Sunday, April 3, 2011

இந்த தொழில்கள் செய்யலாமா?

கேள்வி - நாங்கள் ஃபிரேம் பண்ணும் தொழில் செய்கிறோம். மாற்று மதத்தவர்கள் வழிப்படும் போட்டோக்கள் ஃப்ரேம் பண்ண வரும்போது அவற்றை செய்து கொடுக்கலாமா? செய்ய முடியாது என்று மறுத்தால் மற்ற ஆர்டர்கள் கிடைக்க வழியில்லாமல் போகும் இதற்கான விளக்கத்தை ஆதாரத்தோடு கூறவும்? இலங்கையிலிருந்து ரிஸ்வான் - ஹாட் காம் வழியாக.

கேள்வி - நான் இன்டர்நெட்; பிரவ்சிங் சென்டர் நடத்த எண்ணியபோது ஹலால், ஹராம் என்ற சந்தேகம் வருகிறது. ஏனெனில் இன்டர்நெட்; பிரவ்சிங் பயன்படுத்துபவர்களில் அனேகர் நிர்வாண படங்களை பார்க்கவே செல்கின்றனர். என் நண்பர்கள் சிலர் சொல்கின்றனர், 'வருபவர்கள் தவறான முறையில் பயன்படுத்தினால் அதற்கு நாம் பொறுப்பாக முடியுமா' என்று. சில விளக்கமும் தருகிறார்கள் அதாவது: நாம் கூர்மையா கத்தி  வியாபாரம் செய்கிறோம் சிலர் அதை சமையல் செய்ய பயன்படுதுகின்றனர், சிலர் அதை கொலை செய்யவும் பயன்படுதுகின்றனர் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது அல்லவா அதுபோல் தான் இதுவும் என்று வாதம் நடந்தது. எனக்கு இதற்கு தெளிவான பதில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் கொடுத்தால் நன்றாக இருக்கும். பயிஸ் - அப்துல் அளீம் - யாஹூ காம் வழியாக.

இவைப் பற்றி விரிவாக அலச வேண்டும். பொதுவாக இஸ்லாத்தில் மதிப்பு மிக்க உருவப்படங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த தடை ஃப்ரேம் பண்ணும் தொழிலைக் கட்டுப்படுத்துமா  என்பதை முதலில் விளங்குவோம்.

யாரேனும் உருவப்படம் வரைந்தால் அவன் வரைந்தவற்றிற்கு உயிரளிக்கும் வரை இறைவன் அவனை தொடர்ந்து வேதனை செய்வான் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (அப்பாஸ் (ரலி), புகாரி,நஸயி)

உருவப்படம் வரையும் வேலையை (முஸ்லிம்) யாரேனும் செய்தால் அவர் முஹம்மதின் மீது இறக்கப்பட்ட (வேதத்)தை மறுக்கிறார் என்பது நபிமொழி. (அனஸ் (ரலி) அறிவிக்கும் இச்செய்தி அஹ்மதில் வருகிறது)

இந்த இரண்டு ஹதீஸும் ஓவியம் வரைவதைத் தடுக்கின்றன. 'வரைதல்' என்பது உருவத்தை வரைவதாகும். வரைவது, செதுக்குவது, மண்ணால் உருவாக்குவது அனைத்தும் இதில் அடங்கி விடும். ஆனால் இந்த ஹதீஸ்களை காட்டி ஃப்ரேம் பண்ணுவதை தடுக்க முடியாது. ஃப்ரேம் பண்ணுவது உருவத்தை உருவாக்குவது ஆகாது.  ஒரு வீட்டின் படத்தை ஃபிரேம் பண்ணினால் இந்த வீட்டை இவர் உருவாக்கியுள்ளார் என்று யாரும் கூற மாட்டோம். அதே போன்றுதான் படமும். 

வணங்கக்கூடிய படத்தையோ, வணங்கப்படாத உருவ படத்தையோ ஒருவர் ஃபிரேம் பண்ணும் போது இவர் இந்த உருவத்தை உருவாக்கியவர் என்று எவராலும் கூற முடியாது ஏனெனில் உருவாக்குதல் என்பதற்கான எந்த அடிப்படையும் இதில் இல்லை. வரைவது - செதுக்குவது - மண்ணால் வடிவமைப்பது போன்ற ஒரு சிற்பம் அதன் வடிவம் பெறுவதற்கான எந்த முயற்சியும் ஃபிரேம் பண்ணுவதில் இல்லை.

இஸ்லாம் அனுமதிக்கும் எவ்வளவோ தொழில்களில் நீங்கள் செய்யும் தொழிலும் அடங்கும். இது தீமைக்குத் துணைப் போவதா? என்பதை இறுதியில் பார்ப்போம்.

வியாபார ரீதியாக தடுக்கப்பட்டவற்றில் மதிப்பு மிக்க உருவச்சிலைகள், ஓவியங்கள் (உதாரணமாக மதிப்பு மிக்க தலைவர்கள், பெரியார்களாக கருதப்படுபவர்களின் ஓவியங்கள், புகைப்படங்கள்) அடங்கும்.

மதிப்பு மரியாதையற்ற உருவங்கள், ஓவியங்கள் விற்க மார்க்க ரீதியாக தடை இல்லை.

அபூதாவுதில் ஆய்ஷா (ரலி) மூலம் வரும் ஹதீஸில், ஆய்ஷா(ரலி) அவர்கள் குதிரை பொம்மை உட்பட பல பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த நபி (ஸல்) 'ஆய்ஷாவே இது என்ன? என்றார்கள். நான் இது என் பொம்மைகள் என்று கூறினேன். அதோ பார்! குதிரை பொம்மை மீது என்ன இறக்கைகள்? எனக்கேட்டார்கள். சுலைமான் நபியிடம் இருந்த குதிரைக்கு சிறகுகள் இருந்ததே அதை நீங்கள் அறியவில்லையா? ஏன்று நான் கேட்டேன், உடனே நபி (ஸல்) கடவாய் பற்கள் தெரிய சிரித்தார்கள்'. என்ற சம்பவம் வந்துள்ளது.

உருவங்களுடைய பொம்மைகளை வைத்து விளையாடியதை கண்ட நபி (ஸல்) இதை செய்தது யார்? விற்றது யார்? எங்கிருந்து வாங்கினாய்? என்றெல்லாம் கேட்காமல், சிரிப்பின் மூலம் அங்கிகாரம் அளித்ததிலிருந்து இப்படிப்பட்ட விளையாட்டுப் பொருட்களை விற்பதற்கு தடை இல்லை என்பதை உணரலாம்.

மதிப்புள்ள, வணங்கப்படக்கூடிய சிலைகளை விற்பதற்கு தெளிவான தடையுள்ளது.

மதுபானத்தையும், செத்தவற்றையும், பன்றியையும், சிலைகளை விற்பதையும் அல்லாஹ் தடுத்து விட்டான் என்று மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) கூறினார்கள். ஜாபிர் (ரலி) மூலமாக இச்செய்தி புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயி ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளன.

பிற மதத்தவர்கள் வணங்கும் சிலைகள் பொறிக்கப்பட்ட தங்கம் மற்றும் ஐம்பொண் டாலர்கள் போன்றவற்றை விற்பனை செய்யக் கூடாது. இதற்கு காரணம் விற்பவர்கள் அதை உருவாக்குகிறார்கள் என்பதற்காக அல்ல. மாறாக சிலை வடிவம் விற்பனை செய்யப்படக் கூடாது என்ற மேற்கண்ட ஹதீஸேயாகும்.

வியாபாரத்தில் இஸ்லாத்தின் அளவுகோல் இது.

தொழில் ரீதியாக அல்லாமல் வியாபார ரீதியாக மாற்று மதத்தவர்களால், அல்லது முஸ்லிம்களால் மதிப்புமிக்கதாக கருதப்படும் சிலைகளின், பெரியார்களின், தர்காக்களின் படங்களை விலைக்கு வாங்கி ஃபிரேம் செய்து அதிக விலைக்கு விற்றால் அதுவும் குற்றமாகும்.

சிலை விற்பனைக்கு தடை வந்துள்ளது. சிலைகளை வைத்து வணங்கினாலும், படங்களை வைத்து வணங்கினாலும் இறைவனுக்கு இணை வைத்தல் என்ற செயல் ஏற்படுகிறது. செயலைக் காரணங்காட்டி இவை தடுக்கப்பட்டுள்ளதே தவிர வடிவத்தை காரணம் காட்டி அல்ல.

இனி, தொழில் ரீதியாக மதிப்புமிக்கவைகளை ஃப்ரேம் செய்து கொடுக்கலாமா? என்பதை அலசுவோம்.

மனதில் ஊசலாட்டம் ஏற்படக்கூடிய காரியம் இது. செய்யலாமா கூடாதா என்ற சந்தேகம் வலுப்பெறும் போது தவிர்த்துக் கொள்ளும் வழிகள் இருந்தால் அதை கடைப்பிடித்து விடலாம். சந்தேகமற்ற நிலையில் இருக்கும் போது சில நிபந்தனைகளுடன் இவற்றை ஃப்ரேம் செய்தால் அதை தடுக்க எந்த முகாந்திரமும் இல்லை.

ஃப்ரேம் செய்யப்படும் பொருள் அந்த தொழிலில் உள்ளவரை பொருத்தவரை எந்த மதிப்பையும் மரியாதையும் பெறாவிட்டால் அதை ஃப்ரேம் பண்ணலாம். உதாரணமாக ஒரு இயற்கை காட்சியை எந்த கோணத்தில், எண்ணத்தில் ஃப்ரேம் செய்கிறோமோ அதே கோணமும், எண்ணமும் இங்கே இருக்க வேண்டும்.

இது மதிப்பிற்குரிய படமாயிற்றே! மாற்று மதத்தவர்களின் தெய்வமாயிற்றே! என்ற மதிப்புமிக்க சிந்தனை அவரை ஆட்படுத்தக் கூடாது. ஒரு 'பூ' வின் வரைப்படத்தை எப்படி சாதாரணமாகக் கையாளுவோமோ அதே பாணியில்தான் இதுவும் இருக்க வேண்டும். தொழில் என்ற சிந்தனை மட்டுமே இருக்க வேண்டுமே தவிர வணங்கப்படுபவை வணங்கப்படாதவை என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. இந்த கோணத்திலிருப்பின் அவைகளை அனுமதிக்கலாம்.

இன்னும் தெளிவாக புரிய வைப்போம்.

ஒரு 'பூ' வியாபாரி தொழில் ரீதியாக அதை விற்கும் போது இந்த பூ தலையில் வைக்க வாங்கப்படுகிறதா? சிலைக்குப்போட வாங்கப்படுகிறதா? என்று சிந்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. சிலைக்கு போடுவதற்காகவே வாங்கப்பட்டாலும் அதற்கு 'பூ' வியாபாரி பொறுப்புதாரியாக மாட்டார்.  ''கோயில் கட்டுவதற்காக''; சிமெண்ட், கற்கள் வாங்கப்படும் போது சிமண்ட் வியாபாரியோ, ''சாமிக்கு உடைப்பதற்காக'' தேங்காய் வாங்கினால் தேங்காய் வியாபாரியோ அதற்கு பொறுப்பேற்க மாட்டார்கள். ஏனெனில் இங்கு விற்கப்படும் பொருள் இஸ்லாத்திற்கு உட்பட்டவையாக இருக்கும் போது அதை விற்பவர் தான் விற்ற பொருளின் பயன்பாட்டை குறித்து அலட்டிக் கொள்வதை தொழில் ஒழுங்குகளாக இஸ்லாம் சொல்லவில்லை.

ஒரு பொருள் போய் சேரக்கூடிய இடம், அது பயன்படுத்தும் முறை இவற்றை கருத்தில் கொண்டு வியாபாரம் அல்லது தொழில் செய்ய இஸ்லாம் கூறவில்லை.

பதிவுப்பத்திரங்கள் அல்லது சட்டரீதியான படிவங்கள் மற்றும் கடிதங்கள் எழுதுவதை தொழிலாக கொண்ட எழுத்தர் ஒருவரிடம் மாற்றுமதத்தவர் வந்து 'முருகன் துணை' என்று ஆரம்பிக்கச் சொன்னால் தொழில் அடிப்படையில் அதை செய்யலாம்;. இதே அளவுகோலைதான் மதிப்புமிக்க படங்களை ஃப்ரேம் பண்ணுவதற்கும் எடுக்க வேண்டும்.

பிரவ்ஸிங் சென்டருக்கும் இதே அளவுகோல் தான். இன்டர் நெட் கபே என்பது முழுக்க, முழுக்க தீமைகள் வந்திறங்கும் ஷைத்தானிய தளங்கள் அல்ல. கம்ப்யூட்டரும், அதன் வழியாக நாம் தொடர்பு கொள்ளும் இணையத் தளங்களும் ஒரு குட்டி உலகத்திற்கு ஒப்பானதாகும். அதில் திறக்கப்படும் வாசலை பொருத்துதான் அது நன்மையாகவோ - தீமையாகவோ மாறுகிறது. அங்கு வரும் அனைவரும் தீமையின் வாசலை திறப்பதற்காக வருவதில்லை. சிலரோ, பலரோ அந்த காரியத்தை செய்கிறார்கள் என்றால் அதற்கு இன்டர்நெட் கபே நடத்துபவர்கள் பொறுப்புதாரியாக மாட்டார்கள். ஏனெனில் அதற்காக அவர்கள் பிரவ்ஸிங் சென்டர் நடத்தவில்லை. (ஒருவேலை அந்த நோக்கத்திற்காக யாராவது இந்த தொழிலை செய்தால் அது ஹராம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை)

இது போன்ற தொழில் பண்ணக்கூடாது என்பதற்கு சிலர் காட்டும் ஆதாரத்தை காண்போம்.

நன்மையிலும், பயபக்தியிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்ள வேண்டாம். (அல் குர்ஆன் 5:2)

இந்த வசனத்தில் பாவமான காரியங்களில் உதவி செய்தல் கூடாது என்று இறைவன் கூறும்போது சிலைப்படங்களை ஃப்ரேம் பண்ணி, பிரவ்ஸிங் சென்டர் நடத்தி பாவத்திற்கு துணைப்போவது முறையா? என்பது அவர்களின் கேள்வி.

இந்த இறைவசனத்தில் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 'உதவி செய்தல்'; என்பதன் பொருளை உணர்த்துவது அவசியமாகும். உதாரணத்தோடு விளக்குவோம்.

இஸ்லாம் நிரந்தர தர்மமாக கருதுவதில் மக்களின் தண்ணீர் தேவைக்காக கிணறு வெட்டுவதும் ஒன்றாகும். நீங்கள் தர்மம் செய்யும் நோக்கில் கிணறு வெட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கிணறு தோண்டுபவர்களை வேலைக்கு அமர்த்தி அதற்கான கூலியையும் கொடுத்து அவர்களிடம் வேலையும் வாங்குகிறீர்கள். இப்போது கூலிக்கு வேலை செய்யும் அவர்களை 'நன்மையில்உதவியவர்கள்' என்று கூற முடியமா? மாட்டோம். ஏனெனில் வேலைக்கான முழு கூலி அவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதால் நன்மையுடனோ, உதவி செய்தலுடனோ அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாமல் போய்விடுகிறது. அவர்கள் செய்தது அவர்களுடைய தொழில் மட்டும் தான்.

அதே சமயம் ''தர்மம் செய்வதற்காக இதை வெட்டுவதால் கூலியை கொஞ்சம் குறைத்துக் கொண்டுக் கொடுங்கள்''; என்று அவர்கள் கூறிவிட்டு வேலை செய்தால், அவர்களும் நன்மைக்கு உதவியாகக் கருதப்படுவார்கள். இதே அடிப்படைதான் தீமைக்கும் பொருந்தும்.

வீடு கட்ட சிமெண்ட் மூட்டை 200 ரூபாய் என்றும், கோயில்--சர்ச்--தர்கா போன்றவை கட்ட சிமெண்ட் 190 ரூபாய் என்றும் எவராவது விற்றால் நிச்சயம் அது தீமைக்கு உதவுவதாகும். இதற்கு இறைவனிடம் தண்டனை பெறுவார். சாதாரண படத்தை ஃபிரேம் பண்ண 20 ரூபாய் வாங்கிவிட்டு, மதிப்பு மிக்க படங்களுக்கு ரூ 15 வாங்கினால் அது தீமைக்கு உதவும் பெரிய குற்றமாகும்.

மற்றப்படங்களை ஃபிரேம் பண்ணும் கூலி போன்றே இதற்கும் பெற்றால் அது தொழில் தானே தவிர தீமைக்கு துணைப்போவதாக ஆகாது. இந்த அடிப்படையைதான் இறைவன் 5:2 வசனத்தில் கூறுகிறான். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்கும் போது ஃபிரேம் பண்ணி கொடுப்பது தவறில்லை என்று புரிந்துக் கொள்ளலாம். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger