Sunday, April 3, 2011

முஸ்லிம் பெண் வணங்கும் உரிமை

பிற சில மதங்களில் பெண்களை இரண்டாம் தர பிறவிகளாக பாவித்து அவர்களுக்குரிய உரிமைகளைக் கண்டுக் கொள்ளாமல் ஒதுக்கித் தள்ளி வைத்துள்ளதை அளவு கோலாக கொண்டு முஸ்லிம்களில் பலர் தம் பெண்களை அதே நிலையில் வைத்துள்ளார்கள்.

பெண்களுக்குக்கென்று அவர்களுக்கு தேவையான உரிமைகள் குறைவில்லாமல் இங்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் பெருவாரியான ஆண்கள் அது குறித்தெல்லாம் கவலைப்படுவதே இல்லை. இது அவர்களிடம் இஸ்லாமிய அறிவின்மைக்குரிய அடையாளங்களாகும். முஸ்லிம் பெண்களும் கூட அதே நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனாலும் விழிப்புணர்வு பெற்ற சில பெண்கள் தங்களின் உரிமைகளை முறையாக பெறுவதிலும், பயன்படுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்கள். அதில் ஒன்றுதான் பள்ளிவாசல்களுக்கு சென்று ஆண்களுடன் பெண்கள் தொழும் உரிமை.

சிந்திக்கத் தெரிந்த இந்த பெண்களின் போக்கு, பிறரால் அதிகாரம் வழங்கப்பட்டு அவர்களின் கைப்பாவையாக இருக்கும் மௌட்டீக மரபை பின்பற்றும் ஆண்களுக்கு பிடிக்கவில்லை. பெண்களை பள்ளி வாசல்களுக்கு வர விடாமல் தடுத்து நிறுத்தும் பணியில் அவர்கள் அவ்வப்போது இறங்கி எவராவது சொல்லி வைத்திருக்கும் ஆணாதிக்கக் கருத்துக்களை தங்களுக்கு சாதகமாக வெளியிடுவார்கள். (இதற்காகத்தான் இஸ்லாமிய அறிவும், சிந்தனையும் அற்றவர்களாக பார்த்து அதிகாரம் வழங்கப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்)

எனவே ஆண்களோடு கூட்டாக இறைவனை வணங்கும் உரிமைகளை முஸ்லிம் பெண்கள் எந்த அளவு பெற்றுள்ளார்கள் என்பதை விளாவாரியாக விளக்கும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது.

இதை மிக சரியாக புரிந்துக் கொள்ள வேண்டுமானால் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பெண்கள் தங்கள் உரிமையை எப்படி நடை முறைப்படுத்தினார்கள் என்ற வரலாற்று செய்திகளே சரியான அளவுகோலாகும். அவற்றை வரிசையாக விளங்கினாலே வணங்கும் உரிமைகளுக்குறிய முழு தெளிவும் கிடைத்து விடும்.

பள்ளிக்கு வரும் உரிமை.

இறைவனின் வணக்கஸ்தலங்களில் இறைவனின் பெயரை துதிப்பதை தடுத்து அவற்றை பாழாக்க முயற்சிக்கிறானே அவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்..? (அல்குர்ஆன் 2:114) என்று இறைவன் கேட்கிறான்.
இறைவனை வணங்குவதற்காக பள்ளிவாசல்களுக்கு வரும் இறை நம்பிக்கையுள்ள முஸ்லிம் பெண்களை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை என்பதற்கு இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்து விட்டது. மீறி தடுப்பவர்கள் என்ன அதிகாரம் பெற்றிருந்தாலும் இறைவனின் பார்வையில் அவர்கள் பெரும் அநியாயக்காரர்களாகி விடுகின்றனர்.

உங்கள் பெண்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி கேட்டால் (கணவர்களாகிய) நீங்கள் அவர்களை தடுக்க வேண்டாம் என்பது நபிமொழி. (இப்னு உமர்(ரலி) புகாரி 865,873,5238)

கணவர்களே நீங்கள் தடுக்க வேண்டாம் என்பது கணவர்களை மதிக்க வேண்டும் என்பதற்காக சொல்லி விட்டு செல்ல வேண்டும் என்ற அறிவுரை தான். நபி(ஸல்) அவர்களுடைய அனுமதி கிடைத்து விட்ட பிறகு ஒரு பெண் பள்ளிக்கு சென்று வந்தால் அதை கணவர் குறை சொல்லக் கூடாது என்பதற்கு கீழுள்ள நபித் தோழியின் வாக்கு மூலம் சிறந்த சான்று.

உமர் அவர்களின் மனைவியரில் ஒருவர் சுப்ஹ் மற்றும் இஷா தொழுகைகளை பள்ளியில் ஜமாஅத்துடன் தொழ செல்வார். பள்ளிக்கு தொழ செல்கிறீர்களே உமர் ரோஷக்காரராச்சே.. என்று அந்த மனைவியிடம் கேட்ட போது, அவர் ‘என் கணவர் என்னை தடுக்க முடியாது ஏனெனில் பெண்கள் பள்ளிக்கு செல்வதை தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்’ என்றார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி 900)

பகல் நேரத் தொழுகைகள் மட்டுமில்லாமல் இரவுத் தொழுகைகளிலும் மற்றும் ரமளானின் இரவுத் தொழுகைகள் ஆகியவற்றிர்க்கும் பெண்கள் செல்லலாம்.

இரவில் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்காதீர்கள் என்பது நபிமொழி. (இப்னு உமர்(ரலி) புகாரி 899)

நபி(ஸல்) அவர்களுக்கு பின் அவர்களை பின்பற்றி பெண்கள் சுப்ஹ் தொழுகையில் பங்கெடுப்பார்கள். தொழுகை முடிந்து போர்வையால் போர்த்திக் கொண்டு வீடுகளுக்கு திரும்புவார்கள். அந்த நேரம் இருட்டாக இருப்பதால் அவர்கள் யார் என்பதை அறிய முடியாது என்று ஆய்ஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 372,578,867,872)

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் இஷா தொழுகையை தாமதப் படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் உறங்குகின்றனர் என்று உமர்(ரலி) நினைவூட்டியதும் வந்து தொழவைத்தார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி 566, 569, 862, 864)

இரவும் இருட்டும் கூட பெண்கள் பள்ளிக்கு வந்து வணங்கும் உரிமையை தடுத்துவிடாது என்பதற்கு இவை சான்றுகளாகும்.

தொழுகையை சுருக்குவதற்கு காரணம்.

நீண்ட நேரம் தொழ வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நான் தொழுகையை துவங்குகிறேன். குழந்தைகளின் அழுகுரலை கேட்கும் போது அதனால் தாய்க்கு சங்கடம் ஏற்படுமோ என்ற கவலையால் தொழுகையை சுருக்கி விடுகிறேன் என்று நபி(ஸல்) கூறுகிறார்கள். (புகாரி 707, 709, 710, 868)

இமாமின் தவறுகளை சுட்டிக் காட்டிய பெண்கள்.

உங்களில் அதிகம் குர்ஆன் ஓத தெரிந்தவர் இமாமத் செய்வதற்கு முதலாவது தகுதி படைத்தவர் என்று நபி(ஸல்) கூறியுள்ளதை கருத்தில் கொண்டு ஒரு முறை இமாமத் செய்வதற்கு ஆட்களை தேடினார்கள். அன்றைக்கு அதிக குர்ஆன் ஓத தெரிந்தவனாக நான் இருந்தேன். ஆறு அல்லது ஏழு வயதுடைய என்னை இமாமத்திற்காக முன் நிருத்தினார்கள். நான் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு தொழ வைத்தேன் ஸஜ்தா செய்யும் போது அந்த போர்வை என்னை விட்டு விலகி என் பின்புறம் தெரியும். அப்போது பின்னால் தொழுத பெண்களில் ஒருவர் ‘உங்கள் இமாமின் பின்புறத்தை மறைக்க (ஏதாவது கொடுக்கக்)கூடாதா..’ என்றார் உடனே அவர்கள் எனக்கு ஒரு சட்டை கொடுத்தனர். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. (அம்ர் பின் ஸலாமா(ரலி) புகாரி 4302)

சிலபோது போதிய உடையில்லாமல் ஆண்கள் தொழும் நிலை ஏற்பட்டது. இருக்கும் ஒரு வேட்டியை தங்கள் உடம்பில் சுற்றி கழுத்துக்கு பின்புறம் பிடரியில் கட்டிக் கொள்வார்கள். இதை கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘பெண்களே! ஆண்கள் நிலத்திலிருந்து தலையைத் தூக்கி எழுந்து அமரும் வரை நீங்கள் தலையை தூக்க வேண்டாம்’ என்றார்கள். (ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) புகாரி 362, 814)

பெருநாள் தொழுகைகளில் பெண்கள்.

கன்னிப் பெண்களையும், மாதவிடாய் ஏற்பட்டுள்ளப் பெண்களையும், கணவனை இழந்தப் பெண்களையும் பெருநாள் தொழுகைக்காக வந்து சேருமாறு நபி(ஸல்) கூறினார்கள். இதை கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர், ‘இறைவனின் தூதரே! எங்களில் ஒருத்திக்கு போதிய அளவு ஆடை இல்லை என்றால் எப்படி வருவது..?’ என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) ‘அவளது தோழியிடம் அதிகப்படியான மேலாடை இருந்தால் அதை அவள் அணிய கொடுக்கட்டும்’ என்றார்கள். (உம்மு அதிய்யா(ரலி) புகாரி 351)

(குறிப்பு: மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுக்கு தொழுகை கடமையில்லை என்பதால் அவர்கள் தொழுகையில் பங்கெடுக்காமல் தொழுத பின் நடைப் பெறும் இஸ்லாமிய பிரச்சாரத்திலும் – தங்களுக்கு தேவையான பிரார்த்தனையிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்)

பெருநாள் தொழுகை முடிந்ததும் நபி(ஸல்) பெண்களின் பகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தார்கள். இறைவனின் பாதையில் செலவு செய்யும் அவசியத்தை விளக்கினார்கள். இதை செவியுற்ற பெண்கள் தங்கள் காது, கைகளில் இருந்த ஆபரணங்களை – நகைகளை – கழற்றி இறைவனின் பாதையில் கொடுத்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 863, 978, 979, 981)

பள்ளியை சுத்தம் செய்ய பெண்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளியை சுத்தம் செய்ய ஒரு பெண் நியமிக்கப்பட்டிருந்தார் என்ற விபரம் புகாரியில் வருகிறது (அபூஹூரைரா(ரலி) 458,460)

பள்ளிக்கு வர அனுமதி உண்டு என்பதால் அங்கு வந்து தன்னை வருத்திக் கொள்ளும் நிலையில் வணக்கத்தில் மூழ்கி விடக் கூடாது என்று நபி(ஸல்) கண்டித்த விபரமும் கிடைக்கின்றது

நபி(ஸல்) பள்ளிக்கு வந்த போது இரண்டு தூண்களுக்கிடையே நீண்ட கயிறு ஒன்றை பார்த்தார்கள். ‘இது என்ன..?’ என்றார்கள். அதற்கு மக்கள் ‘இது ஜைனப் உடையது, நின்று தொழுவார் சோர்வடைந்தால் இந்த கயிற்றைப்படித்துக் கொண்டு சாய்ந்துக் கொள்வார் ‘ என்றனர். இதை கேட்ட நபி(ஸல்) அவர்கள் ‘இதை அவிழ்த்து எறியுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும் போது தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து விடட்டும்’ என்றார்கள். (அனஸ்(ரலி) புகாரி 1150)

இந்த ஆதாரங்களை படித்துணரும் எந்த முஸ்லிமும் பெண்கள் பள்ளிக்கு செல்வது தவறு என்று தடுக்க மாட்டான் ஏனெனில் அதுதான் இறை நம்பிக்கைக்குரிய அடையாளமாகும்.

இறைவனும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால் அக்காரியத்தில் மாற்று கருத்துக் கொள்வதற்கு இறை நம்பிக்கைக் கொண்டுள்ள எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எவராவது மாறு செய்தால் அவர்கள் பகிரங்க வழி கேட்டிலேயே இருக்கிறார்கள். (அல் குர்ஆன் 33:36)

முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுப்பதன் மூலம் தடுப்பவர்கள் இஸ்லாத்திற்கே கலங்கம் விளைவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger