Sunday, April 3, 2011

எது பெண்ணுரிமை - 1 (புத்தகம்)

பெண்கள் மீதான நேர் – எதிர்மறையானப் பார்வைகள்

(முக்கியக் குறிப்பு : சுமார்  12 ஆண்டுகளுக்கு முன் வங்க தேசத்தைத் தாய்நாடாகக் கொண்ட தஸ்லிமா நஸ்ரின் என்ற ஒரு பெண் எழுத்தாளர் – லஜ்ஜா – என்று ஒரு நூலை வங்க மொழியில் எழுதினார். முஸ்லிம் பெண்களின் அவல நிலையை சொல்லப் போவதாக துவங்கி இஸ்லாத்தில் பெண்களுக்குரிய சட்டக் கோட்பாடுகளை விமர்சித்து எழுதியதோடு குர்ஆன் மாற்றப்பட வேண்டும் என்றும் தனது கருத்தை வெளியிட்டார். (தான் அவ்வாறு சொல்லவே இல்லை என்று பின்னர் மறுத்தார்) அவர் பற்றிய சர்ச்சை கிளம்பியவுடன் சில இஸ்லாமிய அமைப்புகள் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியது. இதற்காகவே காத்துக் கிடந்த இஸ்லாமிய விரோத சக்திகள் தஸ்லிமாவிற்கு ஆதரவு என்ற பெயரில் களம் இறங்கி இஸ்லாத்தை விமர்சித்துத் தள்ளியது. தமிழகத்தின் பல பத்திரிக்கைகளும் இதில் அடக்கம். தமிழகப் பத்திரிக்கைகளுக்கு பதில் கொடுத்து இஸ்லாத்தின் உண்மை நிலையை விளக்குவதற்காக இலவசப் பிரதியாக இந்நூல் தொகுக்கப் பட்டு தமிழகம் முழவதும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதைப் படித்து விட்டு ‘போலிஸ் செய்தி, புதியப் பார்வை, புதிய கலாச்சாரம்’ ஆகிய இதழ்கள் மறுப்புக் கட்டுரை வெளியிட்டன. புதியப் பார்வையில் கருத்துக்கள் பற்றிய விமர்சனம் இல்லாமல் இஸ்லாமிய அறிஞர்கள் பற்றிய கருத்தோட்டங்கள் வெளிவந்தன. போலிஸ் செய்தியில் மஸாலா கலந்த சினிமாத்தனமான விமர்சனம் வந்தது. புதில் கொடுக்க ஏற்ற விதத்தில் அவையில்லை. புதிய கலாச்சாரத்தின் விரிவான விமர்சனத்திற்கு பதில் கொடுக்க வேண்டி இருந்தாலும் அதற்குரிய சூழ்நிலையை இறைவன் அன்று ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இன்று ஒரு உலகளாவிய வலைமனை வாய்ப்பை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதால் இந்த புத்தகத்தின் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கலாம் என்று நாடியுள்ளோம். அதன் முதல் படியாக நாம் எழுதிய புத்தகத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். மிக நிதானமாகவும், ஆழமாகவும் இதைப்படியுங்கள். இதன் பின்னர் புதிய கலாச்சாரத்தின் விமர்சனம் முழுவதும் வெளியிடப்பட்டு அதன் பின்னர் அதற்குரிய விளக்கத் தொடர் வரும் இன்ஷா அல்லாஹ் ஜீ, என்)

என்னுரை:

கடந்த 1415 வருடங்களாக இஸ்லாம் தமது செழிமையான வாழ்க்கைத் திட்டத்தை மனித இனம் முழுமைக்கும் சொல்லி வந்து கொண்டிருக்கின்றன. பரந்த தன்மையுள்ள, அறிவுப்பூர்வமான வாதங்கள் அதில் அடங்கியுள்ளன. ஒரு சில பிரச்சனைகளில் அதன் அணுகு முறை ஒரு சிலருக்குப் புரியாததால், அவர்களுக்குப் புரிய வைக்கப்படாததால் அவ்வப்போது இஸ்லாத்தை அதன் தனித்தன்மையான வாதங்களைக் குறை கூறி வருவது அவர்களின் வழக்கம். இது ஒரு புறம்..

இன்னொருபுறம்.. செழிப்பான இஸ்லாத்தை குறை கூறி, தவறாக விமர்சித்தால் பேரும் புகழும் எடுக்கலாம், பத்திரிக்கை எழுதினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையால் பத்திரிக்கையில் எழுதி, எழுதியவர்களே அசிங்கப்பட்டு போவது மறுபுறம்.

இரண்டாம் முறைதான் மக்கள் மத்தியில் சாதக, பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு பிரட்சனைதான் தஸ்லிமா நஸ்ரினுடையது. தஸ்லிமா ஏற்கனவே அடிக்கடி மனநிலை மாறக் கூடியவர் என்று அவரே கூறியுள்ளார். செக்ஸ் வாழ்க்கையில் பல விதத்தில் பலருடன் இன்பம் அனுபவிப்பதை விரும்பியும், பிறரையும் அதற்காகவே தூண்டியவரும்தான் இந்த தஸ்லிமா.

‘ஆண்களைப் பலாத்காரப் படுத்துங்கள்’ என்று ஒரு பெண் தன்னைப் போன்ற பெண்களிடம் கூறுகிறார் என்றால் அதற்கு மேல் அவர் நிலையைப் புரிய வைக்க வேண்டிய தேவையே இல்லை. செக்ஸ் புலவராக அல்லது மஞ்சள் பத்திரிக்கையாளராக தஸ்லிமா தன்னை பகிரங்கப்படுத்தி இருந்தால், இந்த அளவு சர்ச்சை இல்லாமல் இன்னும் உயர்மட்ட வாழ்விற்குச் சென்றிருப்பார்.

ஆனால் அவரின் துரதிருஷ்டம் இஸ்லாத்தை இடித்துரைத்து விட்டார். விளைவு குறி தவறூத இஸ்லாமிய பேனாக்களின் தாக்குதலில் தஸ்லிமா திணறி போய்விட்டார் என்பது உண்மைதான். அதை அவரே கூறியுள்ளார். அவரைப் பற்றிய விமர்சனம் அல்ல இந்த கட்டுரை. அது நமக்குத் தேவையுமல்ல. அதே சமயம் தஸ்லிமாவிற்கு மரண தண்டனை கொடுப்பதை நாம் ஏற்கவில்லை. இஸ்லாமிய அடிப்படையையும் ஏற்கவில்லை. கருத்து சுதந்திரத்தைப் பறித்து, குரல்வளையை நெறிக்கும் பங்களாதேஷ் ஜமாத்தே இஸ்லாமியின் கட்டளையை குர்ஆன், ஹதீஸ் ஏற்கவில்லை. யார் யாருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றதோ அதில் தஸ்லிமா போன்ற கோழி குஞ்சுகள் அடங்கமாட்டார்கள்.

தஸ்லிமாக்களின் குற்ற வீச்சுக்களுக்கெல்லாம் அறிவிப்பூர்வமான விளக்கம் கொடுப்பதுதான் அறிஞர்களின் அழகு. மரண தண்டனை அத்துமீறல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தஸ்லிமாவிற்கு தாளம் போட்டு களத்தில் இறங்கி இஸ்லாத்தை விமர்சிக்கும் எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் இந்த இதழில் பதில் உண்டு.

பழங்கால கதைகள், இலக்கியங்களில் பெண்கள் எவ்வாறெல்லாம் இழிவுப் படுத்தப்பட்டார்கள் என்பது இதில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

சமயங்களைச் சாராதவர்கள், ‘சோஷலிஸமாக ஆணும், பெண்ணும் வாழ சம உரிமை வேண்டும்’ என்று வாதிக்கும் வாதத்தில் பெண்களுக்கு எவ்வளவு பெரிய அழிவு ஏற்படுகிறது, இன்னும் காத்திருக்கிறது என்பது ஆணித்தரமாக உணர்த்தப்பட்டுள்ளது.

இஸ்லாம் பெண்களுக்கு உரிமை கொடுக்கவில்லை! அடிமைப் படுத்துகிறது என்ற வாதங்களில் உள்ள ஓட்டைகள் அறியாமைகள் கிழித்தெறியப்பட்டுள்ளது.

பர்தாவின்(புர்கா) நன்மை, அதனால் ஏற்படும் சிறப்புகள் அறிவுப்பூர்வமாக எழுதப்பட்டுள்ளன.

ஆண்கள் கையில் தலாக் கொடுக்கப்பட்டுள்ளதால் பெண் உரிமை பறி போகிறதா? என்பதையும், தலாக் உரிமை கொடுக்கப்படாவிட்டால் பெண்களுக்கு என்ன நேரும் என்பதையும் எதார்த்தத்தைக் கொண்டு விளக்கியுள்ளேன்.

ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலாக் உரிமை போன்றே பெண்களுக்கும் தலாக் உரிமை கொடுக்கப்பட்டுள்ளதை ஆதார அடிப்படையில் அலசி கூறியுள்ளோம்.

பெண்ணுரிமை பிரச்சனை இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான அல்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலேயே அலசப்பட்டுள்ளதே தவிர, வேறு எவருடைய தனிப்பட்ட கருத்தையும் ஆதாரமாக எடுக்கவில்லை. இதில் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களில் ஏதும் தவறு ஏற்பட்டால் அதற்கு நானே பொறுப்பாகும்.

நக்கீரன் இதழை கண்டதும் உடனடியாக மறுப்பு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து களத்தில் இறங்கி உழைத்த நண்பர்களின் ஒத்துழைப்பு என்றும் மறக்க முடியாதது. பொருளாதார உதவி செய்தவர்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக.

இந்த வெளியீடு பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்கள், டாக்டர்கள், கவிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், இளநிலை, முதுநிலை கல்வி மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் எல்லோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. நடுநிலையோடு இதை அணுகுபவர்கள் இஸ்லாத்தின் பெண்ணுரிமையின் சிறப்பை உணரலாம்.

இந்த வெளியீடு சம்மந்தமான விமர்சனங்கள், சாதக பாதகக் கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் வரவேற்கிறோம்.

ஜி.நிஜாமுத்தீன் (பரங்கிப்பேட்டை)

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger