Wednesday, April 6, 2011

நபிக்கு சூனியமா?

பில்லி சூனியம் உண்டு என்ற நம்பிக்கை முஸ்லிம்களில் பெரும்பாலோரிடம் அழுத்தமாக இருப்பதற்குறிய காரணஙங்களில் ஒன்று நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு-அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது-என்ற ஹதீஸ்கள் மற்றும் விளக்கவுரைகள் வழியாக வரும் செய்திகளேயாகும்

ஆழ்ந்த திறனாய்வு செய்து - எதையும் குர்ஆனுடன் ஒப்பிட்டு விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் நபி(ஸல்) அவர்கள் பற்றி வரும் செய்திகளை முன்னிருத்தியே தமது சூனியம் பற்றிய நம்பிக்கையை அழுத்தமாக்கிக் கொள்கிறார்கள். இந்த நம்பிக்கையின் விளைவுகளைப் பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. மிக சில அறிஞர்களே இது குறித்து மாறுபட்ட கருத்துக் கொண்டுள்ளார்கள்.

எனவே இதுபற்றி ஒரு தெளிவான விளக்கத்தை தமிழ் முஸ்லிம் சமூகத்திடம் கொண்டுப்போக கடமைப்பட்டுள்ளோம்.

சூனியம் உண்டா..இல்லையா என்பது பற்றி நாம் இந்த கட்டுரையில் அலசவில்லை. இறைத்தூதருக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்பலாமா..என்பது மட்டுமே ஆய்வின் நோக்கம்..

இந்தப் பிரச்சனையை நாம் அலச துவங்கும் போது முதலில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். செய்தி வழியாக வரும் தகவல்கள் மட்டுமே இந்த நம்பிக்கையை முஸ்லிம்களிடம் விதைத்துள்ளது. தலைமுறைகளை கடந்து வரக்கூடிய செய்திகளாக இருந்தாலும் அதை பரிசீலிக்கும் உரைக்கல்லாக குர்ஆன் நம்மிடம் உள்ளது.

தீய விளைவுகளை-இறை நம்பிக்கையில் பலவீனங்களை-முரண்பாடுகளை சொல்லும் எந்த செய்தியையும் முதலில் குர்ஆனில்தான் உரசிப் பார்க்க வேண்டும்.. அடுத்தக்கட்டமாக தான் ஆட்களை பற்றிய ஆய்வை மேற்கொண்டு செய்திகளை-அதாவது ஹதீஸ்களை-தரம் பிரிக்கலாம். இஸ்லாத்தை விளங்கும் எல்லா விஷயங்களுக்கும் இதைத்தான் பொது அடிப்படையாக கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது சம்பந்தமாக குர்ஆனில் நேரடியாகவோ - மறைமுகமாகவோ ஒரு சின்னஞ்சிறிய அறிவிப்புக்கூட இல்லை. மாறாக மறுக்கும் வசனங்கள் உள்ளன. அதை பார்க்குமுன் நபி-ஸல்-அவர்களின் நிலைப்பற்றி நாம் ஒரு தெளிவான முடிவுக்கு-ஆதாரங்களின் அடிப்படையில்-வரவேண்டும். கரு உருவானது - பிறந்தது - வளர்ந்தது- பசி - உறக்கம ;- தாகம் - இயற்கைத்தேவைகள்- உடல் சார்ந்த உணர்வுகள் இது எல்லாமும் எல்லா மனிதர்களுக்கும் இருப்பது போன்றுதான் நபி-ஸல்- அவர்களுக்கும் இருந்தது.

'(நபியே) நீர் கூறும் நிச்சயமாக நான் உங்களை போன்ற ஒரு மனிதனே..' (அல்குர்ஆன்-18:110)

இந்த வசனத்திலிருந்து நாம் மேலே சொன்ன கருத்து தெளிவாகிறது. எல்லா மனிதர்களையும் போன்ற இயல்புடையவர்களாக நபி-ஸல்- இருந்தாலும் ஒரு விஷயத்தில் எவரும் நெருங்க முடியாத சிகரத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள் அதுதான் இறைத்தூதர் என்ற முத்திரையான பொறுப்பு. தன் பொருப்பைப்பற்றி அதே வசனத்தில் வினக்க சொல்கிறான் இறைவன்.

'உங்களுடைய நாயன் ஒருவன்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது..' (அல் குர்ஆன்--18:110)

இறைத்தூதர் என்ற பொறுப்பை ஏற்ற பிறகு சராசரியான மனித சிந்தனா ஓட்டத்திலிருந்து பெரும் வேறுபாட்டை சந்தித்தார்கள் முஹம்மத்-ஸல்- அவர்கள். அவர்களின் உடல் சார்ந்த இயக்கம் சராசரியான மனித தன்மையுடன் ஒத்திருந்தாலும் பல நேரங்களில் பலவீனப்பட்டுப் போனாலும் இறை செய்தியின் தொடர்புடன் இருந்த அவர்களின் சிந்தனை சக்தி பலவீனத்தின் வாடையைக்கூட நுகராமல் பெரும் புரட்சி செய்து கொண்டிருந்தது. இந்த புரட்சியால் ஏற்படத் துவங்கிய சமூக மாற்றங்கள் எதிர்ப்பாளர்;களை நிலை குலைய வைத்தது

முஹம்மதால் ஏற்படும் இந்த சமூக மாற்றத்தை (எதிரிகளின் வார்த்தையில் சொல்வதானால் சமூக சீரழிவை) தடுப்பதற்கு எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட சதி வேலைகளில் நபி-ஸல்-உடல் ரீதியாக சில துன்பத்திற்கு இலக்காக்கப்பட்டார்கள். எதிரிகளின் எத்தகைய திட்டங்களும் நபி-ஸல்- அவர்களின் இறைப்பணியில் எந்தவித குறுக்கீடும் செய்யவில்லை-செய்ய முடியவில்லை.

இதற்கு காரணம் இருக்கவே செய்கிறது.

'(நபியே) நிச்சயமாக நீர் நமது கண்காணிப்பில் இருக்கிறீர்..' (அல் குர்ஆன்.52:48)

தூதுத்துவ பணி முஹம்மத் -ஸல்-மீது சுமத்தப்பட்டது முதல் அவர்கள் இறைவனின் நேரடி கண்காணிப்பில் இணைந்து விட்டார்கள். இதன் அர்த்தம், எந்த பணியிலிருந்து நபி-ஸல்- அவர்களை திருப்பிவிட வேண்டும் என்று எதிரிகள் திட்டம் தீட்டினார்களோ அந்த திட்டங்களில் எதுவம் பலனளிக்கப் போவதில்லை காரணம் இறைவனின் நேரடி கண்காணிப்பு. இப்போது சிந்திப்போம்,

மதீனாவில் வாழ்ந்த லபீத் பின் அஸ்லம் என்ற யூதன் நபி-ஸல்-அவர்களுக்கு சூனியம் செய்ததாக சில ஹதீஸ்கள்-சில விரிவுரைகள் கூறுகின்றன். யூதர்களின் தில்லுமுல்லுகள் திருக்குர்ஆன் மூலம் தோலுரித்துக் காட்டப்படுவதை சகித்துக் கொள்ள முடியாத யூத சக்தி இப்படி ஒரு திட்டத்தை நம்பி செய்திருக்கலாம். இதன் மூலம் நபி-ஸல்-அவர்களின் சிந்தனை ஓட்டத்தை செய்தி வெளிபாடுகளை தடுக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். இப்படி நடந்தது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் இது நபி-ஸல்- அவர்களிடம் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்க முடியாது ஏனெனில் சிந்தனை ரீதியில் அவர்களின் பணியில் எத்தகைய இடையூறும் ஏற்படாத வண்ணம் இறைவன் அவர்களை கண்காணித்து வந்துள்ளான்.

ஹதீஸ்கள் கூறுவது போன்று நபி-ஸல்- அவர்களுக்கு சூனியத்தின் தாக்கம் ஏற்பட்டு நடக்காததை நடந்ததாகவும், செய்யாததை செய்ததாகவும் சொன்னார்கள் என்பது உண்மையானால் அந்த நேரங்களில் இறைவனின் கண்காணிப்பு தளர்த்தப்பட்டு சிந்தனை ஓட்டத்தில் ஷைத்தானின் இடையூறு ஏற்பட்டு விட்டது என்று பொருள்படும் எந்த நேரமும் இறை செய்தியின் வெளிப்பாட்டை எதிர்பார்த்திருந்த நபி-ஸல்- அவர்களுக்கு சூனியத்தின் தாக்கம் ஏற்பட்டது என்று நம்புவது அவர்கள் கொண்டுவந்த வஹியில் கூட சந்தேகத்தை ஏற்படுத்தி விடலாம்.

செய்யாததை செய்ததாக - நடக்காததை நடந்ததாக சொல்லும் நிலை இறைத்தூதருக்கு ஏற்பட்டிருந்தால் அந்த நேரங்களின் மனக்குழப்பத்திலிருந்து வஹியை பிரித்தறிவித்திருக்க முடியாது. ஏனெனில் குழப்பத்திற்கு ஆட்பட்ட இதயம்-ஆட்படாத இதயம் என்று இறைவன் எந்த மனிதருக்கும்--நபிமார்கள் உட்பட--ஏற்படுத்தவில்லை

'எந்த மனிதருக்குள்ளேயும் இறைவன் இரண்டு இதயங்களை ஏற்படுத்தவில்லை..' (அல் குர்ஆன்,33:4)

இதிலிருந்து நபி-ஸல்-அவர்களுக்கு துளியும் சூனிய தாக்கம் நிகழவில்லை என்பதை விளங்கலாம்.

நாம் இந்த சூனியக்கதையை மறுப்பதற்குரிய அடுத்தக் காரணம்:

நபி-ஸல்- அவர்களின் தூதுத்துவத்தை உலகம் முழுவதுக்குமாக மிக விரிந்த நிலை யில் இறைவன் ஏற்படுத்தினான்.

நாடு-இனம்-மொழி-எல்லாவற்றையும் கடந்துப் போகக்கூடிய சத்திய அழைப்பும்--சத்திய அழைப்பாளரும் மிக எச்சரிக்கை உணர்வோடு செயலாற்றி இருக்க வேண்டும். உலகம் முழுமைக்கும் இனி வரும் காலாகாலத்திற்கும் இந்த அழைப்பும்-அந்த அழைப்பாளரும் தான் வழிகாட்டிகள் என்று பிரகடனப் படுத்தும்போது அது எத்துனை புனிதத்துவம் வாய்ந்த பிரகடனம் என்பதை கண்டு மெய் சிலிர்க்கலாம். இப்படிப்பட்ட அழைப்பையும் அழைப்பாளரையும் ஒப்பு நோக்கும் போது அழைப்பில் குழப்பம் ஏற்படவில்லை ஆனால் அழைப்பாளரிடம் சூனியத்தால் குழப்பம் ஏற்பட்டது என்று கூறினால் அதை எந்த அறிவாளியால்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

ஒருவன் எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் அவனுக்கு மன குழப்பம் ஏற்பட்ட நேரங்களில் பிறருக்கு - சமூகத்திற்கு பயன்படும் எந்த முக்கிய நிகழ்ச்சியிலும் அவரை சாட்சியாளராக கொண்டு வர மாட்டோம். திருமணத்திற்குறிய சாட்சி, கொடுக்கல் வாங்களுக்குறிய சாட்சி, சமூக நல திட்டங்களுக்கான சாட்சி எதிலும் அவர் இடம்பெற மாட்டார். ஏனெனில் அவர் அந்த சந்தர்ப்பங்களில் மன குழப்பக்காரர்.

இப்போது சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மிக,மிக சாதாரண விஷயஙகளுக்குக் கூட மனக் குழப்பக்காரர் சாட்சியாளராக மாட்டார் எனும் போது மொத்த உலகுக்கும் வழி காட்டி என்று சொல்லப்பட்டவருக்கு மன குழப்பம் ஏற்பட்டால் அவரை எப்படி சாட்சியாளராக்க முடியும்?.

'(நபியே) நாம் உம்மை சாட்சியாளராகவும்............ஆக்கி இருக்கிறோம்.' (அல் குர்ஆன்,33:45-48:8)

இறைவனால் சாட்சியாளராக ஆக்கப்பட்ட ஒருவருக்கு சூனியத்தால் மன குழப்பம் ஏற்படுமா...?

நாம் மறுப்பதற்குரிய அடுத்தக் காரணம்:

சூனிய நிவாரணத்துக்கு இறக்கப்பட்டதாக கருதப்படும் சூராக்களின் கருத்துரைகள் மற்றும் வரலாறு.

நபி-ஸல்- அவர்களக்கு சூனிய நிவாரணியாக சூரத்துந்நாஸ்-சூரத்துல் ஃபலக் ஆகிய இரண்டு அத்தியாயங்கள் மதீனாவில் இறங்கியதாக சில அறிவிப்புகள் கூறுகின்றன. ஆனால் பெரும்பாலோர் இவை மக்காவில் இறங்கியதாகவே கருதுகிறார்கள். சூனியத்திற்காக இவை இறங்கியதென்றால் அதன் வரலாறு சந்தேகமற தெளிவாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை மாறாக வரலாற்றிலும் சூனியநிலை-குழப்ப நிலையே உள்ளது. இதையும் கவனத்தில் வைப்போம்.

-முஅவ்விதைன்-என்று போற்றப்படக் கூடிய அந்த இரண்டு அத்தியாயங்களின் கருத்துரைகள் கூட சூனியம் பற்றி தெளிவாக பேசவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

1) நீர் கூறும், மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்பு தேடுகிறேன்

2) அவனே மனிதர்களின் அரசன்

3) அவனே மனிதர்களின் நாயன்

4) பதுங்கி இருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்பு வேண்டுகிறேன்)

5)அவன் மனித உள்ளங்களில் தேவையில்லாத சந்தேகங்களை போடுகிறான்

6)(இத்தகய சதிகாரர்கள்)மனிதர்களிலும்-ஜின்களிலும் உள்ளனர். (அல் குர்ஆன்,114 வது அத்தியாயம்)

7)நீர் கூறும் அதி காலையின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்

8)அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்

9)இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்

10)முடுச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்

11)பொறாமைக்காரன் பொறாமைக் கொள்ளும் போது ஏற்படும் தீங்கை விட்டும் (இறைவா உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்)

பதினோரு வசனங்களைக் கொண்ட இந்த இரு அத்தியாயங்களில் எங்காவது சூனியம் பற்றி பேசியுள்ளதா..? எங்குமே இல்லை.

10வது வசனத்தில் முடுச்சுகளில் ஊதுவது சூனியம் பற்றியது தானே..என்று எவராவது எண்ணலாம். எனவே அதுபற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.

உண்மையில் 10 வது வசனம் சூனியம் பற்றி பேசுவதாக இருந்தால்-நபி-ஸல்- அவர்களுக்கு சூனியம் செய்தவன் ஆண் என்று செய்திகளில் கூறப்படுவதால்-இறைவன் ஆண்பாலிலேயே அதை சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். மாறாக முடுச்சுக்களில் ஊதும் பெண்கள் என்கிறான் இறைவன். யாருடைய சதிக்கு எதிராக இறை வசனம் இறங்குகிறதோ அவர்களை முன்னிலைப் படுத்தியே இறைவசனம் பேசும்.(அபுலஹப்-பிர்அவ்ன் போன்றவர்களை அடையாளங்காட்டும் வசனங்களை இதற்கு உதாரணமாக்கலாம்)

மனங்களை தடுமாறச் செய்யும் சூனியம் பற்றி இந்த வசனம் பேசினால் அந்த பெரும் கெடுதியாளனை (அதாவது ஆண்பாலில்) சுட்டி இருக்கும் வசனம். அப்படி இல்லாமல் முடுச்சுக்களில் ஊதும் பெண்கள் என்று இறைவன் கூறுவதால் வேறு ஏதோ அதில் உள்ளது என்பதை புரியலாம்.

இதை விளங்கவோ-புரியவோ பெரிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை.
குடும்பங்கள் பிளவுபட்டு, சொந்த பந்தங்கள் பிரிந்து, மன குழப்பங்கள் - சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு பெண்களின் குசு-குசு பேச்சே அதிக பங்கு வகிக்கின்றது. தலையணை மந்திரம்-முந்தானை முடுச்சு என்றெல்லாம் இந்த பேச்சுக்களுக்கு புனைப் பெயர் உண்டு. இந்த சிக்கல் பெண்களின் தரப்பிலிருந்து வருவதால் முடுச்சுக்களில் ஊதும் பெண்கள் என்கிறான் இறைவன். இது ஒவ்வொரு குடும்பத்திலும் நடப்பதால் சமாதான வாழ்வை விரும்புவோர் இதிலிருந்து கட்டாயம் பாதுகாப்புத் தேட வேண்டும்.

பெண்களிடம் இருக்கும் அந்த இயல்புக்குரிய வார்த்தையை தான் இறைவன் இங்கு பயன் படுத்தியுள்ளான்.

10 வது வசனமில்லாமல் வேற எந்த வசனமும் சூனியம் பற்றி பேசவில்லை.10வது வசனமும் இதைப்பற்றி பேசவில்லை என்பதை இப்போது விளங்கி இருக்கலாம்.

எனவே பொதுவாக எல்லா கெடுதிகளிலிருந்தும் பாதுகாப்பு தேடும் முகமாகவே இந்த அத்தியாயங்கள் இறக்கிவைக்கப்பட்டுள்ளன என்பதை புரிந்துக் கொள்ளலாம். குர்ஆனில் பரவலாக பிரார்த்தனைகள் இடம் பெறுகின்றன. அதே அடிப்படையில் தனி பிரார்த்தனைகளாக இல்லாமல் பிரார்த்தனைக்குறிய அத்தியாயங்களாகவே இவை அமைந்துள்ளன. மாறாக சூனியத்திற்காக இறக்கப்படவில்லை.

நாம் மறுப்பதற்குரிய அடுத்தக்காரணம்:

சூரத்துல் ஃபுர்கான் 25 வது அத்தியாயத்தின் 8-9 வது வசனங்கள்.

'சூனியம் செய்யப்பட்ட ஓரு மனிதரையேயன்றி வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்று அநியாயக்காரர்கள் கூறுகிறார்கள் (25:8)

நபி-ஸல்- அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களை நோக்கி சூனியம் செய்யப் பட்டவரை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று சொல்லப்பட்டது.

இதற்கு இறைவனின் பதில் என்ன..?

'(நபியே) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை கூறுகிறார்கள் என்று பாரும். அவர்கள் வழி கெட்டுப்போய் விட்டார்கள். நல் வழியை காண சக்தி பெற மாட்டார்கள்.' (25:9)

நபி-ஸல்- அவர்களுக்கு செய்யப்படாத- தாக்ககத்தை ஏற்படுத்தாத ஒரு பொய்யை எதிரிகள் உதாரணமாக்கியதை இறைவன் எடுத்துக்காட்டி அவர்களை வழி கேடர்கள் அநியாயக்காரரர்கள் என்கிறான். 'நபியே நீர் கவனியும்' என்று நேரடியாக நபியை தூண்டுவதிலிருந்தே இது பற்றிய எல்லாமும் கதை தான் என்பது தெளிவாகிறது

நபி-ஸல்- அவர்களுக்கு கவிதை பற்றித் தெரியாது. ஆனாலும் எதிரிகள் கவிஞர் என்று பெயர் சூட்டினார்கள். அதேபோன்றுதான் சூனியம் எதுவும் தீண்டாமல் இருக்கும் போதே சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகளால் பெயர் சூட்டப்பட்டார்கள். அந்த பொய்யுடைய தாக்கம் தான் சில ஹதீஸ்களிலும் விரிவுரைகளிலும் காணப்படுகின்றன.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger