Monday, March 14, 2011

கேள்வி பதில் தொகுப்பு - 37

1.ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது சொத்து முழுவதையும் தருமம் செய்யவோ அல்லது தனது பிள்ளைகளுக்கு மத்தியில் பகிர்ந்தளிப்பதற்கோ குர்ஆன் ஹதீசில் அனுமதியுன்டா? பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிப்பதாயின் சமமாகவா பகிர வேண்டும்.

ஒருவருடைய சொத்துக்கு அவர் மரணிக்கும் வரை அவரே முழுப் பொறுப்புதாரியாகின்றார். சொத்துக்குறித்த விபரங்களை ஜக்காத் சட்டங்கள் தொடரில் விரிவாக விளக்கியுள்ளோம். http://www.idhuthanislam.com/zakaath/zakaathindex.htm 

சொத்துக்கு முதலாளியான அவர் தமது சொத்தை தான தர்மம் செய்யவோ பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்கவோ, யாருக்கும் எதையும் கொடுக்காமல் தனது வாரிசுகளுக்கு விட்டு செல்லவோ உரிமைப்படைத்தவராவார் ஆனாலும் இஸ்லாம் பொருளாதாரத்தின் மீது ஜகாத்தை விதித்துள்ளது. தானதர்மங்களை ஊக்குவித்துள்ளது.

அதிக இறை நம்பிக்கையுள்ள ஒருவர் தமது சொத்து முழுவதையும் இறைவழியில் தானதர்மம் செய்து விட அனுமதியுண்டா என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம்.

அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 25:67)

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆம் விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அபூ ஹுரைரா(ரலி) )பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2748

ஆரோக்யம் - பொருளாதாரத்தின் மீது ஆசை - அதே சமயம் வறுமைக் குறித்த பயம் இவை ஒன்று சேர இருக்கும் நிலையில் இறைவழியில் செலவு செய்ய வேண்டும் அதுவே மகத்தான் செலவீடாகும் என்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்றது. எனவே வயதான காலம் வரட்டும் என்று காத்திராமல் ஒருவர் தனது வாலிப பருவத்தில் அவருடைய சொத்தை இறை வழியில் செலவு செய்யலாம் - செய்ய வேண்டும்.

நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து கொள்ள முடியாது" (திருக்குர்ஆன் 03:92) என்னும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் வேதத்தில், 'நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது' என்று கூறுகிறான். என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானது 'பைருஹா' (எனும் தோட்டம்) தான். அந்தத் தோட்டத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்று நிழலில் ஓய்வெடுத்து அதன் தண்ணிரை அருந்துவது வழக்கம் - எனவே, அதை நான் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் (அறக் கொடையாகத்) தந்து விடுகிறேன். (மறுமையில்) அதன் நன்மையையும் (மறுமை வாழ்வுக்கான) என் சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அல்லாஹ் காட்டித் தருகிற அறச் செயலில் அதைத் தாங்கள் பயன்படுத்தித் கொள்ளுங்கள்" என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மிகவும் நல்லது, அபூ தல்ஹாவே! அது லாபம் தரும் செல்வமாயிற்றே. அதை உங்களிடமிருந்து ஏற்று உங்களிடமே திருப்பித் தருகிறோம். உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே அதைப் பங்கிட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அதைத் தம் இரத்த பந்தமுள்ள உறவினர்களுக்கு தர்மம் செய்துவிட்டார்கள். (அனஸ்(ரலி) பாகம்

3, அத்தியாயம் 55, எண் 2758

பெருமதிப்பு மிக்க, நீர் நிலைகள் உள்ள தனது சொத்தை இறைத் திருப்தியைப் பெருவதற்காக தனது இரத்த பந்த உறவினர்களுக்கு (இவர்கள் சொத்தின் வாரிசுதாரர்களல்ல) இறைத்தூதரின் வழிகாட்டுதல் படி அபுதல்ஹா(ரலி) அவர்கள் பகிர்ந்தளிக்கிறார்கள்.
இதுபோன்ற ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில் ஒருவர் தனது சொத்தை தன் விருப்படி செலவிடலாம் என்பது விளங்குகின்றது. ஆனாலும் ஒருவர் தனது சொத்துக்கு வாரிசுதாரர் இருக்கும் நிலையில் தனக்கு சொந்தமான முழு சொத்தையும் இறைவழியில் செலவிட நபி(ஸல்) அனுமதிக்கவில்லை.

தனக்கு ஒரேயொரு மகள் உள்ள நிலையில் அவரும் செல்வ செழிப்புடன் உள்ள நிலையில் தனது சொத்தை இறைவழியில் செலவு செய்வது பற்றிய தீர்ப்பை ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி) கேட்கிறார்கள்.

'இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அவர்கள், 'வேண்டாம்" என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அதற்கும், 'வேண்டாம்" என்றே பதிலளித்தார்கள். நான், 'மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)" என்று கேட்டேன். அவர்கள், 'மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒரு கவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.) அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை. (புகாரி பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2742 )

பல நூல்களில் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது. திர்மிதியில வரும் செய்தியில் தம் மகள் செல்வநிலையில் இருக்கிறார் என்ற கூடுதல் விபரம் கூறப்பட்டுள்ளது.

ஒருவன் தன் சொத்தில் தன் வாரிசுக்கு கிடைக்க வேண்டிய பங்கை கிடைக்காமல் செய்து இழப்புக்குள்ளாக்கி விட்டால் அல்லாஹ் தீர்ப்பு நாளில் சுவனத்தில் அவனுக்குரிய பங்கை இழக்க செய்து விடுவான் என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அனஸ்(ரலி) அறிவிக்கும் இந்த செய்தி இப்னுமாஜாவில் இடம் பெறுகின்றது.
இந்த ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் சட்டங்கள்.

 *ஒருவர் தம் சொத்துக்கு முழு உரிமைப் படைத்தவராவார்
 *தள்ளாத காலம் வரை காத்திராமல் வாலிபக் காலங்களில் இறைவழியில் செலவு செய்ய வேண்டும்.
 *செலவு செய்கிறேன் என்று குடும்பத்தாருக்கு இழப்பு ஏற்படுத்தி விடக் கூடாது. அவர்கள் செல்வ நிலையில் இருந்தாலும் சரியே.
 *மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தையோ அல்லது அதற்கும் குறைவாகவோ தான் வஸியத் செய்யலாம்.
 *செலவு செய்ய முடிவு எடுத்து விட்ட நிலையில் சொத்துக்கு வாரிசுதாரராகாத பிற உறவினர்களுக்கு, சொந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
 *சொத்து சொர்க்கத்தில் நமது இடத்தை தீர்மானிக்கும் என்பதால் மிகுந்த கவனம் தேவை.
அடுத்து சொத்துதாரி உயிருடன் இருக்கும் போது தன் குழந்தைகளுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து பார்ப்போம்.

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 18:46)

அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா (26:88)
ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் போது இயற்கையாகவே ஒரு குழந்தை மீது அன்பு அதிகமாக இருக்கத்தான் செய்யும். இதன் காரணத்தால் பிற குழந்தைகளை விட குறிப்பிட்ட குழந்தைக்கு எதையும் அதிகமாக கொடுக்கும் மனநிலை வரும்.

செலவிடுதல்.

குழந்தைகளுக்கு செலவிடுவதில் யாரொருவரும் விதிவிலக்கில்லாமல் வித்தியாசப்படவே செய்வர். பெற்றப்பிள்ளைகளுக்கு செலவிடப்படும் தொகை வித்தியாசமாக இருக்கக் கூடாது என்று யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. அது கட்டாயம் வித்தியாசப்படவே செய்யும். சில குடும்பங்களில் ஆண்குழந்தைகளின் படிப்புக்கும், பிற குடும்பங்களில் பெண் குழந்தைகளின் திருமண வாழ்க்கைக்கும் செலவிடப்படும் தொகையைப் பார்த்தால் பெரும் வித்தியாசம் இருக்கும். இது பிள்ளைகளின் தேவை அறிந்து செய்ய வேண்டிய செலவீனமாகும். இது தந்தை மீதான கடமை. இதில் வித்தியாசம் இருக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்லவில்லை. "தேவையே" இங்கு பிரதானமாக பார்க்கப்படுவதால் இந்த வித்தியாசத்தால் சொத்துக்குரியவர் குற்றவாளியாக மாட்டார்.

கொடுத்தல்.

செலவிடுவதை கடந்து குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுக்காக கொடுக்கப்படும் தொகை, அல்லது சொத்து போன்றவற்றில் அவர்களைக் கலந்துக் கொள்ளாமல் பாராபட்சம் காட்டக் கூடாது. இது குழந்தைகளுக்கு மத்தியில் வீண் மனதாபத்தையும், சண்டை சச்சரவையும் ஏற்படுத்தி விடும். "நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரியாவீர்கள், உங்கள் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்" என்ற நபிமொழியை கவனத்தில் கொண்டு தந்தை நடந்துக் கொள்வதே அறிவுடமையாகும்.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மேடையின் மீது நின்று கொண்டு, என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே* நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன், அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார். புகாரி பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2587

இந்த நபிமொழியிலிருந்து பெறப்படும் உண்மை 'கொடுக்கும் விஷயத்தில் குழந்தைகளுக்கு மத்தியில் நீதியாக நடந்துக் கொள்ள வேண்டும்" என்பதாகும்.

பல குடும்பங்களில் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் பிரச்சனைகள் வெடிப்பதற்கு காரணமே தாய் தந்தையின் பாராபட்ச பொருளாதார அன்பளிப்புகளே.

முஸ்லிம் குடும்ப தலைவர்கள், தலைவிகள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டிய ஒன்று குழந்தைகளுக்கு மத்தியில் பாராபட்சமாக நடக்காமலிருப்பதாகும்.

தந்தை மரணித்தப்பின் வாரிசுரிமை பெறுபவர்கள் என்பதும், அவர் உயிருடன் இருக்கும் போது தனது சொத்தை பகிர்வது என்பதும் வெவ்வேறாகும். வாரிசுரிமையுள்ளவர்களுக்கு சொத்துதாரர் உயிருடன் இருக்கும் போது எதையும் கொடுக்கக் கூடாது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை.

2.சொத்து முழுவதையும் ஒருவர் பகிர்ந்து அளித்து விட்டு மரணித்துவிட்டார். இது தெளிவான பிரகு மரணித்தவரின் வாரிசுகள் தமது பங்குகளை குர்ஆன் சட்டப்படி மீளப் பகிர்ந்துகொள்ள வேண்டுமா அல்லது அது அவர்களுக்கு குற்றமில்லையா?

தனது சொத்து முழுவதையும் சொத்துக்கு வாரிசிலலாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடாது. மரண சாசனம் செய்யக் கூடாது என்பதை நாம் முன்னர் கண்டோம்.

சொத்துக்கு வாரிசாக முடியாத பிறருக்கு ஒருவர் தனது சொத்து முழுவதையும் எழுதி விட்டு மரணிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அந்த சொத்துக்கு வாரிசாகக் கூடியவர்கள் இஸ்லாமிய நீதி மன்றத்தை அணுகலாம். அணுகினால் அவர்களுக்கு வெற்றிக் கிடைக்கும் இதற்கான ஆதாரத்தை கண்டு விட்டு தொடர்வோம்.

ஆறு அடிமைகளைப் பெற்றிருந்த ஒரு நபித்தோழர் அந்த அடிமைகள் தவிர வேறெந்த சொத்தும் இல்லாத நிலையில் மரணிக்கும் போது ஆறு அடிமைகளையும் விடுதலை செய்து விட்டு மரணித்துவிட்டார். இறந்தவரின் வாரிசுதாரர்கள் இதுகுறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்ட போது அந்த ஆறு அடிமைகளையும் அழைத்து இருவர் இருவராக மூன்று அணியாக அவர்களைப் பிரித்து சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். பெயர் வந்த அணியினரை விடுதலை செய்து நால்வரை வாரிசுதாரர்களுக்கு உடைமையாக்கி விட்டார்கள். (இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அறிவிக்கும் இச் செய்தி முஸ்லிம், அபுதாவூத் போன்ற நூல்களில் வருகின்றது.

வேறெந்த சொத்தையும் வைத்திருக்காத நிலையில் இருக்கும் சொத்தையும் பிறருக்கு வழங்கி மரணித்த ஒரு நபித்தோழரின் செயலை நபி(ஸல்) சரிகாணவில்லை. மரணித்தவரின் குடும்பத்தார் எதுவுமின்றி நிற்கும் நிலையில் அனைத்தையும் தானம் செய்யக் கூடாது என்பதை இந்த நபிமொழியிலி்ருந்து விளங்கலாம். மூன்றில் ஒருபங்கு அதாவது 33 சதவிகிதத்திற்கு அதிகமாக ஒருவர் பிறருக்கு கொடுத்து விட்டோ அல்லது உயில் எழுதி விட்டோ மரணித்தார் என்றால் அந்த 33 சதவிகிதத்திற்கு அதிகமானவற்றை மீட்க நாம் நடவடிக்கை எடுக்கலாம்.

குர்ஆனின் அறிவைப் பெற்று அதன்படியோ அல்லது குர்ஆனின் அறிவு இல்லாமலோ ஒருவர் தனது பிள்ளைகளுக்கு தான் உயிருடன் இருக்கும் போதே கூடுதல் குறைவாக தனது சொத்தை பிரிந்து அவரவர் பெயரில் எழுதி வைத்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் மரணித்த பிறகு அவர் எழுதி வைத்த சொத்துக்களை மீளாய்வு செய்து - ஒன்று திரட்டி மீண்டும் குர்ஆன் சொல்லும்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை. அது தவறும் கூட.

வாரிசுரிமை, பாகப்பிரிவினை பற்றி பேசும் குர்ஆன் வசனங்கள் அனைத்தும் ஒரு சட்டத்தை நமக்கு தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது. மரணித்தவர் விட்டு சென்ற சொத்தில் அவரது கடன், மரண சாசனம் (உயில்) போக மீதியுள்ளவற்றில் தான் பிறருக்கு உரிமையுள்ளது என்று.

என்றைக்கு தனது வாரிசுகள் பெயரில் சொத்து மாற்றப்படுகின்றதோ அன்று முதல் அந்த சொத்துக்குரியவர் அந்த வாரிசுதானே தவிர மாற்றி கொடுத்தவருக்கும் அந்த சொத்துக்கும் எந்த உரிமையுமில்லை. மாற்றிக் கொடுத்தவருக்கே உரிமையில்லை எனும் போது பிறர் அந்த சொத்து குறித்து நடவடிக்கை எடுப்பது என்பது இயலாத காரியமாகும்.

நான்கு அல்லது மூன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றுள்ள ஒருவர் தான் உயிருடன் இருக்கும் போது அந்த குழந்தைகளுக்கு மத்தியில் வித்தியாசத்தில் தனது சொத்தை பிரிக்கிறார். மகன்களுக்கு அதிகமாகவும், பெண்பிள்ளைகளுக்கு குறைவாகவும், அல்லது பெண் பிள்ளைகளுக்கு அதிகமாகவும், ஆண்பிள்ளைகளுக்கு குறைவாகவும் பிரித்து அவர்கள் பெயரில் சொத்தை மாற்றி எழுதி பதிவு செய்து விடுகின்றார். அவரது மரணத்திற்கு பின் குழந்தைகள் இதை பாராபட்சமாக கருதுகின்றது. இப்போது அந்த பிள்ளைகளாக வேண்டுமானால் ஒன்று சேர்ந்து பேசி தனது சொத்துக்களை விரும்பியவாறு பிரித்துக் கொள்ளலாமே தவிர தந்தை எழுதி வைத்தது செல்லாது அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை.

ஒருவேளை பிள்ளைகளுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால், தன் தந்தை மூலம் தமக்கு கிடைத்த சொத்தை மீண்டும் பகிர்ந்தளிப்பதற்கு நான் உடன்பட மாட்டேன் என்று கூறினால் அவ்வாறு கூறுபவர் குற்றவாளியுமல்ல. அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் முடியாது.

3.சூரதுன் நிசாவில் வாரிசுரிமைச் சட்டங்கள் சொல்லிவிட்டு 14 ஆவது வசனத்தில் இதை மீருபவர்கள் நிரந்தர நரக வாதிகள் என்று கொல்கிறது இதனை நாம் எப்படி தெளிவாக விளங்குவது.
Name: Inam Ul Haq
email: inam. mail2me@....
Location: Sri Lanka
Subject: Kelvi

பாகப்பிரிவினை பற்றிப் பேசும் அனைத்து வசனங்களும் மரணித்தவருக்கு பிறகு அந்த சொத்தை பிரிப்பவர்கள் பற்றியே பேசுகின்றது. அவ்வாறு பிரிப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய கடமை 1) மரணித்தவரின் கடன், 2) அவர் எழுதி வைத்துள்ள மரண சாசனம் (உயில்) இவை இரண்டும் போகவே பிற சொத்தில் பாகபிரிவினை. இது இறைவனின் வரம்பாகும். இதை மீறுபவர்கள்தான் தண்டிக்கப்படுவார்கள் என்கிறான் இறைவன். ஏற்கனவே பிரித்து எழுதப்பட்ட சொத்திற்கும், இறைவனின் இந்த எச்சரிக்கைக்கும் எந்த சம்மந்தமுமில்லை.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

 
பெண்களின் கடமையான குளிப்பு எப்படி?
 
கடைமையான குளிப்பை குளிக்கும் போது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்ன?

மாதவிடாய், கணவனுடன் இல்லறத்தில் சேருதல், தூக்கத்தில் உச்சத்தை அடைதல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு குளிப்பு கடமையாகின்றது. கடமையான குளிப்பை நிறைவேற்றும் பெண்களுக்கு,

ஒளு.

குளிக்கத்துவங்குமுன் ஒளு செய்துக் கொள்ள வேண்டும்.

'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 5, எண் 248 )

'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 5, எண் 249 )

ஆரம்பமாக கைகளில் தண்ணீர் ஊற்றி கைகளை கழுவி பிறகு ஒளு செய்து, அதன் பின் தலையின் அடிப்பாகம் - அதாவது முடியின் வேர்களும் தோல் பகுதியும் - நனையும் விதத்தில் தண்ணீர் செலுத்தி விட்டு பிறகு உடம்பி்ன் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

தலைமுடியை அவிழ்க்க தேவையில்லை.

பொதுவாகவே பெண்களுக்கு தலையில் முடி அதிகமாக இருக்கும். பல பெண்கள் தலைமுடியில் கூடுதல் கவனம் செலுத்தி அதை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்த்து பாதுகாப்பார்கள். இத்தகைய பெண்கள் கடமையான குளிப்பு குளிக்கும் போது சிரமத்துக்கு ஆளாவார்கள். ஏனெனில் தலைமுடியை அவிழ்த்து அதை முழுவதும் கழுவி குளித்து காயவைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். உண்மையில் முஸ்லிம் பெண்கள் கடமையான குளிப்பை குளிக்கும் போது தலை முடி முழுவதையும் நனைக்க வேண்டுமா...? என்று பார்த்தால் இஸ்லாம் இலகுவான மார்க்கம் பெண்களுக்கு அத்தகைய கட்டளையை இடவில்லை. கீழ் வரும் ஹதீஸை பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதரே! நான் என் தலைமுடியை சடைப் போட்டு பிண்ணிக் கொள்கிறேன். கடமையான குளிப்பிற்காக அதை அவிழ்த்து விட்டு குளிக்க வேண்டுமா என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'வேண்டாம்' தண்ணீரை உன் தலையில் மூன்று முறை ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். பின்னர் உன் உடல் நனையும் படி தண்ணீரை ஊற்றிக் கொள் இவ்வாறு செய்து விட்டால் நீ சுத்தமாகி விடுவாய் என்றார்கள். (கேட்டறிந்த உம்முஸலாமா என்ற நபித்தோழியரின் இந்த அறிவிப்பு பல நூல்களில் வருகின்றது. திர்மிதி 98)



கடமையான குளிப்பு விஷயத்தில் பெண்கள் மிகுந்த சிரத்தைக்குள்ளாக வேண்டியதில்லை. நாம் ஆரம்பத்தில் புகாரியிலிருந்து எடுத்துக் காட்டிய ஹதீஸில் "நபி(ஸல்) தண்ணீரில் கைகளை நனைத்து அதை தலையின் அடிபாகத்திற்கு செலுத்துவார்கள்" என்று வந்துள்ளது. முடிகாம்புகளும் தலையின் தோல்பகுதியும் நனையும் விதத்தில் இவ்வாறு செய்துள்ளார்கள். அதுதான் முக்கியமே தவிர முடி முழுதும் நனைய வேண்டும் என்பது சட்டமல்ல என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தீட்டு இல்லை.

குளிப்பு கடமையான பெண்கள் முடி முழுவதையும் நனைத்து - கழுவியாக வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்கம் பேசுபவர்களில் பலரும் இப்படி கூறிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். குளிப்பு கடமைப்பற்றி சட்டம் கேட்கும் போதும், பெண்களே பெண்களுக்கு இது பற்றி கூறும் போதும் முடி முழுவதையும் கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள். நபி(ஸல்) அவ்வாறுதான் கட்டளையிட்டுள்ளார்கள் என்பது இவர்களின் வாதம்.

இதற்காக எடுத்துக்காட்டப்படும் ஹதீஸ்.

ஒவ்வொரு முடியிலும் தொடக்கு உண்டு. அதனால் முடிகளைக் கழுவி உடம்பை சுத்தம் செய்யுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.




திர்மிதி - அபூதாவூத் - இப்னுமாஜா ஆகிய மூன்று நூட்களிலும் இன்னும் பல வழிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் 'ஹாரிஸ் இப்னு வஜீஹ்' என்பவர் வருகிறார். அவர் பலவீனமானவர், இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கதல்ல என்று புகாரி இமாம் உட்பட பலர் கூறியுள்ளார்கள். முடியில் தொடக்கு உண்டு என்று வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை. எனவே முடி முழுவதும் நனையும் விதத்தில் குளிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமுமில்லை.
தலைப்பகுதி, முடிகாம்பு நனையும விதத்தில் குளித்தாலே போதும்.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger