Monday, March 14, 2011

வஹியில் குழப்பமா..?

ராம் ஸ்வர்ப் என்பவர் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஹிந்து மதத்தைச் சார்ந்தவர். ''ஹதீஸின் வாயிலாக இஸ்லாத்தை அறிந்து கொள்ளுதல்'' என்று ஹிந்தி மொழியில் இவர் எழுதிய நூல் இந்திய அரசால் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருக்கின்றது. இஸ்லாத்தைக் குறைகூறும் வாய்ப்புக்காக காத்துக்கிடந்த இவருக்கு சாலமன் ரஷ்டியின் 'சாத்தானின் வசனங்கள்' என்ற நூல் சர்க்கரையாக அமைந்தது. இந்தியாவிலும், இன்னும் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அந்த நூல் எப்படியோ 'ராம் ஸ்வர்ப்' என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. அதை படித்துவிட்டு ''புலமை சான்ற கேள்விகள்'' என்ற தலைப்பிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் 20-11-88, பக்கம் 5-ல் கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார். தவறான வாதங்கள், பொய்யான செய்திகளை உள்ளடக்கிய இஸ்லாத்தை நோக்கி அவர் எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது நமது கடமை என்பதால் இந்தக் கட்டுரை அவரது கேள்விகளை எடுத்து வைத்து அதற்கு விளக்கம் அளிக்கும் முன்பு 'சாத்தானின் வசனங்களையும், சல்மான் ரஷ்டியையும் பற்றி அவர் தரும் அறிமுகத்தை தந்துவிட்டு அவரது கேள்விகளுக்குச் செல்வோம்.

ராம்ஸ்வர்ப் சொல்கிறார்: சாலமன் ரஷ்டியின் சாத்தானின் வசனங்கள் இஸ்லாத்தையும், அதன் தூதரையும், அவருக்கு வந்த வேத வெளிப்பாடுகளையும் விமர்சிப்பதற்காகவே எழுதபட்டது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இவர் 'மக்கா' நகரை 'ஜாஹிலியா' என்ற பெயரால் தனது நூலில் குறிப்பிடுகிறார். இஸ்லாத்திற்கு முந்தைய காலத்து மக்காவை இஸ்லாமிய வரலாறுகள் 'ஜாஹிலியா' என்றே குறிப்பிடுகின்றன. ருஷ்டி தனது நூலில் முஹம்மதை குறிப்பிடும்போது 'மஹவுன்ட்' என்றும் நபிகளின் எதிரியாக திகழ்ந்த அபூஸஃப்யானை 'அபூஸிம்பல்' என்றும் சிறிய மாற்றத்துடன் குறிப்பிடுகிறார். ஏனைய பாத்திரங்களைக் குறிப்பிடும்போது ரஷ்டி இந்த வித்தியாசத்தைக்கூட செய்யவில்லை. இஸ்லாமிய வரலாறுகளில் எவ்வாறு அவர்களின் பெயர் குறிப்பிடப்படுகிறதோ அவ்வாறே குறிப்பிடுகிறார். நபியின் சித்தப்பா ஹம்ஸா இஸ்லாத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட நீக்ரேர் அடிமை பிலால் மற்றும் காலித் ஆகியோர் இதே பெயர்களாலேயே இவரது நூலில் குறிப்பிடப்படுகிறார்கள். மக்காவில் லி அதாவாது ஜாஹிலியாவில் பனிரண்டு பரத்தையர் இருந்ததாகக் குறிப்பிடும் இவர், அந்தபரத்தையருக்கு நபியின் மனைவியரின் பெயரைச்சூட்டி மகிழ்கிறார். இது கீழ்தரமான, அநாகரீகமான சித்தரிப்பாக அமைந்துள்ளது. 'நான் இந்த நூலில் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை வெறும் கற்பனையாக எழுதப்பட்ட கதைதான் எனது நூல்'' என்று ரஷ்டி இப்போது பின்வாங்கினாலும் உண்மையில் அவர் இஸ்லாத்தையும் அதன் தூதரையும், அவருக்கு வந்த வேதவெளிப்பாடுகளையும் விமர்சனம் செய்வதை தலையாய நோக்கமாகக் கொண்டே தனது நூலை எழுதி இருக்கிறார் என்பது அவரது நூலைப் படிக்கும் போது உணர முடிகின்றது.

இவை யாவும் ரஷ்டியை பற்றியும், அவரது நூல் பற்றியும் 'ராம் ஸ்வர்ப்' தருகின்ற அறிமுகமாகும். இந்தச் சிறிய அறிமுகத்திலிருந்து ரஷ்டியையும், அவரது நூலையும் நன்றாக நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. இஸ்லாத்தை விமர்சிப்பது தான் அவரது நோக்கம் என்றால் 'ராம் ஸ்வர்ப்' போல் தெளிவாக நேரடியாக விமர்சிக்கலாம்.

தனக்கு இஸ்லாத்தைப் பற்றி ஏற்படுகின்ற ஐயங்களை தெளிவாக எழுப்பி இருக்கலாம். ரஷ்டியிடம் அந்தத் துணிவையும், நாகரிகத்தையும் காணமுடியவில்லை. மாறாக மஞ்சள் பத்திரிக்கைகள், சினிமா கிசு கிசு செய்திகளைப் போல் நாலாம் தர நடையைத் தேர்வு செய்திருக்கிறார். 'ராம்ஸ்வர்ப்' செய்யும் அறிமுகத்திலிருந்து இதை நாம் நன்றாக விளங்க முடிகின்றது. முஸ்லிம் அறிஞர் உலகும், ராம் ஸ்வர்ப் போன்றவர்களும் இஸ்லாத்தையே அவர் விமர்சனம் செய்துள்ளார் என்று கண்டுபிடித்துச் சொன்ன பிறகும் கூட அவர் துணிவுடன் ஒப்புக் கொள்ள முன்வரவில்லை.

''நான் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை, கற்பனை கதைதான் நான் எழுதிய நூல்'' என்று இந்தியப் பிரதமருக்கு, கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் ரஷ்டி. அவ்வளவு துணிவும், நேர்மையும் கொண்டவர். ஓரு சமுதாயம் தங்கள் அன்னையர் என்று மதிக்கும் நபிகளின் மனைவியரின் பெயர்களை பரத்தையர்களுக்கு சூட்டி மகிழும் வக்கிரபுத்தியும், கீழ்த்தரமான எண்ணங்களையும் உடையவர் தான் ரஷ்டி என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ராம்ஸ்வர்ப்.

'ராம்ஸ்வர்ப்' போன்றவர்களே ஜீரணிக்கமுடியாத அளவுக்கு எழுதும் நாலாந்தர எழுத்தாளராக இவர் காட்சியளிக்கிறார். இவரைப் பற்றி எழுதுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல என்பதால் இத்துடன் விட்டுவிட்டு ராம்ஸ்வர்ப் எழுப்புகின்ற புலமை சான்ற கேள்விகளைப் பார்ப்போம்.

கேள்வி:1 மக்கத்துகாபிர்கள் அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் ஆகிய பெண் தெய்வங்களை வழிபட்டு வந்தனர். பல தெய்வ வணக்கம் கூடாது என்று போதித்த முஹம்மதுக்குத் திடீரென ஒரு வஹி வருகிறது. அல்லாத், அல்உஸ்ஸா, மற்றும் மூன்றாவதான மகாத்தைப் பற்றி நீர் நினைத்ததுண்டா? அவை போற்றப்பட்ட பறவைகள் அவற்றின் சிபாரிசுகள் நிச்சயமாக விரும்பப்படுகின்றது என்று அந்த வஹி கூறுகிறது. தங்களின் தெய்வங்களை முஹம்மது புகழ்ந்து கூறியவுடன் மக்காவாசிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்து முஹம்மதுவை பின்பற்றி அல்லாஹ்வை வணங்க வழி ஏற்படுகிறது. இந்த உடன்பாடு அற்ப ஆயுளில் முடிந்து விடுகிறது. அந்த தெய்வங்களைப் புகழ்ந்து தனக்கு வந்த வஹி, ஷைத்தானிடமிருந்து வந்தது என்பதை முஹம்மது சீக்கிரமே கண்டுகொண்டு, அதற்கு பதிலாக வேறு வசனத்தைக் கூறுகிறார். முஹம்மதுவால் திருத்திக் கூறப்பட்ட அந்த வசனம் ''அல்லாத், அல்உஸ்ஸா, மற்றும் மூன்றாவாதாக மனாத்தைப்பற்றி நீர் நினைத்ததுண்டா? உங்களாலும் உங்கள் மூதாதையராலும் இட்டுக்கட்டப்பட்ட பெயர்களேயன்றி இந்த பெண் தெய்வங்கள் வேறில்லை. (அல் குர்ஆன் 53:19-23)

இந்தத் தகவல்கள் கற்பனையானது அல்ல மாறாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களான தபரீ, வாகிதி போன்றவர்கள் இதைக்குறிப்பிடுகின்றனர். ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸ்களின் அடிப்படையிலே தனது நூலுக்கு 'சாத்தானின் வசனங்கள்' எனப் பெயரிட்டிருக்கிறார் ரஷ்டி. இந்தக் கதையை கூட்டவோ குறைக்கவோ இல்லாமல் சரியாகத் தரும் ரஷ்டி நம்முடைய உள்ளத்தில் முக்கிய வினாவையும் விதைக்கிறார். அதாவது ஷைத்தான் தோற்றுவித்த உதிப்பில் இருந்து எவ்வாறு மலக்குகள் தோற்றுவித்த உதிப்பைப் பிரித்தறிவது? இந்த விஷயத்தில் குர்ஆன் எந்த வழியையும் காட்டவில்லையே. மேலும் முஹம்மதுக்கு மட்டுமல்ல, அவருக்கு முன்தோன்றிய நபிமார்களும் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டனர் ஆனால் அவற்றை முறையாக இறைவன் ரத்து செய்துவிட்டான். (அல் குர்ஆன் 22:52) என்று குர்ஆன் இயம்புகிறது.

பதில்:1 இந்த விபரங்களின் அடிப்படையில் 'ராம்ஸ்வர்ப்' கேட்க விரும்புவதும், சொல்ல வருவது என்னவென்றால் ''திருக்குர்ஆனில் ஷைத்தான்களின் வசனங்களும் இடம் பெற்றுள்ளன அவற்றை வேறுபடுத்தி அறிந்திட குர்ஆன் எந்த வழியையும் காட்டவில்லை'' என்பது தான் இதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸையும், ஒரு குர்ஆன் வசனத்தையும் சமர்ப்பிக்கிறார். முதலில் 'ராம்ஸ்வர்ப்' தனது வாதத்துக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் ஹதீஸைப் பார்ப்போம். அந்த ஹதீஸைப் பற்றி 'ஆதாரப்பூர்வமான ஹதீஸ்' என்று ராம்ஸ்வர்ப் குறிப்பிடப்படுவதிலிருந்து ஹதீஸ்களில் ஆதாரப்பூர்வமானவைகளும் ஆதாரமாகக் கொள்ளத் தகாதவைகளும் உள்ளன என்பதை ராம்ஸ்வர்ப் அறிந்திருக்கிறார் என்பது தெரிகின்றது. 'ஆதாரப்பூர்வமான ஹதீஸ்' என்ற அடைமொழியுடன் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸ் உண்மையில் ஆதாரப்பூரவமானது அல்ல மாறாக இட்டுக் கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும் இது. 'ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்' என்று சொல்லப்படுவதற்கு முஸ்லிம் உலகம் எந்தத் தகுதிகளை வரையறுத்திறுக்கிறதோ அந்தத் தகுதியை இது பெற்றிருக்கவில்லை.

உதாரணமாக ஹதீஸை ஒருவரிடமிருந்து ஒருவராக அறிவிப்பவர் தமக்கு முந்திய அறிவிப்பாளரைச் சந்தித்திருக்கவேண்டும்; அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக அமையும். 'ராம்ஸ்வர்ப்' எடுத்து வைக்கும் இந்த ஹதீஸில் இந்த இரண்டு தகுதிகளுமே இல்லாமலிருக்கின்றன. தபரி, வாகிதி குறிப்பிடுவதால் மட்டும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக ஆகிவிட முடியாது. இந்த ஹதீஸைப் பொறுத்தவரை ''இந்த நபர் எனக்கு கூறினார் என்று அறிவிக்கும் இரண்டாம் நபர் முதலாம் நபரைச் சந்தித்ததாகவோ அவரது காலத்தில் வாழ்ந்தவராகவோ இல்லை. முப்பதுக்கும் மேற்பட்ட வழிகளில் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி பெரும்பாலான அறிவிப்புகளில் சொல்லி வைத்தாற் போல இந்த குறைபாட்டைக் கொண்டதாக உள்ளது. ''காரல் மாக்ஸ் இதை என்னிடம் கூறினார்'' என ராம்ஸ்வர்ப் கூறினால் அந்தக் கூற்றின் நிறை எதுவோ அதேநிலையைத் தான் இந்தச் செய்தியும் பெறுகிறது. மேலும் பல குறைபாடுகளையும் இந்தச் செய்தி உள்ளடக்கி இருக்கிறது 'ராம்ஸ்வர்ப்' இப்போது இதை விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டதால் நாம் இவ்வாறு கூறவில்லை எவரும் விமர்சிப்பதற்கு முன்லிபலநூறு ஆண்டுகளுக்கு முன்லிவாழ்ந்த அறிஞர் பெருமக்கள் இதை அலசி இது பொய் என்று தள்ளுபடி செய்துள்ளனர். அவர்கள் தள்ளுபடி செய்த இந்தக் குப்பையைத் தான் ரஷ்டியும், ராம்ஸ்வர்பும் இப்போது கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.

''இஸ்லாத்தின் எதிரிகள் திட்டமிட்டுப் புனைந்த பெரும் பொய்யாகும் இந்தச் செய்தி'' என்று அறிஞர் இப்னு குஸைமா குறிப்பிடுகிறார். ''இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசை சரியானதல்ல'' என்று 'பைஹகீ' எனும் அறிஞர் குறிப்பிட்டுவிட்டு இந்தச் செய்தியை அறிவிப்பவர்களின் குறைபாடுகளையும் பட்டிலிட்டுக்காட்டுகிறார். அறிவிப்பாளர்களில் ஒருவருக்கொருவர் தொடர்பு எதுவும் இல்லாத வகையில் இது அமைந்துள்ளது என்று 'பஸார்' என்னும் அறிஞர் கூறுகிறார். இந்தச் செய்தியை நபித் தோழர்கள் எவரும் கூறாமல் நபித்தோழர்களின்அடுத்த காலத்தவர்கள்தான் அறிவிக்கின்றனர். இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் அது நடந்த காலத்தில் பிறந்தே இருக்காதவர்களால் எப்படி அறிவிக்க முடியும் என்று கேட்கிறார் ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் ஒன்றிரண்டு அறிவிப்பாளர் வரிசையில் நபித்தோழர்கள் அறிவிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் நபித்தோழர்கள் கூறியதாக அறிவிக்கும் அடுத்தடுத்த அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இல்லை என்றும் இப்னு கஸீர் மேலும் கூறுகிறார். ஆதாரமற்ற இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தியைத்தான் ஆதாரப்பூர்வமானது என்கிறார் ராம்ஸ்வர்ப். இவர் எடுத்து வைக்கும் ஆதாரமே பொய் என்று ஆகிவிடும்போது அதனடிப்படையில் அவர் எழுப்பிய கேள்வியும் புலமை சான்ற கேள்வி (?) என்ற நிலையிலிருந்து இறங்கிவிடுகின்றது. அல்லாத், அல் உஸ்ஸா மற்றும் மனாத் பற்றி இன்று நாம் காணுகின்ற 53:19-23 வசனங்களைத்தவிர வேறு எதுவும் அருளப்படவில்லை.

இந்தக் கதை உருவாக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதையும் அறிந்து கொள்வது இங்கே அவசியமாகும். 'அன்னஜ்மு' என்ற 53-வது அத்தியாயத்தை (அதாவது அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயத்தை) நபி (ஸல்) அவர்கள் ஓதியபோது ஸஜ்தா செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து முஸ்லிம்களும் நபியின் எதிரிகளும் ஸஜ்தா செய்தனர்'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழர் அறிவிக்கும் செய்தி 'புகாரி' நூலில் இடம்பெறுகின்றது. இந்த ஆதாரப்பூர்வமான செய்தியில் நபியுடன் அவரது எதிரிகளும் ஸஜ்தா செய்ததாகக் கூறப்படுகின்றது. நபியுடன் சேர்ந்து நபியின் எதிரிகள் எப்படி ஸஜ்தா செய்திருப்பார்கள்? அவர்கள் ஸஜ்தா செய்யும் அளவுக்கு நபியுடன் ஒத்துப்போனார்களென்றால், அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக நபி ஏதேனும் சொல்லி இருக்கவேண்டும். அவர்களின் தெய்வங்களைப்பற்றி புகழ்ந்து நபி ஏதேனும் சொல்லி இருந்தாலே அவர்கள் ஸஜ்தா செய்திருக்க முடியும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்தக் கதை புனையப்பட்டது.

நபியின் எதிரிகள் நபியுடன் சேர்ந்து ஸஜ்தா செய்யக்காரணம் தான் என்ன? என்ற ஐயம் சிலருக்கு எழலாம். நபியின் எதிரிகள் பல்வேறு கடவுளர்களை நம்புபவர்களாக இருந்தாலும் அவைகளைக் கடவுளர்களாக எண்ணிக்கொண்டிருக்கவில்லை. இவர்களுக்கெல்லாம் மேலாக மிகப்பெரிய கடவுள் ஒருவன் இருக்கிறான். அவன்தான் ''அல்லாஹ்'' என்பதே அவர்களின் கொள்கையாக இருந்தது.

வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நபியே நீர்அவர்களைக் கேட்டால் 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள் அல்குர்ஆன் (31:25) மேலும் (29:61, 29:63, 39:38, 43:9, 43:87, 10:18, 39:3) ஆகிய வசனங்களிலும் மக்கத்து மாந்தர்கள் அல்லாஹ்வை நம்பி ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்ற விபரம் கூறப்படுகிறது. அன்னஜ்மு அத்தியாயத்தில் இடம்பெறும் அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் பற்றிக் கூறப்படும் வசனத்தை ஓதியபோது நபிகள் ஸஜ்தா செய்யவில்லை மாறாக அந்த அத்தியாயத்தின் கடைசியில் ''அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்யுங்கள்! வணங்குங்கள்!! என்று வருகின்ற வசனத்தை ஓதும்போதுதான் நபிகள் ஸஜ்தா செய்தார்கள். அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்வது நபிகளின் எதிரிகளுக்கும் உடன்பாடு என்பதால் அவர்களும் சேர்ந்து ஸஜ்தா செய்தனர்.

''ஸஜ்தா செய்யுங்கள்!'' எனக்கட்டளையிடும் வசனங்களில் முதன் முதலில் அருளப்பட்டது அன்னஜ்மு அத்தியாயத்தில் உள்ள வசனமாகும். அதற்காக நபிகள் ஸஜ்தா செய்தபோது நபிகளின் எதிரிகளும் ஸஜ்தா செய்தனர்.'' அப்துல்லா எனும் நபித்தோழர் அறிவிக்கும் இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து நபிகள் 53:192 வசனத்தின் போது ஸஜ்தா செய்யவில்லை, அதன் இறுதி வசனத்தின்போதே ஸஜ்தா செய்தார்கள் என்று அறியலாம். 53:192 வசனத்தின் போது ஸஜ்தா செய்தார்கள் என்று சிலர் எவ்வித ஆதாரமுமின்றி நம்பிக்கொண்டு, அதற்கு ஒரு காரணத்தையும் சிருஷ்டித்துவிட்டார்கள். அவர்களால் சிருஷ்டிக்கப்பட்ட அந்தப் பொய்யான காரணம்தான் 'ராம்ஸ்வர்ப்' எடுத்துக் காட்டும் அந்தக் கதை. ரஷ்டியும், ராம்ஸ்வர்ப்பும் எடுத்துக் காட்டிய செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்று ஆகிவிடும் போது அதன் அடிப்படையில் அவர்கள் எழுப்பிய கேள்விகளும் அடிபட்டு அர்த்தமற்றுப் போகின்றன.

மேற்கூறிய அந்தப்பொய்யான நிகழ்ச்சியின் மூலம் ராம்ஸ்வர்ப் எழுப்பிய கேள்வி என்னவென்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். ''நமக்கு ஷைத்தானிடமிருந்தும் வஹி வந்ததை ஹதீஸ் கூறுகின்றது. ஆனால் ஷைத்தான் தோற்றுவித்த உதிப்பில் இருந்து மலக்குகள் தோற்றுவித்த உதிப்பைப் பிரித்தறிவது எப்படி?'' என்பதே அந்தக் கேள்வி. நபிகளுக்கு ஷைத்தான் உதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறும் அந்தச் செய்தி பொய் என்று நிரூபணமான பின் பிரித்தறிவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இல்லாத ஒன்றைப் பிரித்தறிய வழி முறையைச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ராம்ஸ்வர்ப் எடுத்துக்காட்டிய அந்தச் செய்தி பொய்என்பதை ஏராளமான குர்ஆன் வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன.
முஹம்மத் நம் மீது எதையாவது இட்டுக்கட்டிக் கூறி இருப்பாரானால் வலக்கரத்தால் அவரைப்பிடித்து அவரது நாடிநரம்புகளைத் துண்டித்திருப்போம். (அல் குர்ஆன் 69:44)

நாமே இந்த போதனையை அருளினோம் அதை நாமே பாதுகாப்போம். (அல்குர்ஆன் 15:9)

ஓதுவதற்காக அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத்திரட்டி (உம் உள்ளத்தில்) பதியச் செய்வதும், ஓதச் செய்வதும் நம்முடைய வேலையாகும். (அல்குர்ஆன் 75:16)

முஹம்மது தம் இச்சைப்படி பேசமாட்டார், அது இறைவனால் அறிவிக்கப்பட்ட செய்தியைத்தவிர வேறு இல்லை. (53:3)

இந்த வசனங்கள் யாவும் வேத வசனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்பதைத் தெளிவாக்குகின்றன. ஷைத்தான் குறுக்கிட்டு எதையும் சேர்த்துவிட முடியாது என்று அறைகின்றன. இன்னும் தெளிவாக ''இது விரட்டப்பட்ட ஷைத்தானுடைய சொல் அன்று'' (81:25) எனவும் அல் குர்ஆன் குறிப்பிடுகிறது. இதை ஷைத்தான்கள் இறக்கியருளவில்லை, அவர்கள் அதற்கு சக்தி பெறவும்மாட்டர்கள். (26:210) ஷைத்தான்களால் உதிப்பு ஏற்படுத்தப்படும் என்பதை முற்றாக இந்த வசனங்கள் நிராகரிக்கும் போது ஆதாரமற்ற பொய்யான ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று முத்திரை குத்தி 'ராம்ஸ்வர்ப்' தன் கேள்வியை எழுப்புகின்றார்.

நபிகள் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டார்கள் என்றதன் கூற்றுக்கு திருக்குர்ஆனின் ஒரு வசனத்தையும் துணைக்கு அழைத்திருக்கிறார். ''முஹம்மதுக்கு முன் தோன்றிய நபிமார்களும் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டனர். ஆனால் இறைவன் அவற்றை முறையாக ரத்து செய்துவிட்டான் என்று குர்ஆனுடைய 22:52 வசனம் கூறுவதாக ராம்ஸ்வர்ப் கூறுகிறார். அவர் குறிப்பிட்டது. போல் குர்ஆன் கூறுமானால் ராம்ஸ்வர்ப் உடைய கேள்வி புலமை சான்ற கேள்வி என்பதில் ஐயமில்லை. ஆனால் திருக்குர்ஆன் அவ்வாறு கூறவே இல்லை. ஒரு சிலர் செய்துள்ள தவறான மொழிபெயர்ப்பை நம்பி அவர் இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்.

அல்குர்ஆன் 22:52 வசனத்திற்கு ''எந்த ஒரு தூதரை நாம் அனுப்பினாலும் அவரது உள்ளத்தில் ஷைத்தான் உதிப்பு ஏற்படுத்தாமல் இருந்ததில்லை; ஆனால் ஷைத்தான் ஏற்படுத்திய உதிப்பை அல்லாஹ் அகற்றி தன் வசனங்களை உறுதி செய்கிறான் என்று சிலபேர் மொழியாக்கம் செய்துள்ளனர், அதுதான் ராம்ஸ்வர்ப்புடைய இந்தக் கேள்விக்குக் காரணம். உண்மையில் அந்த வசனத்தின் பொருள் என்ன? என்பதைச் சொல்வதற்கு முன்னால் ராம்ஸ்வர்ப்புக்கு ஏற்படக்கூடிய ஒரு சந்தேகத்தை நாம் நீக்கி விடுவோம். இவரைப் போன்றவர்கள். இந்த வசனத்தின் அடிப்படையில் 'புலமை சான்ற கேள்வி (?) கேட்டு விட்டதால் மொழிபெயர்ப்பு தவறு என்று நாம் சமாளிப்பதாக அவர் எண்ணக்கூடும். அவருக்கு அந்த சந்தேகம் வரதேவையில்லை. நாம் சரியான மொழிபெயர்ப்புக்கு சான்றாக இப்போதைய அகராதிகளைக் காட்டமாட்டோம். 1400 ஆண்டுகளுக்கு முன் நபித்தோழர்கள் சொன்னதையே சரியான மொழிபெயர்ப்புக்கு சான்றாகத் தருவோம்.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger