......' இப்படியே கனவு வர்ணனை நீடித்து கடைசியில் மூட்டை முடுச்சுடன் நாகூருக்கு கிளம்பி போய் இஸ்லாத்தை இழந்து (பெண்களாக இருந்தால் சில நேரங்களில் கற்பையும் இழந்து) நிற்கும் காட்சி ஆங்காங்கே நடைப் பெறாமலில்லை. தான் கண்ட கனவை வெளியில் சொல்லி விட்டு அதே சமயம் கொஞ்சம் முற்போக்குத் தனத்துடன் அந்த கனவை அலட்சியப்படுத்தினால் குடும்பத்தார் அதை பாவமாக கருதி எப்படியாவது தர்காவிற்கு மூட்டைக் கட்டி அனுப்பி விடுவார்கள்.

சிலருக்கு 'ஸ்பெஷல் தொழுகை'க் கான கனவு, இன்னும் சிலருக்கு 'ஸ்பெஷல் நோன்பு - விருந்து ஏற்பாட்டுக் கனவு' என்று நன்மையையும் வணக்கத்தையும் போதிக்கும் கனவுகள் தோன்றும். நல்லக் கனவு இறைவன் புறத்திலிருந்து வரும் என்று நபிமொழியுள்ளதால் இதுபோன்ற கனவுகளையெல்லாம் நல்லக் கனவாக மக்கள் நினைத்து கனவில் காண்பதை நடைமுறைப்படுத்த துவங்கி விடுகிறார்கள்.

நல்லக் கனவு இறைவன் புறத்திலிருந்து வரும் என்று நபி(ஸல்) கூறியது உண்மைதான். ஆனால் 'நல்லக் கனவு' என்று நபி(ஸல்) குறிப்பிட்டதற்கு பொருள் என்ன..?

மார்க்க விஷயங்கள் - வணக்க வழிப்பாடுகள் இவைகள் இன்றைக்கும் மக்களுக்கு எற்றார் போல கனவில் போதிக்கப்படும் என்றால் அது குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் ஏராளமாக முரண்பட்டு விடும்.

'இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை நிறைவு செய்து என் அருளை உங்களுக்காக முழுமைப் படுத்திவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்' (அல் குர்ஆன் 5:3)

இந்த  வசனம் மார்க்கத்தை இறைவன் பூர்த்தியாக்கி விட்டதை அறிவிக்கின்றது. அவரவருக்கும் தனிப்பட்ட முறையில் வணக்க வழிப்பாடுளை கனவுகளில் இறைவன் அறிவிப்பான் என்றால் 'மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டதற்கு' எந்த அர்த்தமுமில்லாமல் போய் விடும். இன்னும் சொல்லப் போனால் முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதித் தூதர் என்று நம்புவதும் அவர்கள் இறை செய்தி அனைத்தையும் மக்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்கள் என்பதும் கூட சந்தேகத்திற்கிடமாகி விடும்.

இவற்றிற்கெல்லாம் முரண்படாமல் தான் 'நல்லக் கனவு' என்ன என்பதை விளங்க வேண்டும். எந்த ஒரு வணக்க வழிப்பாடும் கனவுகள் வழியாக அறிவிக்கப்படாது ஏனெனில் அனைத்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டு விட்டன. அவை அகில உலகிற்கும் பொதுவானவையாகும். இடத்திற்கு இடம் - நாட்டுக்கு நாடு வணக்க வழிபாடுகள் மாறுபட்டால் (வெளி நாட்டுக் கனவுகளில் நாகூர் அவ்லியா? உட்பட எந்த லோக்கல் அவ்லியாவும் போக மாட்;டார்கள் ஏனெனில் அங்குள்ளவர்களுக்கு இவர்களெல்லாம் யார் என்றே தெரியாது) இது உலகலாவிய மார்க்கம் என்ற வாதமே அடிப்பட்டுப் போய்விடும். அது மட்டுமின்றி கனவில் இறைவனுக்கு விருப்பமான வணக்கங்கள் போதிக்கபடும் என்றால் குர்ஆனும் ஹதீஸூம் கூட தேவையில்லாமல் போய்விடும். அவன் (இறைவன்) விரும்பும் போது என் கனவில் அறிவிக்கட்டும் நான் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறேன் என்று சொல்லி விட முடியும். 

எனவே இறைவன் மார்க்கத்தை பூர்த்தியாக்கி விட்டேன் என்று சொல்லியுள்ளதால் ஏற்கனவே சொல்லப்படாத மார்க்கம் சம்பந்தமான எந்த ஒரு காரியமும் கனவில் அறிவிக்கப்படாது. அப்படியானால் ;நல்லக் கனவு' என்பதன் பொருள் என்ன...?

நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸில் 'நற்செய்திக் கூறக்கூடிய கனவுகள்' என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். சிலருக்கு சந்தோஷம் ஏற்படும் விதத்தில் இறைவன் வழங்கப் போகும் அருட்கொடையை அல்லது நடக்கப்போகும் சம்பவத்தை அவருக்கு முன் கூட்டியே இறைவன் கனவில் சுட்டிக் காட்டலாம். அதன் மூலம் அவருக்கு நற்செய்தி கிடைக்கும். அவர் கண்ட கனவு அவரது வாழ்வில் நடந்தால் 'இது இறைவன் புறத்திலிருந்து முன்னறிவிப்பு செய்யப்பட்ட நற் செய்தி' என்று அவர் விளங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

தர்காவிற்கு போகுதல், பாத்திஹா ஓதுதல், ஸ்பெஷல் வணக்கங்கள் போன்ற கனவுகள் வந்தால் - நல்லக் கனவாக மனதிற்குத் தோன்றினாலும் - இவை ஏற்கனவே மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம்களை வழி கெடுக்க ஷெய்த்தான் போடும் திட்டம் தான் இது என்பதை புரிந்துக் கொண்டு அந்தக் கனவுகளை அலட்சியப்படுத்தி விட வேண்டும். இவை நல்லக் கனவுகளாகத் தெரியும் தீயக் கனவுகளாகும்.

லாட்டரியில் விண் பண்ணுவது போன்று, மன அமைதிக்காக குடி குடிப்பது, ஆசிரமங்களை நாடி செல்வது போன்ற மார்க்கம் ஹராமாக்கிய காட்சிகள் கனவில் தோன்றினால் அது எத்துனை மனமகிழ்சியை ஏற்படுத்தினாலும் அவை ஷெய்த்தானின் அகோர திட்டங்கள் என்பதை விளங்கி இறைவனிடம் பாதுகாப்புத் தேடி விட வேண்டும்.

இது போன்று வாலிப வயதில் ஏற்படும் 'இளமைக் கனவுகள்' மனதின் பாதிப்புகளையும் - ஏக்கங்களையும் வெளிப்படுத்தக் கூடியதாகும்.

இவைத்தான் கனவுகளாகும்.

இனி கனவுகளுக்கு விளக்கம் கூறும் முறை என்ன என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.

கனவுக்கு விளக்கம் கூறும் 'கனவு வியாபாரிகள்' ஆங்காங்கே மக்களின் கனவுகளுக்கு பலவித விளக்கம்? கூறி தங்களை 'கனவு மேதை'களாக காட்டிக் கொண்டு காசு பறிப்பதை அறிய முடிகிறது. கனவுகள் பற்றிய மக்களின் தடுமாற்றமே இவர்களுக்கு வரம்.

கனவுக்கு எதிர்மறையான விளக்கம் சொல்வதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். யாராவது வீடு பற்றி எரிவது போன்று கனவு கண்டால் 'வீட்டிலிருக்கும் பெண் குழந்தை வயதுக்கு வரப் போகிறது' என்று விளக்கம் அளிப்பார்கள். கனவு விளக்கத்திலும் பெண்மையை கேவலப்படுத்தும் திட்டம். பருவம் அடைந்து வீட்டிலிருக்கும் பெண் பிள்ளைகளை குறித்து தாய்மார்கள் 'மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்' என்று சொல்வதை பார்க்கலாம். அதற்கு தோதுவான விளக்கம் இது. பெண் குழந்தைகளே இல்லாதவர்களுக்குக் கூட வீடு பற்றி எரிவது போன்ற கனவுகள் வரலாம். அப்போது என்ன விளக்கம் கூறுவார்களோ..

பால் பொங்கினால் மகிழ்சியாம் - பாம்பைக் கண்டால் மகிழ்சியாம் - மலத்தைக் கண்டால் உணவு பெருகுமாம் இப்படி முட்டாள்தனமான விளக்கங்கள் ஏராளம் ஏராளம்.

நபிமார்களைத் தவிர ஒருவர் காணும் கனவிற்கு பிறரால் விளக்கம் சொல்லவே முடியாது. நபிமார்களைத் தவிர பிறரால் கனவுகளுக்கு விளக்கம் சொல்ல முடியும் என்பதற்கு குர்ஆன் - சுன்னாவில் எங்கும் ஆதாரம் கிடைக்கவில்லை.

எகிப்து மன்னர் கனவு காண்கிறார், சிறைக் கைதிகள் கனவு காண்கிறார்கள். இவர்கள் தங்கள் கனவுளை இறைத்தூதர் யூசுப் (அலை) அவர்களிடம் சொல்லி விளக்கம் கேட்கிறார்கள். யூசுப்(அலை) சொன்ன விளக்கங்கள் அனைத்தும் கனவிற்குறிய நேரடி விளக்கங்கள் தானே தவிர எதிர்மறையான விளக்கங்கள் அல்ல. இது பற்றி 12 வது அத்தியாயமான சூரத்து யூசுஃபில் விரிவாக காணலாம். (நேரடியாக குர்ஆனைப் படித்து விளங்குங்கள்.)

நபிமார்;களைத் தவிர மற்றவர்களால் கனவுகளுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்பதால் யாரிடமும் கனவுக்கு விளக்கம் கேட்கக் கூடாது அது தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்க வழிவகுத்து விடும்.

நபி(ஸல்) அவர்களையும் நாம் கனவில் பார்க்க முடியாது என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger